வாழ்க்கை ஒரு புதிர்!

நூல் அறிமுகம்:

என் கல்லூரிக் காலத்தில் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். மிகச் சொற்பமான தொகை. உடனே தஞ்சாவூர் சென்று என்சிபிஎச் நூல் நிலையத்தில் தமிழில் வந்த ரஷ்ய இலக்கிய நூல்களை வாங்கி வருவேன்.

பத்து ரூபாய், 20 ரூபாய்க்கு புத்தகங்கள் கிடைக்கும். கல்லூரிப் படிப்பு முடியும் வரை இதே வேலைதான். 

அப்படித்தான் அன்னை வயல், வீரம் விளைந்தது, தாய் உள்ளிட்ட பல புகழ்பெற்ற நாவல்களையும் நூல்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிங்கிஸ் ஐத்மாதவ் அன்னை வயலில் காட்டும் கிராமத்தின் காட்சிகள் இன்றும் மனத்தில் அழகிய சித்திரமாக இருக்கிறது. அந்த வர்ணனைகள் என்னை எழுதத் தூண்டிக்கொண்டே இருந்தன. 

அதே வாசகன், முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரஷ்ய நாவலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் நெகிழ்வான தருணம்.

அது இவான் கான்சரோவ் எழுதிய ஒப்லமோவ். தமிழில் மொழிபெயர்த்தவர் மஹாரதி. தினவு பதிப்பகம் சார்பில் முதல் நூலாக அதை வெளியிட்டவர் நண்பர் ஆகாசமுத்து.  

கே.கே. நகரில் உள்ள கலப்பை பதிப்பக அரங்கில் ஞாயிறு மாலையில் நடந்த எளிய விழா. இயக்குநர் சீனு ராமசாமி, நெய்தல்நாடன், என். ஸ்ரீராம், மஹாரதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கடும் மழை பெய்து நின்றபோது விழாவும் முடிந்திருந்தது.  

தமிழில் அதிகம் உச்சரிக்கப்படாத ரஷ்ய எழுத்தாளர் இவான் கான்சரோவ். அவர் எழுதிய நாவலும்தான். “கடைசி ரஷ்யன் உயிரோடு இருக்கும் வரை கான்சரோவ் நினைவில் இருப்பார்” என்று இவான் துர்க்கனேவ் குறிப்பிட்டுள்ளார். 

தன் எழுத்துக்களை அரசியல், சமூக வாக்குமூலங்களாகப் பார்க்கவேண்டாம் என்று தெரிவித்தவர் கான்சரோவ். பல குறியீடுகளைக் கொண்டுள்ள அவரது நாவலான ஒப்லமோவ், ரஷ்ய இலக்கியத்தின் செவ்வியல் படைப்பு என்று  புகழப்படுகிறது. 

எப்போதும் தூங்கிவழியும் கதாபாத்திரம்தான் ஒப்லமோவ். நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்டு செயலற்றுப்போனவனின் கதை. 

கண்ணுக்குத் தெரிந்த இந்த கதைக்குள், தெரியாத 19 ஆம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. 

165 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புதினம் இன்றைக்கும் பொருத்தமாகக் காலத்தில் நிற்பது ஒப்லமோவின் வெற்றி என்று மொழிபெயர்ப்பாளர் மஹாரதி சொல்வது உண்மைதான். படித்துப் பாருங்கள். 

*****

நூல் : ஒப்லமோவ்
ஆசிரியர்: இவான் கான்சரோவ்
தமிழில்: மஹாரதி
தினவு பதிப்பகம் 

Ph: 9092213211 / Email: aakaasamuthup@gmail.co

– சுந்தரபுத்தன்

Comments (0)
Add Comment