ஏரிக்கரை பயண அனுபவம்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ!

ஏரிக்கரை பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ” – கவிஞர் சிதம்பரநாதன்.

12.8.2024 பிற்பகல் 1.30க்கு நீல சதுப்புநில ஏரி நோக்கி ஞாயிற்றுக்கிழமை (Blue Marsh Lake) புறப்பட்டோம். 3.30க்குப் போய்ச் சேர்ந்தோம்.

எங்களைப்போல் (கலைக்கோவன் சீதா), வெங்கட் இலக்குமி, ஜோசப் அண்டோனிதா, சதீஷ் பரிமளா குடும்பமும் குழந்தைகளுடன் வந்தார்கள்.

என்னைப்போல் வெங்கட் அம்மா, அண்டோனிதா அம்மாவும் வந்தார்கள். குழந்தைகள் திஷ்சியா, ஆயுஷ், கலைக்கதிர், கலைநிலவன், சித்தார்த், சாரா, கிரசண்ட்சா.

3000 ஏக்கரில் அமைந்த ஏரி. 53 அடி ஆழமானது. வெள்ளத்தைத் தடுக்க அமைந்த ஏரி. அமெரிக்காவில் நிறைய ஏரிகள் உண்டாம். கடல்போல் இருக்குமாம். நான் பார்த்த முதல் ஏரி. இதற்கு இனிமையான ஏரியென்றும் (Pleasant Lake) பெயர் உண்டு. இதோ இனிமையான ஏரி.

கண்களே ஏங்கும் ஏங்கும்
காட்சியோ எங்கும் எங்கும்
என்னடா இயற்கைக் காட்சி!
இதயத்தை வருடும் மாட்சி!
விண்ணிலே மேகக் கூட்டம்
விளையாடும் காட்சித் தோட்டம்
எண்ணமோ வடிவம் தேடும்
இதயமோ கவிதை பாடும்

காடுதான் கண்கள் காணும்
காடென நெருங்கிப் பார்த்தால்
வீடுகள் விழிகள் காட்டும்!
வியப்புகள் தோன்றும்தூண்டும்
கோடென நெடிய சாலை
குலுங்கிடும் பசுமைச் சோலை
தேடலும் நின்றி டாது
தெவிட்டலும் வந்தி டாது

ஏரியைப் பார்க்கத் தானே
இளகிய நெஞ்சம் தானே
பூரிப்பு கொள்ளும் தானே
பொழுதினைக் கரைக்கும் தானே
வாரித்தான் விழிகள் அள்ளும்
வற்றாத ஊற்றாய் வெல்லும்
ஏரியின் எழிலைக் காண
இதயமோ துள்ளும் துள்ளும்

கரையெலாம் மக்கள் கூட்டம்
கண்களுக் கில்லை வாட்டம்
கறையிலா மனத்தின் சாட்சி
களிப்புறும் குளியல் காட்சி
நுரையிலா அலைகள் பாடும்
நுட்பமாய் இசையைத் தூவும்
கரையெலாம் கண்டேன் கண்டேன்
கண்குளிர் ஏரி உண்டேன்

கனிவுடை பிள்ளைக் கூட்டம்
கண்கவர் காட்சிக் கோட்டம்
துணிவுடன் படகு செல்லும்
துரிதமோ மனசை அள்ளும்
பனிவிழும் காலம் இல்லை
பனிக்கட்டி அச்ச மில்லை
இனிமைதான் பார்க்க பார்க்க!
எத்திசையும் நோக்க நோக்க!

நன்றி: முகநூல் குறிப்பு

Comments (0)
Add Comment