சில திரைப்படங்களைக் காண மக்கள் கூட்டம் குவியும்போது, ‘எதனால்’ என்ற கேள்வி எழும். அதுவே அந்தப் படத்தைக் காணச் செய்யும். அதனைப் பார்த்து முடித்த பிறகு, ‘ஏன் இவ்ளோ கூட்டம்’ என்று கேட்கத் தோன்றும்.
சமீபத்தில் ஆங்கிலப் படமான ‘It ends with Us’ அப்படியொரு அனுபவத்தைத் தந்தது. படத்தின் போஸ்டர் வடிவமைப்பைப் பார்த்தபோது, காதலை மையப்படுத்திய கதை இது என்று தோன்றியது. அதனைத் திரையில் முழுமையாகப் பிரதிபலித்து திருப்தி தந்ததா இப்படம்?
குடும்ப வன்முறை!
தேவாலயத்தில் உறவினர்களும் நண்பர்களும் லில்லியின் தந்தை குறித்து தங்கள் நினைவுகளைப் பகிர்கின்றனர். அதன்பிறகு லில்லி பேச அழைக்கப்படுகிறார்.
‘எனது தந்தை குறித்துப் பேச ஐந்து முக்கிய விஷயங்கள் இருக்கின்றன’ என்று பேச்சைத் தொடங்குகிறார் லில்லி. கையில் இருக்கும் காகிதத்தைப் பார்க்கிறார்.
அதில் ஒன்று, இரண்டு என்று ஐந்து வரை எண்கள் எழுதப்பட்டிருக்கின்றனவே தவிர, அவற்றின் அருகே எந்தக் குறிப்பும் இல்லை. பேச்சைத் தொடராமல் அங்கிருந்து அகன்று விடுகிறார் லில்லி. இது அவரது தாய்க்கு வருத்தமளிக்கிறது.
போஸ்டன் நகரில் வாழ்ந்து வரும் லில்லி, தான் வாழும் குடியிருப்பின் மாடிக்குச் செல்கிறார். அப்போது, அதே கட்டடத்தில் வசிக்கும் ரைலியைச் சந்திக்கிறார். அவர் ஒரு அறுவைச் சிகிச்சை மருத்துவர்.
ஏதோ ஒரு பதற்றத்தில் ரைலி இருப்பதைக் காண்கிறார் லில்லி. அதன் தொடர்ச்சியாக, இருவரும் உரையாட ஆரம்பிக்கின்றனர்.
அப்போது, ஒரு சிறுவனை அவனது சகோதரன் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அது தன்னை எரிச்சலில் ஆழ்த்தியதாகவும் சொல்கிறார் ரைலி. அந்தச் சந்திப்பின்போதே, காமத்தில் மட்டுமே தனக்கு விருப்பம் உண்டு என்று லில்லியிடம் அவர் தெரிவிக்கிறார். பிறகு, இருவரும் அங்கிருந்து இருவரும் அகல்கின்றனர்.
சில நாட்கள் கழித்து, ஒரு இடத்தில் மலர் விற்பனையகத்தைத் தொடங்குகிறார் லில்லி. அங்கு வேலைக்குச் சேர்கிறார் அலீசா. அடுத்த சில நாட்களில் அவர் தனது கணவர், சகோதரரை லில்லிக்கு அறிமுகப்படுத்துகிறார். அவரது சகோதரர் ரைலி என்று தெரியவரும்போது லில்லி ஆச்சர்யப்படுகிறார்.
ஆளை அசத்தும் தோற்றமுடைய ரைலி, லில்லியின் மனதைச் சட்டென்று கவர்கிறார். மெல்ல இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிறது.
அதனை அறிந்ததும் அலீசாவும் அவரது கணவர் மார்ஷலும் ஆச்சர்யப்படுகின்றனர். ‘இவன் எந்தப் பொண்ணோடவும் தொடர்ந்து இருக்க மாட்டானே’ என்கிறார் அலீசா.
சில மாதங்கள் கழித்து அலீசா குழந்தை பெற்றெடுக்கிறார். அதனைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்கிறார் லில்லி. அப்போது, அவரிடத்தில் காதலை வெளிப்படுத்தும் ரைலி, ‘என்னை திருமணம் செய்துகொள்கிறாயா’ என்கிறார்.
இதற்கிடையே, பதின்ம வயதில் தான் காதலித்த அட்லஸ் எனும் நபர் பற்றி ரைலியிடம் சொல்கிறார் லில்லி. அதே அட்லஸை ஒரு உணவகத்தின் உரிமையாளராகப் போஸ்டனில் காண்கிறார். அப்போது ரைலி அவருடன் இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் ரைலி, லில்லி இருவரும் சில காயங்களுடன் இருப்பதைப் பார்க்கிறார் அட்லஸ். அது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
அட்லஸின் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட லில்லி, சமையலறைக்குச் செல்கிறார். ’உன்னை அவன் காயப்படுத்தினானா’ என்று அவரிடத்தில் கத்துகிறார் அட்லஸ். அதற்கு, ‘நீ நினைப்பது போல் இல்லை’ என்று சமாதானப்படுத்துகிறார் லில்லி.
அங்கு வரும் ரைலி அவர்களது உரையாடலைக் கேட்கிறார். அந்த நபர்தான் அட்லஸ் அறிந்ததும், அவரோடு சண்டையிடுகிறார்.
அந்த சம்பவத்திற்குப் பின், வீட்டிலும் லில்லியிடம் கோபப்படுகிறார் ரைலி. இனி ஒருபோதும் அட்லஸை காணக் கூடாது என்கிறார்.
ஆனால், அடுத்த நாளே அட்லஸ் லில்லியின் கடைக்கு வருகிறார். ‘என்னை அழைக்க வேண்டுமென்று நினைக்கும்போது இதனைப் பயன்படுத்து’ என்று தனது மொபைல் எண்ணை ஒரு காகிதத்தில் எழுதி, அதனை லில்லியின் மொபைல் கவரில் வைக்கிறார்.
ஒருநாள் தற்செயலாக அந்த மொபைலை ரைலி எடுக்கிறார். கை தவறி அது கீழே விழுகிறது. அட்லஸின் மொபைல் எண் எழுதப்பட்ட காகிதம் அதிலிருப்பதைக் கண்டதும் அவர் ஆத்திரமடைகிறார்.
அவரைச் சமாதானப்படுத்த முயற்சிக்கையில் லில்லி மாடி படிக்கட்டுகளில் இருந்து விழுகிறார். உண்மையில், அவரைத் தள்ளிவிட்டது ரைலி தான்.
ரைலியின் வன்முறைக் குணத்தைக் கண்டாலும், காதலுக்காக அதனைப் பொறுத்துக் கொள்கிறார் லில்லி. ஆனால், அது மீண்டும் மீண்டும் அவரைத் துன்புறுத்துகிறது.
ஒருநாள் லில்லி உடன் உறவு கொள்ளும்போது மிகமோசமாக நடந்துகொள்கிறார் ரைலி. அது, ஒருபோதும் ஆறாத காயத்தை லில்லியிடத்தில் ஏற்படுத்துகிறது.
சிறு வயதில் தான் கண்ட தந்தையைப் போலவே ரைலி இருப்பதாக எண்ண வைக்கிறது. அதன்பிறகு என்னவானது என்பதோடு இப்படம் முடிவடைகிறது.
இதுவரை படித்த, பார்த்த, கேட்ட ‘குடும்ப வன்முறை’ தொடர்பான புனைவுகளின் ஒரு துளியாகவே இப்படம் உள்ளது. ஒரு பெண்ணின் வெவ்வேறு வயதுகளில் நிகழும் காதல்களை முன்னிலைப்படுத்தி அதனைச் சொன்னதே இப்படத்தின் யுஎஸ்பி ஆக விளங்குகிறது.
இளங்கூட்டத்தின் ஆரவாரம்!
‘It ends with Us’ திரைப்படத்திற்குக் கல்லூரி மாணவ மாணவியர் ஜோடியாகவும் கும்பலாகவும் முண்டியடித்துச் செல்வதையும், அவர்களது ஆரவாரத்தையும் தியேட்டரில் காண முடிந்தது.
இளம் தலைமுறையினர் கூட்டமாகத் திரண்டதற்கு, இப்படம் ‘ரொமான்ஸ்’ வகைமையில் அமைந்தது மட்டுமே காரணமல்ல. காலின் கூவர் எனும் பெண் எழுத்தாளர் எழுதிய நாவலைத் தழுவி இது படம்பிடிக்கப்பட்டிருப்பதும் அதன் பின்னிருக்கிறது.
லில்லி ஆக பிளேக் லைவ்லியும், அதன் இளம் வயது பாத்திரமாக இசபெல்லா பெரரும் நடித்துள்ளனர்.
இதில் ரைலி ஆக ஜஸ்டின் பால்டோனி நடித்துள்ளார். அவரே இப்படத்தின் இயக்குனர்.
அட்லஸ் ஆக பிரெண்டன் ஸ்கெலினரும், அவரது இளம் வயது பாத்திரத்தில் அலெக்ஸ் நியூஸ்டேடரும் நடித்துள்ளனர்.
ஜென்னி ஸ்லேட், ஹசன் மின்ஹஜ், அமி மோல்டன், கெவின் மெக்கிட் ஆகியோர் இதில் முக்கியப் பாத்திரங்களில் தோன்றியிருக்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து வேறு எவரும் இதில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. அதனால், இது ஒரு ‘மினிமம் பட்ஜெட்’ படமாக நம் கண்களுக்குத் தெரிகிறது.
அதேநேரத்தில், திரையில் அந்த எண்ணத்தை நாம் உணராமல் இருக்கும் வகையில் அமைந்துள்ளது பேரி பீட்டர்சனின் ஒளிப்பதிவு.
வழக்கமான ஹாலிவுட் படங்கள் போன்று சாம்பல் மற்றும் நீல வண்ணத்தில் பிரேம்களை முக்கியெடுக்காமல், அதேநேரத்தில் ‘ரொமான்ஸ் டிராமா’ வகைமை படங்கள் வண்ணமயமாகத் திரையில் ஒளிர்வது போலவும் அல்லாமல், இரண்டும் கலந்தாற்போல இதனை அவர் படம்பிடித்திருக்கிறார்.
ஊனா ப்ளாஹெர்ட்டி, ராப் சல்லிவனின் படத்தொகுப்பு, ரஸ்ஸல் பர்னெஸ் மற்றும் ஆனி சிமியோனின் தயாரிப்பு வடிவமைப்பு, ராம் சிமோன்சன் மறும் டங்கன் பிளிக்கென்ஸ்டாப்பின் பின்னணி இசை, பாடல்கள் உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு, இப்படம் தரும் காட்சியனுபவம் மனதுக்கினியதாக அமைந்துள்ளது.
ஜஸ்டின் பால்டோனியின் உருவாக்கத்தில் அமைந்துள்ள இப்படம் நமக்கு அபத்தமாகத் தெரிவதில்லை. ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் மிகச்சிலரே ஹாலிவுட்டில் திகழ்வதால், நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது அவரது திறமை.
எத்தனை லில்லிகள்?
மையப் பாத்திரமான லில்லியின் மனதையும் அதில் நிறைந்திருக்கும் குடும்ப வன்முறை குறித்த பயத்தையும் இப்படம் நமக்கு உணர்த்துகிறது.
உண்மையில் முப்பதுகளைத் தாண்டியும் லில்லி ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பதற்கான பதிலாக, அவரது பதின்ம வயது அனுபவங்கள் இருக்கின்றன. அது திரைக்கதையில் இடையிடையே சொல்லப்படுகிறது.
தனது தந்தையையே ஆண்களுக்கான ஒரு சோறு பதமாக லில்லி உணர்ந்திருக்கிறார். அதிலிருந்து விடுபட்டு, சிறு வயதில் தான் கண்ட காதல் நினைவுகளைத் துறந்து, ஒரு ஆண் மீது அப்பாத்திரம் காதல் வயப்படுவதில் இருந்தே ‘It ends with Us’ திரைக்கதை தொடங்குகிறது. போலவே, எத்தனையோ லில்லிகளில் இவரும் ஒருவர் என்ற எண்ணம் படம் முடிவடையும் போது உருவாகிறது.
வசனங்களில், காட்சிகளில் சொல்லப்படாத சில விஷயங்களைச் சூசகமாக உணர்த்துவதால், குடும்ப வன்முறையை மையப்படுத்திய இதர படங்களில் இருந்து இது வேறுபடுகிறது. அதேநேரத்தில் வெறுமனே ‘கதை என்ன’ என்று கேட்டுவிட்டுப் படம் பார்க்கத் தொடங்கும் நடுத்தர வயதினரைப் பொறுத்தவரை, ‘இப்படம் பத்தோடு பதினொன்றாகவே தென்படும்’ என்பதையும் மறுப்பதற்கில்லை..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்