டபுள் இஸ்மார்ட் – டைட்டிலில் மட்டும்..!

தொண்ணூறுகளில் வெளியான ஹாலிவுட் கமர்ஷியல் திரைப்படங்களில் ஃபேஸ் ஆஃப், கூ ஆம் ஐ போன்ற திரைப்படங்கள் கதை சொல்லலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின. அதன் தாக்கத்தில் உலகம் முழுக்கப் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அது இன்று வரை தொடர்கிறது. அந்த வரிசையில், ஒருவரது மூளையில் இருக்கும் நினைவுகளை இன்னொருவருக்குச் செலுத்தி, குறிப்பிட்ட பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகக் கதை சொன்னது ‘இஸ்மார்ட் சங்கர்’ தெலுங்கு திரைப்படம். அதன் கதை சொல்லல் வழக்கத்தில் இருந்து கொஞ்சம் விலகி நின்று நம்மை ஈர்த்தது.

2019-ல் அப்படம் வெளியானது. பூரி ஜெகன்னாத் எழுத்தாக்கம் செய்து அதனை இயக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தற்போது அவர் ‘டபுள் இஸ்மார்ட்’ தந்திருக்கிறார். முதல் பாகம் போன்றே இதுவும் நம்மை ‘கமர்ஷியலாக’ அசத்துகிறதா?

வில்லன் வெர்சஸ் ஹீரோ!

நாயகன் ஊரில் இருக்கிற அத்தனை கெட்ட பழக்கங்கள், குணங்களைக் கொண்டிருந்தாலும் ‘டிப்டாப்’பாக தோற்றமளிக்கிற நாயகி அவரைக் காண்பார். முதல் பார்வையில் அவர் மீது ஆத்திரம் கொண்டாலும், மெல்ல நாயகனின் குயுக்திகளில் வீழ்வார். அவரைக் காதலிப்பார். கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் உன்னோடுதான் என்று நாயகனின் கண்களுக்கு வலை வீசுவார்.

இந்தக் கதை ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் வில்லன் நாயகனுக்கு வலை வீசுவார். அதற்கு ஒரு காரணம் இருக்கும். நாயகனைத் தேடி வந்து வில்லன் பிடிக்க, கதையில் ஒரு திருப்பம் வரும். ‘இனி நாயகன் வீழ்ந்தானோ’ என்று ரசிகர்கள் நினைக்கையில், ‘நீ வீசுன வலையில நான் மாட்டலை. உன்னை வலைய வீச வச்சதே நான் தான்’ என்று ‘போக்கிரி’ டைப்பில் வில்லனை பார்த்து ‘உதார்’ விடுவார் நாயகன்.

அப்புறமென்ன? இரண்டு பக்கமும் ‘டிஷ்யூம்.. டிஷ்யூம்..’ நடக்கும். இடைப்பட்ட காலத்தில் நாயகியை வில்லன் கடத்துவார். பிறகு அவரது இடத்திற்கே நாயகன் செல்வார். அங்கு நடக்கும் ‘கிளப் டான்ஸில்’ நாயகியும் நாயகனும் ஆடுவார்கள்.

பிறகு, நல்ல முகூர்த்த நேரத்தில் வில்லனின் இடத்தில் இருந்து கம்பி நீட்டுவார்கள். அவர்களைத் தேடி வில்லனும் அவரது ஆட்களும் வர, ‘இனிமே எல்லாமே முடிஞ்சுது’ என்பார் நாயகன். எதிர்தரப்பு சுதாரிப்பதற்குள், அவர்களை ‘சோலி’ முடித்துவிடுவார். இறுதியாக ‘சுபம்’ போட்டு தியேட்டரை விட்டு நம்மைத் துரத்தி விடுவார்கள்.

அதன்பிறகு, ‘வில்லனை எப்படி நாயகன் வலை வீச வைத்தார்’ என்று பல கோணங்களில் சிந்தித்தாலும் நமக்குப் பதில் கிட்டாது. ஏன், படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியபிறகு இயக்குனரோ, படக்குழுவினரோ கூட அதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல மாட்டார்கள்.

‘அது மாதிரி எத்தனை படம் பண்ணியிருக்கோம்’ என்று சொல்லியவாறே நமக்கு ‘டபுள் ஸ்மார்ட்’ தந்திருக்கிறார் இயக்குனர் பூரி ஜெகன்னாத். மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் இப்படத்தில் இருக்கின்றன.

வேண்டுமானால், இதன் கதையைச் சுருக்கமாகச் சொல்லலாம். முதல் பாகமான ‘இஸ்மார்ட் சங்கர்’ போன்றே, இதில் நாயகனின் மூளையில் வில்லனின் நினைவுகள் ஒரு அறுவைச்சிகிச்சை வழியாகச் செலுத்தப்படுகின்றன (அந்த அறுவைச்சிகிச்சை நம்மூரில் எந்த மருத்துவமனையில் செய்யப்படும் என்று கேட்கக் கூடாது).

அந்த அறுவைச்சிகிச்சைக்கு முன்னதாக, நாயகனும் வில்லனும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

இஸ்மார்ட் சங்கர் (ராம் போத்தினேனி) ஒரு திருடன். முகமூடி அணிந்து தனது உருவத்தை மறைத்தவாறு, கோடிக்கணக்கான பணம் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்வது அவரது வழக்கம். மூட்டையில் இருக்கும் அப்பணத்தை எல்லாம் அவர் தனது வீட்டிலேயே வைக்கிறார்.

ஒருநாள் வழக்கம்போல அக்கம்பக்கத்தில் இருப்பவர்களைக் கிண்டலடித்துக் கொண்டும், அவர்களிடம் வம்பிழுத்துக் கொண்டும் இருக்கிறார் இஸ்மார்ட் சங்கர். அப்போது, ஜன்னத்தை (காவ்யா தாப்பர்) முதன்முறையாகச் சந்திக்கிறார். பார்த்த முதல் நொடியே காதலில் விழுகிறார்.

தனது காதலை வளர்த்தெடுப்பதற்காக, முதலில் ஜன்னத்தின் ஈகோவை உரசிப் பார்க்கிறார். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவரது மனதை உரசுகிறார். இருவருக்கும் காதல் பிறக்கிறது. அவர்கள் காதல் வானில் பறக்க எண்ணுகிற போதுதான், பிக் புல் (big bull என்கிற இந்தப் பெயரை ஏன் இந்த வில்லன் பாத்திரத்திற்கு வைத்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி) குறுக்கே வருகிறார். அவர்களைப் பிரிக்கிறார்.

நாயகனைக் கடத்திச் செல்கிறார் (வழக்கமாக நாயகியைத்தான் வில்லன்கள் கடத்துவார்கள்). ஒரு ஆய்வகத்தில், அறுவைச்சிகிச்சை மூலமாக பிக் புல் நினைவுகள் இஸ்மார்ட் சங்கரின் மூளைக்குள் செலுத்தப்படுகின்றன (அதற்கு ஏதுவாக, நாயகனின் பின்மண்டையில் ‘பென்ட்ரைவ்’ மாட்டுவது போன்ற ஒரு இடம் உண்டு).

தனது நினைவு எது, பிக் புல் நினைவு எது என்று தெரியாமல் தடுமாறும் இஸ்மார்ட் சங்கர், அந்த விவரத்தை சிபிஐ அதிகாரி சந்திரகாந்துக்கு (சாயாஜி ஷிண்டே) தெரிவிக்கிறார். அதையடுத்து, தேடப்படும் குற்றவாளியான பிக் புல்லை பிடிக்க ஒரு திட்டம் வகுக்கப்படுகிறது. அதேநேரத்தில், பிக் புல் ஏன் தனது நினைவுகளை சங்கரிடம் செலுத்த வேண்டுமென்ற கேள்விக்கான பதிலாக, குறிப்பிட்ட இடத்தில் ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதாகத் தகவல் கிடைக்கிறது.

இறுதியில் அந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதா, பிக் புல் பிடிபட்டாரா, இஸ்மார்ட் சங்கர் தனது நினைவுகளை மீட்டெடுத்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இந்தக் கதையில் இருந்தே, இதில் ‘க்ளிஷே’வான விஷயங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது தெரிந்துவிடும். அப்படியும் தெரியவில்லை என்பவர்கள், இப்படத்தின் ‘தனி ட்ராக்’ ஆக நகைச்சுவை நடிகர் ஆலி நடித்துள்ள ‘பொக்கா’ எனும் பாத்திரத்தின் அஷ்ட கோண சேட்டைகளைக் கண்டு அந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

’வில்லன் வெர்சஸ் ஹீரோ’ என்ற விஷயம் சினிமாவில் துவைத்து தொங்கப்பட்ட ஒன்று. ஆனால், அது திரையில் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து ஒரு சிறந்த ‘கமர்ஷியல்’ படத்தை உருவாக்க முடியும்.

அற்புதமானதொரு கதைக்களம் கிடைத்தும் கூட, ’டபுள் ஸ்மார்ட்’ அதனைச் செய்யத் தவறியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், திரைக்கதையில் வரும் பல விஷயங்கள் எண்பதுகள், தொண்ணூறுகளில் வெளியான படங்களைக் காட்டிலும் மோசமானதாக உள்ளது.

அதற்குப் பதிலாக, இக்கதையை ‘உல்டா’ செய்து தொண்ணூறுகளில் நிகழ்வதாக மாற்றியிருக்கலாம்.

ஏன் இத்தனை விரயம்?

ராம் போத்தினேனி இதில் ‘இஸ்மார்ட் சங்கர்’ ஆக வருகிறார். தெலங்கானாவில் வாழ்ந்துவரும் எவரும் அவரைப் போல இருக்க மாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அதேநேரத்தில், அவரது நடிப்பு செயற்கையாகத் தெரியாமல் இருக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.

டாப்ஸி, ஹ்யூமா குரேஷி போன்று ‘ஆண்மைத்தனம்’ மிக்க பெண்ணாகத் தோற்றமளிப்பவர் காவ்யா தாப்பர். முடிந்தவரை, இப்படத்தில் அவரை நளினமாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

சஞ்சய் தத், இதில் வில்லனாக வருகிறார். அதே தெனாவெட்டு நடை, மிரட்டல் பார்வை, ‘பளிச்’ காஸ்ட்யூம், சுற்றிலும் அடியாட்கள் என்று ஒரு ‘டான்’ ஆக தோன்றியிருக்கிறார். இன்னும் எத்தனை படங்களில் அவரை இந்தக் கோலத்தில் பார்க்க வேண்டுமோ, தெரியவில்லை.

ஆலியின் நகைச்சுவை கொஞ்சம் கூட உவப்பானதாக இல்லை. சிரிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை; இருக்கையில் இருந்து எகிறிக் குதித்துச் சென்று திரையைக் கிழித்துவிடும் அளவுக்கு நம்மை ஆத்திரமூட்டுகிறது அவர் வரும் காட்சிகள். அவற்றில் ஆபாசத்தைத் தவிர வேறேதும் இல்லை (தணிக்கை வாரியம் அந்தக் காட்சிகளை பார்க்கும்போது என்ன செய்தது என்பது மிகப்பெரிய கேள்வி).

எம் டிவி புக பானி ஜே இதில் வில்லனோடு வரும் பெண் உதவியாளராக இருக்கிறார். கெட்டப் ஸ்ரீனு நாயகன் பேசும் ‘மொக்க’ வசனங்களைக் கேட்டு, ‘ஆமா அண்ணா’ என்று சொல்பவராக வந்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக சாயாஜி ஷிண்டே, மருத்துவர் தாமஸாக மாகரந்த் தேஷ்பாண்டே, போச்சம்மா ஆக பிரகதி மற்றும் ஜான்சி நடித்துள்ளனர். தெலுங்கு படங்களில் தயாரிப்பு தரம் அசத்தலாக இருக்கும். இதிலும் அப்படியே.

கியானி கியானெல்லி மற்றும் ஷ்யாம் கே.நாயுடுவின் ஒளிப்பதிவு, கார்த்திகா ஸ்ரீனிவாஸின் படத்தொகுப்பு, ஜானி ஷெய்க்கின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் விஎஃப் எக்ஸ், டிஐ, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, சண்டைப்பயிற்சி, நடனம், என்று பல அம்சங்கள் ஒன்றிணைந்து பிரமிக்க வைக்கிற காட்சியாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் திரைக்கதை எனும் வஸ்து சரிவர இல்லாத காரணத்தால், இப்படம் வெற்றுப் பாத்திரமாகத் தோற்றமளிக்கிறது.

இசையமைப்பாளர் மணி சர்மா தந்திருக்கும் பாடல்களில் ‘ஸ்டெப்பமார்’, ‘மார் முந்தா ஜோடு ஜிந்தா’ ஆகியன எளிதாக நம்மை ஈர்க்கின்றன. காட்சிகளில் இல்லாத விறுவிறுப்பை நிரப்ப முயன்றிருக்கிறது அவரது பின்னணி இசை.

இயக்குனர் பூரி ஜெகன்னாத் தன் மனதில் தோன்றியவற்றை எல்லாம் ஒன்றாகத் திரட்டி கதை ஆக்கியிருக்கிறார். ஆனால், ரசிகர்களான நமக்கு அது பிடிக்கும் என்று நம்பியதுதான் பெரிய தவறாகிப் போயிருக்கிறது.

எப்படிப்பட்ட அனுபவம்?

அடுத்து வரவுள்ள சில தகவல்கள் ‘ஸ்பாய்லர்’ ரகத்தில் சேர்பவை.

திரைக்கதையின் ஓரிடத்தில், சென்னையில் இளைஞர்கள் சிலர் ‘தனி நாடு’ கோரி போராட்டம் நடத்துவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா, தென்னிந்தியா என்ற பிரிவினையை அப்போராட்டம் முன்வைப்பதாகவும், அதில் ஈடுபடுபவர்களில் கைகளில் திராவிட இயக்கம் தொடர்பான பதாகைகள் இருப்பதாகவும் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

அரதப்பழசான ஒரு கதை, திரையில் அதனைப் புதிதாகக் காட்டுவதற்கான திறன்மிக்க ஒரு படைப்புக் குழு, இறுதியாக உருவம் தரப்படும் படைப்பினை விளம்பரப்படுத்த ஏதுவாகச் சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் என்று ‘வெற்றிக் கணக்கை’த் திட்டமிடும் ஒரு கமர்ஷியல் பட இயக்குனராகச் செயல்பட்டிருக்கிறார் பூரி ஜெகன்னாத்.

அதனால், அவர் தந்திருக்கும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை. டைட்டிலில் இருக்கும் ‘இஸ்மார்ட்’டை திரைக்கதையில் கொண்டுவர முடியாவிட்டால், இந்த நிலையைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

போக்கிரி, தேசமுடுரு, பிசினஸ்மேன், இடியட், அம்மா நானா ஒக்க தமிழ் அம்மாயி உட்படப் பல ‘சூப்பர்’ கமர்ஷியல் தெலுங்கு படங்களைத் தந்தவருக்கு இப்படியொரு நிலையா என்ற வருத்தத்தை அதிகப்படுத்தியதைத் தவிர, இந்த ‘டபுள் இஸ்மார்ட்’ வேறெதுவும் செய்யவில்லை.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment