அண்மையில் மறைந்த அந்திமழை இதழை நிறுவிய ஆசிரியர் ‘அந்திமழை’ இளங்கோவனின் நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில் நடைபெற்றது.
முன்னதாக அரங்கு நிறைந்த கூட்டத்தில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் தொடக்கத்தில் இளங்கோவன் தொகுத்து எழுதிய ‘அரசியல் கட்சிகளின் மரணம்’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு வெளியிட, எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், பாமரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் சில நிமிடங்கள் மட்டும் பேச வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்டனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த இளங்கோவன் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திவிட்டுப் பேசினார்கள்.
தமிழக அஞ்சல்துறை தலைவர் மருத்துவர் நடராஜன், தமிழக – புதுவை தலைமைக் கணக்காயர் மருத்துவர் கே.பி.ஆனந்த், பத்திரிகையாளர் ப.திருமாவேலன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, மூத்த பத்திரிகையாளர் ராவ், அமைச்சர் சிவசங்கர்,
மருத்துவர் என். கண்ணன் ஐ.ஜி., கார்ட்டூனிஸ்ட் மதன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், மருத்துவர் மாரியப்பன், எழுத்தாளர் பாமரன், எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி, இயக்குநர் ராசி. அழகப்பன், நீதிபதி சந்துரு, வழக்கறிஞர் சங்கர்,
திரை எழுத்தாளர் ஜா.தீபா, ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், ஓய்வுநிலை கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் மு. செந்தமிழ்ச்செல்வன், பத்திரிகையாளர் திருவேங்கிமலை சரவணன், சுந்தரபுத்தன், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார், இயக்குநர் கரு. பழனியப்பன் ஆகியோர் பேசினர்.
கால்நடை மருத்துவக் கல்லூரியில் அவருடன் பயின்ற சமகாலத் தோழர்கள், அந்திமழை பத்திரிகையை நடத்துவதற்கு அவர் செய்த முயற்சிகளையும், நண்பர்களை இலக்கியத்தின் பக்கம் ஆற்றுப்படுத்தியதையும் கூறி நெகிழ்ந்தனர்.
தன்னுடன் படித்த கல்லூரித் தோழர்களுடன் கடைசி வரை இளங்கோவன் தொடர்பில் இருந்தார் என்பதுடன், அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து உதவிக்கரம் நீட்டி உயர்த்திவிட்ட ஏணியாகவும் இருந்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்கள்.
அந்திமழை இளங்கோவன் குடும்பத்தின் சார்பில் பேசிய இளங்கோவனின் தம்பி மருத்துவர் கபிலன், சிறுபிராயத்தில் நடந்த பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
பள்ளியில் படிக்கும்போது ரஜினி ரசிகராக இருந்ததாகவும், நினைத்ததைச் சாதிக்கும் தீவிர எண்ணத்துடன் வளர்ந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில், நண்பர்களைப் போலவே குடும்பத்திலும் எந்தக் குறையும் அவர் வைக்கவில்லை என்று கண்ணீர்மல்கக் கூறினார் தம்பி மனைவி மீனா.
சமூக ஊடகங்களில் எழுதிவந்த நிலையில் தன்னை ஒரு பத்திரிகையில் எழுதச்செய்தவர் என அமைச்சர் சிவசங்கர் பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார்.
நினைவேந்தல் நிகழ்வில் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள், தாங்கள் எழுதுவதற்கு அந்திமழை இளங்கோவன் உந்துதலாகவும் உற்சாகமூட்டுபவராகவும் இருந்தார் என்பதை நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.
முன்னதாக, அந்திமழை இளங்கோவன் பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடிய, உரையாற்றிய நிகழ்வுகளும் அவரின் வாழ்க்கைக் கட்டங்களின் அரிய புகைப்படங்களும் அடங்கிய காணொலி திரையிடப்பட்டது.
எழுத்தாளர் சாரு நிவேதிதா, பாஸ்கர் சக்தி, பத்திரிகையாளர் மணா, கல்கி ப்ரியன், சிவராமன், முருகேஷ்பாபு, ரமேஷ் வைத்யா, இளையசெல்வன், பேராச்சி கண்ணன், இவள்பாரதி, ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி, புகைப்படக்கலைஞர் சிவபெருமாள், கவிஞர் தென்றல் உள்ளிட்ட பல இலக்கிய முகங்களும் பத்திரிகையாளர்களும் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.
அந்திமழை ஆசிரியர் என். அசோகன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், நிகழ்வை குறித்த நேரத்தில் தொடங்கி முடித்து மிகக் கச்சிதமாக ஒருங்கிணைத்திருந்தனர்.
– சுந்தரபுத்தன்