அடியோஸ் அமிகோ – எதிர்பாராத சந்திப்பினால் மாறும் வாழ்வு!

ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறானதாக அவர்கள் ஏற்கும் பாத்திரங்களைப் படைத்துவிட்டு, அவற்றைச் சுற்றி நிகழும் சம்பவங்களை வடிவமைப்பதன் மூலமாகத் திரைக்கதையைக் கோர்க்கும் வேலையைச் செய்கின்றன அப்படங்கள்.

சூரஜ் வெஞ்சாரமூடு, ஆசிஃப் அலி, ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் நடிப்பில், தங்கத்தின் எழுத்தாக்கத்தில், நஹாஸ் நாசர் இயக்கியுள்ள ’அடியோஸ் அமிகோ’ மலையாளத் திரைப்படம் அந்த வரிசையில் இருப்பதாகக் காட்டியது அதன் ட்ரெய்லர். தற்போது இது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

இப்படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது?

மீண்டும் சந்திக்கலாம்!

கேரளாவில் கட்டப்பனை பகுதியைச் சார்ந்தவர் சத்பிரியன் (சூரஜ் வெஞ்சாரமூடு). எர்ணாகுளத்தில் ‘பெயிண்டிங்’ பணி செய்யும் ஒரு குழுவுடன் தங்கி வேலை செய்து வருகிறார். கையில் பெரிதாகப் பணம் இல்லாமல் அவர் கஷ்டப்படுகிறார்.

சத்பிரியனின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது. அதனைத் தொடர்ந்து, தாயை மருத்துவமனையில் சேர்க்கிறார் அவரது தங்கை. உடனடியாகப் பத்தாயிரம் ரூபாய் மருத்துவமனையில் கட்ட வேண்டுமென்று சொல்லப்பட, சத்பிரியனிடம் அதனைச் சொல்கிறார்.

 பெயிண்டிங் வேலையில் சேர்த்துவிட்ட ஷோகனிடம் (ஷைனி டாம் சாக்கோ) கடன் கேட்கிறார் சத்பிரியன். எர்ணாகுளம் பஸ் ஸ்டாண்டில் அடுத்த நாள் காலையில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு அவர் சொல்கிறார்.

அடுத்தநாள் காலையில் பஸ்ஸ்டாண்டில் காத்திருக்கிறார் சத்பிரியன். ஷோகன் தன்னுடைய மொபைல் அழைப்புக்குப் பதிலளிக்காததால் சோர்வுறுகிறார்.

சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் அவரை அழைக்கிறார். இந்த முறை, தான் வர ஐந்தாறு மணி நேரம் ஆகும் என்று போனில் தகவல் சொல்கிறார் ஷோகன். அதையடுத்து, டீ குடிக்கக் கூட காசில்லாமல் அந்த பஸ்ஸ்டாண்டில் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் சத்பிரியன்.

அப்போது, ஒரு நபரை அவர் பார்க்கிறார். நல்ல மது போதையில், சிரித்த முகத்துடன், எதிர்ப்படும் நபர்களை மகிழ்ச்சியாக இருக்கச் சொல்லியவாறே, அந்த நபர் வருகிறார். பணம் இல்லாமல் வாடுபவர்களைக் கண்டு, அவர்கள் கையில் பணத்தைத் திணிக்கிறார்.

சத்ப்ரியன் அருகில் வரும் அந்த நபர் (ஆசிஃப் அலி). ‘நண்பா, வா டீ குடிக்கப் போகலாம்’ என்கிறார். சத்பிரியனோ ‘வேண்டாம்’ என்று மறுக்கிறார். ‘முகத்துல சம்மதத்தை வச்சுகிட்டு வரலைன்னு சொன்னா எப்படி’ என்று தொடர்ந்து அவரை வற்புறுத்த, அவருடன் செல்கிறார் சத்பிரியன்.

இருவரும் ஒரு கடையில் டீ குடிக்கின்றனர். அங்கிருக்கும் பெண்மணியிடன் ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு ‘மீதியை நீங்க வச்சுக்கோங்க’ என்கிறார் அந்த நபர். அதனைக் கண்டு திகைக்கிறார் சத்பிரியன்.

பிறகு இரண்டு பேரும் பஸ்ஸ்டாண்ட் கழிவறையில் மது அருந்துகின்றனர். ’நீங்க சங்குமுகம் கடற்கரையை பார்த்திருக்கீங்களா நண்பா’ என்று கேட்கிறார் அந்த நபர். ‘இல்லை’ என்று சத்பிரியன் சொன்னதும், ‘வாங்க, அங்க போய் சூரிய அஸ்தமனம் பார்க்கலாம்’ என்கிறார்.

அவரிடத்தில், தனது தாய்க்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திணறுகிறார் சத்பிரியன். அதற்குள், அவரை இழுத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறுகிறார் அந்த நபர்.

பயணத்தின்போது, சில பயணிகளோடு அவருக்கு வாக்குவாதம் வருகிறது. அப்போது, சத்பிரியன் தான் அவர்களைத் தடுக்கிறார்.

திடீரென்று பேருந்தை நிறுத்தச் சொல்லி, கோட்டயத்தில் இறங்குகிறார் அந்த நபர். சத்பிரியன் ‘ஏன்’ என்று கேட்க, ‘கையில பாட்டில் இல்லையே’ என்கிறார்.

தள்ளாடுகிற மது போதையில், இருவரும் ஒரு ஜவுளிக்கடைக்குள் நுழைகின்றனர். அங்கு, ஹேமா என்ற பெண்ணைத் தேடுகிறார் அந்த நபர். ஆனால், அவரோ அந்த நபரைப் பார்க்க மறுக்கிறார்.

அதோடு, சத்பிரியனை அழைத்து ‘கடை அடைச்சதும் அவரைக் கூட்டிக்கொண்டு வாங்க. கொஞ்சம் குடிக்காம இருக்கச் சொல்லுங்க’ என்கிறார் ஹேமா. அதனை அந்த நபரிடத்தில் சொல்கிறார் சத்பிரியன்.

‘நண்பா நீங்க சொன்னதாக இதுக்கு சம்மதிக்கிறேன். அவ பார்க்க சம்மதிக்கலைன்னா பயங்கரமா கோபப்படுவேன்’ என்கிறார். சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய சூழல்.

அப்போது, ‘ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கலாம்’ என்கிறார் சத்பிரியன். உடனே, ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறார் அந்த நபர்.

சத்பிரியனுக்கு நடப்பது எதுவுமே புரிவதாக இல்லை. ஒரே நாளில் இன்னாரென்று தெரியாத நபரால் இந்த வாழ்க்கை ஏன் இப்படி தலைகீழாக மாற வேண்டும் என்று யோசிக்கிறார்.

அப்போது, அந்த ஹோட்டலின் மேலாளரைச் சந்திக்கிறார் சத்பிரியன். அவர் தான், அந்த நபரின் பெயர் பிரின்ஸ் என்றும், கொல்லத்தில் மிகப்பெரிய பணக்காரர் ஒருவரின் மகன் என்றும் சொல்கிறார்.

ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததுமே கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பிக்கிறார் பிரின்ஸ். நள்ளிரவில் கண் விழிப்பவர், மொபைலில் ஹேமாவின் மிஸ்டு கால் பார்த்து அதிர்கிறார். ‘வாங்க ஹேமாவைப் பார்க்க போவோம்’ என்கிறார்.

’போதையில அவங்களை பார்க்கப் போகணுமா’ என்று சத்பிரியன் கேட்டதும், அவரைப் பார்த்து கோபமுறுகிறார் பிரின்ஸ். ’நான் குடிச்சிருக்கேன்னு அவகிட்ட சொல்லிட்டியா’ என்று ஆத்திரமடைகிறார். ‘இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று சொல்லிவிட்டு ஹோட்டலை விட்டு கிளம்புகிறார்.

அதற்குள், ஷோகனிடம் கோபமாகப் பேசி ‘உன் பணம் எனக்கு வேண்டாம்’ என்று சொல்லிவிடுகிறார் சத்பிரியன். தாயின் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் ஏற்பாடு செய்ய முடியாமல், அது பிரின்ஸிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போன நிலையில் அங்கு நிற்கிறார்.

ஆனால், போன வேகத்தில் சில நிமிடங்களில் திரும்பி வருகிறார் பிரின்ஸ். மீண்டும் அவரால் இன்னொரு பிரச்சனை. அதனைப் பேசித் தீர்க்கிறார் சத்பிரியன்.

அடுத்த நாள் காலையில் பிரின்ஸும் சத்பிரியனும் ஹேமாவைப் பார்க்கக் கிளம்புகின்றனர். அப்போது, பிரின்ஸுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது சத்பிரியனுக்குத் தெரிய வருகிறது.

திருமணமான பிரின்ஸ் ஏன் ஹேமாவைத் தேடி வர வேண்டும்? அதன்பிறகாவது தனது பிரச்சனை என்னவென்று பிரின்ஸிடம் சத்பிரியன் சொன்னாரா என்று பல தகவல்களைச் சொல்லிச் செல்கிறது இரண்டாம் பாதி.

நன்றாகத் தெரிந்த உறவை, நட்பை விட்டுப் பிரியும்போது ‘பை’ என்று சொல்வோமே, கிட்டத்தட்ட அப்படியொரு தொனியில் ‘மீண்டும் சந்திக்கலாம்’ என்ற அர்த்தத்தில் ஒலிப்பது ‘அடியோஸ் அமிகோ’. இந்த வார்த்தை தான் சத்பிரியனையும் பிரின்ஸையும் ஒன்றிணைப்பதாகக் காட்டுகிறது இதன் திரைக்கதை.

’அடிபொலி’ பெர்பார்மன்ஸ்!

மனம் நிறையச் சோகத்துடன், ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்கிற பாவனையை முகத்தில் தேக்கியவாறு திரையில் தோன்றியிருக்கிறார் சூரஜ் வெஞ்சாரமூடு. படத்தில் ஒரு காட்சியில் கூட, அந்த தொனியை அவர் இழக்கவில்லை. ஆஹா, என்னவொரு நடிப்பு!

‘நான் குடிக்கலையே’ என்பது போலச் சிலர் முழுமையாக மது போதையில் தள்ளாடுவார்களே, அதனை முதல் பார்வையிலேயே வெளிப்படுத்துகிறார் ஆசிஃப் அலி. மது போதையிலும் மேட்டிமைத்தனத்தை வெளிப்படுதுகிறவராகப் படம் முழுக்கத் தெரிகிறார்.

இவர்கள் இருவர் மட்டுமே இத்திரைக்கதையில் பிரதானம் என்றபோதிலும், ரோனியாக வரும் அல்தாப் சலீம், ஷோகனாக வரும் ஷைன் டாம் சாக்கோ, ஹோட்டல் மேலாளராக வரும் நந்து, கார் டிரைவராக வரும் வினீத் தட்டில் டேவிட், பிரின்ஸின் தங்கையாக வரும் முத்துமணி, மச்சானாக வரும் ஜினு ஜோசப் என்று பலர் இதில் நடித்துள்ளனர். அவர்களது பெர்பார்மன்ஸ் ‘அடிபொலி’ ரகம்.

பிரதான பாத்திரங்கள் குறித்த இன்னும் பல தகவல்களை, அது சார்ந்த உணர்வுகளை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது அவர்களது நடிப்பு.

ஹேமாவாக வரும் அனகா மட்டுமே இக்கதையில் வரும் கொஞ்சம் பெரிய பெண் பாத்திரம். அவரது இருப்பு திரைக்கதையில் நெகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

கோபி சுந்தர், ஜேக்ஸ் பிஜோய் இசையில் அமைந்த பாடல்கள் காட்சிகளோடு சேர்ந்து ரசிக்கும் வகையில் இருக்கின்றன.

பல காட்சிகளைப் பின்னணி இசையால் தாங்கிப் பிடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய்.

எழுத்தாக்கம் செய்துள்ள தங்கம், இத்திரைக்கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தையும் சிறப்புற வடிவமைத்திருக்கிறார். இக்கதையில் ஆண்களே அதிகம் உள்ளனர். பிரின்ஸின் மனைவியையோ, சத்பிரியனின் தங்கையையோ, தாயையோ திரையில் காட்டவில்லை. அவர்களது குரல் மட்டுமே போதும் என்று விட்டிருக்கிறார்.

ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு வெவ்வேறுபட்ட களங்களைத் திரையில் காட்டுகிறது. அவற்றுக்குரிய இயல்புடன் காண வகை செய்திருக்கிறது.

ஆஷிக்கின் கலை வடிவமைப்பு, காட்சிகளுக்குரிய சூழலைத் திரையில் உருவாக்கியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் ஒவ்வொரு காட்சியும் நிதானமாக நகரும் அளவுக்கு ஷாட்களை ‘கட்’ செய்திருக்கிறார். அதேநேரத்தில், சினிமாத்தனமாக உணர வைப்பதற்கும் சில இடங்களை ஒதுக்கியிருக்கிறார்.

பின்பாதியில் திரைக்கதை அங்கு, இங்கு என்று பல இடங்களுக்குத் தாவியோடுகிறது. முடிவற்று நகரும் அக்காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. என்னதான் கதாபாத்திரங்களை யதார்த்தமான சூழலில் காட்ட அவை துணை புரிந்தாலும், ஒருவிதச் சலிப்பு எட்டிப் பார்க்கிறது. அந்த இடத்தைச் சுருக்கிக் காட்ட நிஷாத் மனது வைத்திருக்கலாம்.

இன்னும் இப்படத்தில் இடம்பெற்ற இன்னபிற தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் கூடச் சிறப்பாக இருப்பதால், யதார்த்தமும் சினிமாத்தனமும் கலந்த ஒரு திரைக்கதையைக் கண்ட திருப்தி உருவாகிறது.

நஹாஸ் நாசர் இதனை இயக்கியிருக்கிறார். நிஜ வாழ்வில் நாம் சந்திக்க நேர்கிற, அதேநேரத்தில் நாம் அறிய விரும்பாத சில நபர்களின் வாழ்வனுபவங்களைத் திரையில் காட்டியிருக்கிறார். சமூகத்தின் அமைதிக்குத் தீங்கிழைக்காத அந்த நபர்கள் பொதுவாகக் கேலிக்குரியவர்களாக தென்படுவார்கள் என்ற உண்மையைக் காட்டி, நாம் அறியாத அவர்களது இன்னொரு பக்கத்தையும் காட்டுகிறார்.

எதிர்பாராத சந்திப்பினால் சாதாரண மனிதன் ஒருவன், இதுவரை தான் காணாத வாழ்வொன்றைச் சில மணி நேரங்கள் காண்பதாகக் காட்டுகிறது ‘அடியோஸ் அமிகோ’. இதனை ’பேண்டஸி’ என்று மட்டும் வகைப்படுத்திவிட முடியாது. இப்படியொரு கதையை ‘யதார்த்தமாக நிகழ்வது’ போன்று நம்ப வைத்திருப்பது இயக்குனரின் திறமை.

’மெலோடிராமா’ என்று சொல்லத்தக்க கதையைத் திரையில் காட்டுகையில் ‘ஸ்லோ’வாக காட்சிகள் நகர்வதாகத் தோன்றுவது இயல்பு. அதேநேரத்தில், அது ‘ஓவர்டோஸ்’ ஆகவும் மாறிவிடக் கூடாது. பின்பாதியில் அதனைக் கவனிக்கத் தவறியிருக்கிறார் நஹாஸ் நாசர். போலவே, படம் முழுக்க மது அருந்தும் காட்சிகள் அதிகமிருப்பதும் ‘துருத்தலாக’ தெரிகிறது.

ஆனால், அதுபோன்ற குறைகளைப் புறந்தள்ளும் அளவுக்குத் தாரை தாரையாக கண்ணீர் கொட்டும் அளவுக்கு கிளைமேக்ஸ் காட்சியைத் தந்திருக்கிறார் இயக்குனர். அந்தக் கண்ணீர் நம்மிடம் இருந்து வெளிப்படுவதற்கு, அதற்கு முன்பிருக்கும் அனைத்து காட்சிகளுமே காரணம். அதனால், ‘அடியோஸ் அமிகோ’வைப் பார்த்து, ரசித்து, கொண்டாடலாம்!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment