இயக்குநர் பா.ரஞ்சித்தின் படங்கள் பேசும் அரசியல் எத்தகையது என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த ஒன்று. முதல் படமான ‘அட்டகத்தி’ முதல் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வு குறித்துப் பேசி வருகிறார்.
நூற்றாண்டு கால வரலாற்றைப் பேசுவது மட்டுமல்லாமல் அவர்களது எதிர்காலம் குறித்த கனவுகளையும் கொண்டிருப்பது, அவரது படைப்புகளை, அதே மக்களின் வாழ்வைப் பேசுகிற இதர இயக்குநர்களின் படைப்புகளிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறது.
கோலார் தங்கச் சுரங்கத்திற்குப் பணி செய்யச் சென்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை குறித்த புனைவாக ‘தங்கலான்’ அமையுமென்ற முன்னறிவிப்பும், அதில் பங்குகொண்ட கலைஞர்கள் தெரிவித்த கருத்துகளும், அப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
ரஞ்சித்தின் முந்தைய படங்கள் போன்று இதுவும் வலுவானதொரு ‘அரசியல்’ பேசும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
எப்படி இருக்கிறது ‘தங்கலான்’?
தங்கம் தேடும் கதை!
வேப்பூரில் இருக்கும் மிராசுதாரிடம் (முத்துகுமார்) அதிகளவில் நிலங்கள் இருக்கின்றன. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் அந்நிலங்களில் கூலிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் வேலை செய்கின்றனர். தங்களது நிலங்களை அவரிடம் அடகு வைத்திருக்கின்றனர்.
அதேநேரத்தில், தனக்குச் சொந்தமான சிறு அளவு நிலத்தில் பயிர் செய்கிறார் தங்கலான் (விக்ரம்). அதில் வரும் அறுவடையைக் கொண்டு, அவரும் அவரைச் சார்ந்த குடும்பங்களும் பிழைத்து வருகின்றன.
மனைவி கங்கம்மா (பார்வதி திருவோத்து), மூத்த மகன் அசோகன் (அர்ஜுன் அன்புடன்) மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என்று தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார் தங்கலான். வறுமை வாட்டினாலும், அது அவர்களது மன அமைதியைக் குலைப்பதாக இல்லை.
இந்த நிலையில், ஒருநாள் தங்கலானின் அறுவடைக்களம் தீக்கிரையாக்கப்படுகிறது. அது அவரிடம் இருக்கும் நிலத்தைப் பிடுங்க மிராசுதார் செய்த சதி என்று பின்னரே தெரிய வருகிறது.
ஆங்கிலேயர்களுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கி மற்றும் நெல்லுக்குப் பதிலாக, அவற்றைச் செலுத்தி அந்த நிலத்தைத் தான் எடுத்துக்கொள்வதாகத் தெரிவிக்கிறார் மிராசுதார். அதோடு, தங்கலானின் குடும்பம் பண்ணையடிமைகளாக இருக்க வேண்டும் என்கிறார்.
எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும், மிராசுதார் தரும் கூலியைச் சேர்த்து வைத்து நிலத்தை மீட்க முடியாது என்று உணர்கிறார் தங்கலான்.
அப்போது, கோலார் தங்கச் சுரங்கத்தைக் கண்டறியவும், அங்கு வேலை செய்யவும் ஆட்கள் வேண்டுமென்று கூறி வேப்பூருக்கு வருகிறார் கிளமெண்ட் பிரபு (டேனியல் கால்டாஜிரோனே).
மிராசுதாரின் ஆதிக்கத்தை மீற, அவருடன் செல்வதே வழி என்று எண்ணுகிறார் தங்கலான். ஆனால், தங்கம் தேடிச் செல்வது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று முன்னோர்கள் சொன்னதைச் சொல்லி, அவரைத் தடுக்கிறார் கங்கம்மா.
அது மட்டுமல்லாமல், தங்கம் இருக்கும் மலைப்பகுதியை ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற தேவதை காலம்காலமாகக் காத்து வருவதாக, அச்சமூகத்தில் வழிவழியாகக் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன.
தனக்கு முந்தைய ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த காடையன் (விக்ரம்) ஆனைமலையில் அந்த ஆரத்தியை எதிர்த்துச் சண்டையிட்டு தங்கத்தை அள்ளி வந்ததாகத் தமது குழந்தைகளுக்குக் கதைகள் சொன்னவர் தான் தங்கலான்.
ஆரத்தி என்று ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்வியை விட, இப்போது தான் எதிர்கொண்டுவரும் வாழ்வுச்சுழலில் இருந்து வெளியேற கிளமெண்டிடம் வேலை செய்வதே ஒரே வாய்ப்பு என்று அவர் எண்ணுகிறார்.
வடமேற்குத் திசை நோக்கிச் செல்லும் பயணத்தில், உயிருக்கு ஆபத்தான பல பாதிப்புகளை அக்கூட்டத்தினர் எதிர்கொள்கின்றனர்.
அதன் முடிவில், தான் கதைகளில் கேட்ட ஆனைமலையையும் ஆரத்தி காத்து வந்த நிலப்பகுதியையும் அடைந்ததாக உணர்கிறார் தங்கலான். பல போராட்டங்களுக்குப் பிறகு கொஞ்சம் தங்கத்தை அவர்கள் கண்டெடுக்கின்றனர்.
தங்கம் இருக்கும் நிலத்தைக் கண்டறிந்தபிறகு, கூடுதல் ஆட்களோடு அங்கு வருமாறு தங்கலானை அனுப்பி வைக்கிறார் கிளமெண்ட்.
தன்னிடம் இருக்கும் காசைக் கொண்டு வேப்பூர் மிராசுதாரிடம் அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்கிறார் தங்கலான். ‘நீங்களும் என்னைப் போலவே வாழலாம்’ என்று ஊரில் இருக்கும் தனது சொந்தங்களை அழைக்கிறார்.
அவர்களில் சிலர் குடும்பத்துடன் கோலார் நோக்கிப் பயணிக்கின்றனர். ஆனால், அங்கு வந்தபிறகு அந்த இடத்தில் நிலவும் சூழல் கண்டு அதிர்கின்றனர்.
ஊரில் தங்களைச் சிலர் அடிமைப்படுத்தியது போல, அங்கும் சிலர் அடிமைத்தனத்தை அவர்கள் மீது செலுத்துகின்றனர். ஆனாலும், பூமியில் இருந்து எடுக்கப்படும் தங்கத்தில் ஒரு பங்கு தருகிறேன் என்ற கிளமெண்டின் வார்த்தை அவர்களை வேலை செய்ய வைக்கிறது.
வறண்ட பூமியில் கடும் உழைப்பைக் கொட்டினாலும், அதற்குப் பலன் இல்லாமல் போவது அவர்களைச் சோர்வடைய வைக்கிறது. வாழ்க்கையே வெறுமையானதாக உணர வைக்கிறது.
கடும் போராட்டத்திற்கு மத்தியில், தங்கலானும் அவரைச் சார்ந்தவர்களும் தங்கச்சுரங்கம் இருக்குமிடத்தைக் கண்டறிந்தார்களா? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
தங்கம் தேடிச் செல்லும் மக்களின் பயணமே ‘தங்கலான்’ படத்தின் கதை. சாகசக் கதை என்றபோதும், இக்கதையில் வரும் பாத்திரங்கள் எதுவும் அப்படியொன்றை நிகழ்த்த வேண்டும் என்று எண்ணி அங்கு செல்வதில்லை.
மாறாக, நல்லதொரு வாழ்வும் அதற்குத் தேவையான பொருளும் அதன் மூலமாகக் கிட்டும் சமூக அங்கீகாரமும் வேண்டுமென்று பயணிக்கின்றன. ‘இண்டியானா ஜோன்ஸ்’ வகையறா படங்களில் இருந்து இப்படம் வேறுபடுவது அந்த இடத்தில் தான்.
மிரட்டும் ‘மேக்கிங்’!
‘தங்கலான்’ அப்டேட் என்ற பெயரில் வெளியான சில வீடியோக்கள் பெரிதாக நம்மைக் கவரவில்லை. அதில் இருந்த விஎஃப்எக்ஸ் நுட்பம் திருப்தி தருவதாக இல்லை. அதனால், இப்படம் சொல்ல வரும் கதைக்கேற்ற பட்ஜெட்டில் இது தயாரிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால், படம் பார்க்க அமர்ந்த முதல் நொடியே அந்த எண்ணம் காணாமல் போகுமளவுக்குத் தனது ‘கதை சொல்லும் உத்தி’யை வெளிக்காட்டியிருக்கிறார் பா.ரஞ்சித்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் எவ்வாறு இருந்தார்கள், தினசரி வாழ்வில் என்னவெல்லாம் செய்தார்கள், எப்படிச் சிந்தித்தார்கள் என்று சொல்வது சாதாரண விஷயமல்ல.
அந்த வகையில் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் தமிழ்பிரபா, அழகிய பெரியவன், பா.ரஞ்சித் கூட்டணி நம்மை மிரள வைத்திருக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஆண்களுக்கு இணையாகவே பெண்களும் வாழ்ந்தார்கள் என்பது பா.ரஞ்சித்தின் முந்தைய படங்கள் போன்று இதிலும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
சென்னை வட்டார வழக்கின் வேரான வட ஆற்காடு பேச்சு வழக்கு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அவ்வசனங்களைக் கூர்ந்து கேட்டாலும் சில இடங்கள் நமக்குப் புரிவதில்லை. அது ஒரு குறையாகவே தெரிகிறது.
ஒருவேளை சப்டைட்டிலோடு ‘ஹோம் தியேட்டரில்’ காண்கையில் இப்படம் வேறுவிதமான பார்வையை நமக்குத் தரலாம்.
அதையும் மீறி கங்கம்மாவுக்கு தங்கலான் ரவிக்கை வாங்கி வரும் காட்சி நம்மைக் கவர்ந்திழுக்கும். அது போன்று சில காட்சிகள் அத்தம்பதிகளின் காதலைச் சொல்வதாக இருக்கின்றன.
கூடவே நில அரசியல், ஒடுக்கப்பட்டவர்களின் மீதான அடக்குமுறை, உழைப்புச் சுரண்டல் என்று பலவற்றைப் பேசுகிறது ‘தங்கலான்’.
அதேநேரத்தில் இப்படத்தின் இடைவேளைப் பகுதியும், பின்பாதியிலுள்ள சில இடங்களும் சரியாக எழுதப்படவில்லை அல்லது காட்சிப்படுத்தப்படவில்லை என்ற எண்ணம் எழுவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
குறிப்பாக, ஆரத்தி தங்கலானின் கண்களுக்குத் தெரிவது மனநலக் குறைபாடா அல்லது அமானுஷ்யமா என்பதைத் திரைக்கதை தெளிவுபடுத்தவில்லை. அதனைத் தொடக்கத்திலேயே துல்லியமாக வேறுபடுத்திக் காட்டியிருக்கலாம்.
‘தங்கலான்’ திரையில் பிரமாண்டமாக, செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரியக் காரணம் ஒளிப்பதிவாளர் ஏ.கிஷோர் குமார். இப்படம் அவருக்கு இந்திய அளவில் பெரிய கவனிப்பைத் தருவது உறுதி.
’மிரட்டும் மேக்கிங்’ என்று இப்படத்தைக் கொண்டாடுவதற்கான முதல் காரணகர்த்தாவாக அவர் இருக்கிறார்.
படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே. இதில் கடுமையான உழைப்பைக் கொட்டியிருக்கிறார். நாயக பாத்திரம் எதிர்கொள்ளும் உண்மைக்கும் மனதில் காணும் பிம்பங்களுக்கும் இடையிலான முரணைத் திரையில் காட்டப் போராடியிருக்கிறார்.
கதை சொல்லலில் சில இடங்கள் குழப்பத்தைத் தந்தாலும், திரைக்கதையில் இருக்கும் சில கமர்ஷியல் அம்சங்கள் நம்மை விலகி நிற்காமல் தடுக்கின்றன.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை இப்படத்தின் மாபெரும் பலம். அதற்கிணையாக, திரையில் தெரியும் வாழ்வுடன் இணைந்து நிற்கிற பாடல்களும் இதிலுண்டு.
இன்னும் கலை வடிவமைப்பைக் கையாண்ட எஸ்.எஸ்.மூர்த்தி, ஆடை வடிவமைப்பைச் செய்த ஏகன் ஏகாம்பரம், ஒப்பனையைக் கையாண்ட பல்தேவ் வர்மா, சண்டைக்காட்சிகளை அமைத்த ஸ்டன்னர் சாம், ஒலி வடிவமைப்பு செய்த ஆண்டனி ரூபன் மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் சிறப்பானதொரு திரையனுபவத்தை நாம் எதிர்கொள்ளத் துணை நின்றிருக்கின்றனர்.
கரும்புலியோடு விக்ரம் மோதும் காட்சியில் மட்டுமே இப்படத்தின் விஎஃப்எக்ஸ் தரம் குறித்த கேள்வி நம்முள் எழுகிறது. நாம் பார்த்த டீசரை விடச் சிறப்பாகவே அக்காட்சி இருப்பது ஆறுதல்.
இரவில் நிகழ்வதாகக் காட்டப்பட்ட காட்சிகளில் டிஐ குழுவினரின் பங்களிப்பு அபாரம்.
நடிப்பைப் பொறுத்தவரை விக்ரம், பார்வதி திருவோத்து இருவரும் அப்பாத்திரங்களாக வாழ்ந்திருக்கின்றனர் என்று சொல்வதே சரி. நிச்சயமாக இவர்களில் ஒருவருக்கு தேசிய விருது கிட்டலாம்.
இதுநாள்வரை வெறுமனே அழகுப்பதுமையாகத் தென்பட்ட மாளவிகா மோகனன், ’தங்கலான்’னில் நமக்கு வேறொரு முகம் காட்டியிருக்கிறார்.
ஹரிகிருஷ்ணன் – பிரீத்தி கரன் ஜோடியின் இருப்பு, இப்படத்தில் இருந்து நாம் விலகிச் செல்லும் போதெல்லாம் நம்மை இருக்கையோடு பிணைக்க வைக்கிறது.
பசுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளில் சாதி அரசியல் குறித்த பகடி கொஞ்சம் அதிகமாகவே வெளிப்பட்டுள்ளது. அவரைக் காட்டுமிடம் குறைவு என்றபோதும் படம் முழுக்க இருப்பது போன்ற உணர்வு நமக்குள் எழுகிறது.
இவர்கள் மட்டுமல்லாமல் டேனியல் கால்டஜிரோனே, முத்துகுமார் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
முன்பாதி முழுக்கப் பெண் கலைஞர்கள் மேல்சட்டை அணியாமல் நடித்திருப்பது துணிச்சலான விஷயம். அவர்கள் ஏற்ற பாத்திரங்கள் முதன்முறையாக ரவிக்கை அணிவதாக வரும் காட்சியும், அதற்குப் பின்வரும் காட்சிகளும், திரைக்கதையில் அவ்வாறு காட்டியதன் பின்னணியைப் புரிய வைக்கின்றன.
ரஞ்சித் பேசும் அரசியல்!
‘அபோகேலிப்டோ’ போன்ற ஹாலிவுட் படங்களின் பாதிப்பு ‘தங்கலான்’ கிளைமேக்ஸ் உட்படச் சில இடங்களில் மேம்போக்காகத் தென்படுகிறது. சில ரசிகர்கள் வேறு சில படங்களையும் கூட உதாரணம் காட்டக்கூடும்.
ஆனால், ‘தங்கலான்’ கண்டுகளித்தபிறகு 2015-ல் வெளியான ‘எம்ப்ரேஸ் ஆஃப் தி செர்பெண்ட்’ படமே என் மனதுக்குள் நிழலாடியது. அதுவும் இதுவும் ஒரே கதையல்ல.
ஆனால், முந்தைய தலைமுறை காட்டிச் சென்ற வழியை மறந்து, தத்துவத்தை மறந்து, தன்னை மறந்து வாழ்ந்து வருவது தவறு என்று சொன்னது அப்படம். கிட்டத்தட்ட அப்படியொரு விஷயத்தையே இதில் கையிலெடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.
சரி, இந்தப் படத்தில் இயக்குனர் சொல்ல வருவது என்ன? ’ஸ்பாய்லர்’ என்பதால் இதற்குப் பின்வருபவற்றைப் படம் பார்க்காதவர்கள் தவிர்த்துவிடலாம்.
இப்படத்தின் கதையை நுனிப்புல் மேயலாமா?
சமவெளிப் பரப்பில் வாழும் ஒரு மக்கள் கூட்டம் அடிமைகளாக வாழ்ந்து வருகிறது. அவர்களில் ஒருவர், எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது என்று எண்ணுகிறார்.
அந்த நிலையில், மலையில் இருக்கும் வளத்தைத் தேடிச் செல்லும் ஒரு வெளிநாட்டவரைச் சந்திக்கிறார். வளத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் அவரோடு வேறு சிலரும் அவர்களோடு செல்கின்றனர்.
மலைப்பாங்கான இடத்தில் அவர்களால் அந்த வளத்தைச் சுலபத்தில் கண்டெடுக்க முடிவதில்லை. காரணம், அதனைக் காக்கும் பழங்குடிகள்.
அவர்களைக் கொன்று குவித்து, வளத்தைச் சூறையாட அவர்கள் முடிவு செய்கின்றனர். அதனைச் செயல்படுத்துகின்றனர். இரு பக்கமும் ரத்த ஆறு ஓடுகிறது.
ஒருகட்டத்தில், தான் சார்ந்த சமூகமும் அப்பழங்குடிகளும் வெவ்வேறல்ல என்று உணர்கிறார் அந்த நபர். எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னால் தாங்கள் ஒன்றாக வாழ்ந்ததாக அறிகிறார்.
அதன்பின், அவர் என்ன முடிவெடுத்தார் என்பதோடு இப்படம் முடிவடைகிறது.
இறுதியாக வரும் ‘ரோலிங் டைட்டில்’லின்போது கோலார் தங்க வயல் உருவானதைக் காட்டும் புகைப்படங்கள் வழியே, உண்மைக்கும் புனைவுக்குமான வேறுபாட்டைக் காட்டுகிறார் பா.ரஞ்சித்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் பழங்குடிகளும் ஒருகாலத்தில் ஒன்றாக வாழ்ந்தவர்கள் தான் என்று குறிப்பிடுகிற இடத்தில், தான் பேச வரும் அரசியலை முன்வைக்கிறார் பா.ரஞ்சித்.
இதனை ஆப்பிரிக்காவில், லத்தீன் அமெரிக்காவில், கிழக்காசியாவில் மலைவளங்களைச் சூறையாடும் எந்த நிகழ்வோடும் பொருத்திப் பார்க்கலாம்.
அங்கு நிகழும் வன்முறையில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக மோதிக்கொள்வது யார் என்று நமக்குள் எழும் கேள்விக்கான பதிலாக இது இருப்பதையும் உணரலாம்.
நம் நாட்டில் ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், ஒரிசா, மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை மண்ணில் இருந்து எடுக்கப்படும் கனிம வளங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களோடும் ‘தங்கலான்’ கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம். சாதி வேறுபாடு பாராட்டும் சமூகத்தையும் கூட இதன் வழியே கேள்விக்குட்படுத்தலாம்.
‘அந்தக் கருத்தெல்லாம் எனக்குத் தேவையில்லை, இப்படம் கமர்ஷியலாக இருக்கிறதா’ என்று கேட்பவர்களுக்கு ஏதுவாகவும், ஒரு வித்தியாசமான திரையனுபவத்தை ‘தங்கலான்’ தருகிறது.
ஆனாலும், இடையிடையே வரும் வசனங்கள், குறிப்பால் உணர்த்தும் காட்சியமைப்புகள் புரியாமல் நாம் தடுமாற வேண்டியதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அதையும் மீறி நம்மைப் பிரமிக்க வைக்கிறது ‘தங்கலான்’ படத்திற்காக ரஞ்சித் மற்றும் குழுவினர் திரையில் கொட்டியிருக்கும் அபார உழைப்பு. அதற்காகவே இப்படத்தைக் கொண்டாடலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்