படப்பிடிப்பின்போதே படத்தின் வெற்றியைக் கணித்த மக்கள்!

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் அனுபவங்கள்:

ஒக்கேனக்கலில் ‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பு. அனைவரும் அங்கு போய் சேர்ந்தோம். ஒரு நாள் படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்து விட்டது.

பக்கத்தில் இருக்கும் தருமபுரியில் எம்.ஜி.ஆர் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டோம்.

அப்போது நடிகர் ‘விஜயபுரி’ ஆனந்தன், ‘‘எல்லாரும் முதலாளி கார்லேயே ஏறப் போறீங்களே, என் காருக்கும் வாங்கப்பா’’ என்று கூப்பிட, நானும் ராஜேந்திரனும் அவர் காரில் ஏறிக்கொண்டோம்.

இயக்குநர் திருலோகசந்தரும் குமரன் சாரும், தயாரிப்பு நிர்வாகி மொய்தீனும் ஒரு காரில் புறப்பட்டார்கள். அவர்கள் கார் சென்று விட்டது. நாங்கள் பின் தொடர்ந்தோம். சாலையில் ஒரே கூட்டம்.

இறங்கிப் பார்த்தால், இயக்குநர் சென்ற கார் தலைக் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. நாங்கள் பதறிப் போய் அந்த கார் அருகே போய் பார்த்தோம். கையில் அடிப்பட்டு ரத்தம் சொட்ட நின்று கொண்டிருந்தார் திருலோகசந்தர்.

அவரை பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். கை முறிந்திருக்கிறது என்று கட்டுப் போட்டார்கள். குமரன் சார் ஷூட்டிங்கை தள்ளி வைத்து விடலாம் என்று சொன்னார்.

‘‘கையில் தானே அடி பட்டிருக்கு. இதுக்காக படப்பிடிப்பை ஒத்திப் போட வேணாம்’’ என்று இயக்குநர் கடமை உணர்வோடு சொன்னார்.

மறுநாள் காலையில் இயக்குநர் குளிப்பதற்கும், உடைகள் அணிவதற்கும் உடன் இருந்து நான் குரு சேவை செய்தேன். பேண்ட் போட முடியவில்லை அவரால். எனவே அவருக்கு வெள்ளை கைலியைக் கட்டி விட்டேன். கைலி அணிந்த நிலையில் ‘ரோஜா மலரே ராஜகுமாரி…’ பாடலைப் படமாக்கத் தொடங்கினார் இயக்குனர். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஒவ்வொரு ஷாட்டாக பாட்டை எடுப்பதற்காக இயக்குநர் ‘கட்… கட்’ என்று சொல்லி பாட்டை நிறுத்தினார்.

படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவர், ‘‘யாருய்யா அந்த கைலி கட்டின ஆளு? பாட்டை கேட்கவிடாம கட்… கட்னு சொல்லிட்டே இருக்காரு’’ என்று குரல் கொடுத்தார்.

அதைக் கேட்ட இயக்குநர் சிரித்துக்கொண்டே, ‘‘முத்துராமன் அந்தப் பாட்டை ஒரு தடவை முழுசா போடச் சொல்லுங்க…’’ என்றார். முழுவதுமாக அந்தப் பாட்டு ஒலிபரப்பப்பட்டது.

அதைக் கேட்ட மக்கள் கைதட்டி ரசித்தார்கள். அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் ஆகும் என்று அப்போதே எங்களுக்குத் தெரிந்து விட்டது.

– இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

  • நன்றி : முகநூல் பதிவு
Comments (0)
Add Comment