‘என்னடா ஒரே அழுவாச்சியா இருக்கு’ என்ற எண்ணத்தைச் சிறு வயதில் பார்த்த சில படங்கள் தோற்றுவித்திருக்கும். கண்ணீரில் நனைத்தெடுக்கும் சென்டிமெண்ட் கதைகளைக் கண்டாலே தெறித்து ஓடும் அளவுக்கான அனுபவத்தை அப்படங்கள் தந்திருக்கும். அறுபது, எழுபதுகளிலேயே அப்படங்களின் வரவு அருகிவிட்டாலும், அவ்வப்போது ஓரிரு திரைப்படங்கள் அந்த வகைமையில் வந்து கொண்டுதானிருக்கின்றன.
முழுக்கச் சோகம் கவ்விக் கிடந்தாலும், ஆங்காங்கே வாழ்வின் மீதான நம்பிக்கையைத் தெளிக்கும் காட்சிகளைக் கொண்ட அவ்வகைமை படங்களை ‘மெலோடிராமா’ என்று சொல்வதே பொருத்தம். இன்று அதையும் செம்மைப்படுத்தி ‘slice of life’ என்கின்றனர். ஆங்கிலத்தில் ‘பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ போன்ற சில படங்கள் அந்த வகையறாவில் சேரும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் அப்படி எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று ‘அக்டோபர்’. நடைபிணமாக வாழும் ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கிற, அவரோடு சேர்ந்து வாழத் துடிக்கிற ஒருவரைக் காட்டிய படமது.
முழுப்படத்தையும் பார்த்து முடித்ததும், நாமே அப்படியொரு காதலுக்குள் சிக்கிக் கொண்டது போலச் சோகமாக உணர வைக்கும்.
ஆனால், அதனைச் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திர வார்ப்பும் திரைக்கதை ட்ரீட்மெண்டும் ‘மின்மினி’யை சிறப்பானதாக உணர வைக்கிறது.
சரி, எந்தளவுக்கு இப்படம் பார்வையாளர்களைத் திரையோடு நெருக்கமாக உணர வைக்கிறது?
பகையும் நட்பும்..!
பாரி முகிலன் (கௌரவ் காளை), ஊட்டியிலுள்ள ஒரு உறைவிடப் பள்ளியில் படித்த்து வருகிறார். பள்ளியில் எல்லோரது விருப்பத்திற்குரிய நபராக இருக்கிறார். கேலி, கிண்டல், விளையாட்டு என்றிருக்கும் அவரது இயல்பு, புதிதாகப் பள்ளியில் சேர்ந்த சபரிக்கு (பிரவீன் கிஷோர்) பிடித்தமானதாக இல்லை.
சபரியிடம் நெருங்கிப் பழக முயற்சிக்கிறார் பாரி. விளையாட்டாக அவரைச் சீண்டுகிறார். அது, அவர்களிடையே விரிசலை அதிகமாக்குகிறது. பாரியிடம் சபரி பகைமை கொள்ளக் காரணமாகிறது. ஆனாலும், என்றாவது ஒருநாள் தங்கள் நட்பு மலரும் என்று எண்ணுகிறார் பாரி.
இந்த நிலையில், பள்ளியில் இருந்து மாணவர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல ஏற்பாடாகிறது. அந்த பயணத்தின் போது, அவர்கள் செல்லும் வாகனம் விபத்தில் சிக்குகிறது.
அப்போது அதில் இருந்தவர்களைக் காப்பாற்றி வெளியேற்றுகிறார் பாரி. இறுதியாக, மயங்கிக் கிடக்கும் சபரியை மீட்டு வாகனத்தில் இருந்து வெளியேற்றுகிறார். அந்தக் கணத்தில் அந்த வாகனத்தின் ‘ஆயில் டேங்க்’கில் தீப்பற்ற, தூக்கி வீசப்படுகிறார் பாரி.
தன் கண் முன்னே பின்னந்தலையில் அடிபட்டு பாரி மயக்கமுறுவதைக் காண்கிறார் சபரி. அவரால் உடலை அசைக்க முடிவதில்லை.
அடுத்த சில நாட்களில் மருத்துவமனையில் பாரி இறந்துபோக, அவரது உடலுறுப்புகள் ஐந்து பேருக்குப் பொருத்தப்படுகின்றன.
பாரியின் இதயம் பிரவீணாவுக்குப் (எஸ்தர் அனில்) பொருத்தப்படுகிறது. அதுநாள்வரை தன்னைப் பலவீனமாக உணர்ந்த அச்சிறுமி, அந்த மாற்றத்திற்குப் பின் வாழ்வைப் புதிதாக உணர்கிறார். அது பாரி தந்ததாக எண்ணுகிறார்.
பாரியைக் குறித்து அறியும் நோக்கில், அவர் படித்த பள்ளியிலேயே சேர்கிறார். அங்கு, சபரியை நேரில் காண்கிறார்.
சபரியின் செயல்கள் அனைத்தும் அவருக்கு வினோதமாகப் படுகின்றன. தனக்குப் பிடித்தவற்றைத் துறந்துவிட்டு, பாரிக்குப் பிடித்தமானது அனைத்தையும் செய்து வருகிறார்.
‘பாரி தன்னுயிரைக் காப்பாற்ற அவர் உயிரைத் தந்தது’ குறித்த குற்றவுணர்ச்சி நிறைந்திருப்பதைக் காண்கிறார். ‘அது தேவையில்லை’ என்று சொல்ல முயற்சிக்கிறார் பிரவீணா. அதற்கான சந்தர்ப்பங்கள் அமையாமலே போகிறது.
திடீரென்று ஒருநாள், சபரி அந்த பள்ளியை விட்டுப் போகிறார்.
ஆறு ஆண்டுகள் கழித்து, ஒரு நீண்ட பயணத்தில் சபரியும் பிரவீணாவும் சந்திக்கின்றனர். உண்மையைச் சொன்னால், சபரி வருவதை முன்கூட்டியே அறிந்து அவரைப் பின்தொடர்கிறார் பிரவீணா.
சபரியைக் குற்றவுணர்வில் இருந்து பிரவீணா மீட்டெடுத்தாரா, இல்லையா என்று சொல்கிறது ‘மின்மினி’யின் மீதி.
மனித வாழ்வே ஒரு மின்மினிப் பூச்சியின் மினுமினுப்பைப் போலானது தான் என்று சொல்வதைப் போன்று இக்கதையில் இருளும் வெளிச்சமும் கலந்து நிற்கின்றன.
இமயமலையின் அழகு!
‘மின்மினி’யின் முன்பாதிக் கதை ஊட்டியிலுள்ள ஒரு பள்ளியொன்றில் நிகழ்வதாகவும், பின்பாதி முழுவதும் இமயமலைப் பகுதியில் அமையும் பயணத்தை மையப்படுத்தியதாகவும் அமைந்திருக்கிறது.
அதனால், இரண்டாம் பாதி முழுக்க இமயமலைச் சரிவுகளின் அழகையும் அங்குள்ள மக்களின் வாழ்வையும் நாம் காண வாய்ப்பு கிடைக்கிறது. துளியளவு என்றபோதும் அதுவே நம்மை மலைப்பில் ஆழ்த்துகிறது.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, வெறுமனே இமயமலையின் அழகை மட்டும் அடிக்கோடிட்டுக் காண்பிக்க முயற்சிக்கவில்லை. அதேநேரத்தில், கதையின் இரு மையப் பாத்திரங்கள் அபாயகரமான நிலப்பரப்பில் நடமாடுகின்றன என்பதைக் காண்பித்திருப்பது அருமை.
அழகியகூத்தன், சுரேன்.ஜியின் ஒலி வடிவமைப்பு சில இடங்களில் வழக்கத்தை விட அதிகமாக ஒலிக்கும் சத்தங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது.
இமயமலை பகுதிகளில் வாழும் மக்களையும் அவர்களது கலாசாரத்தையும் காட்டுவதில் முக்கியப் பங்காற்றுகிறது ஷெரிக் குர்மித் குங்யாமின் கலை வடிவமைப்பு.
ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவின் படத்தொகுப்பு கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருகிறது. அவற்றின் எண்ணவோட்டத்தில் இருந்து விடுபட்டு, அடுத்த காட்சிக்கு நகரும் வகையில் சில காட்சிகளில் இறுதி ஷாட் சில நொடிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான் பின்னணி இசையில் ஒரு சில வாத்தியங்களை மட்டும் பயன்படுத்தி, மையப்பாத்திரங்களின் மனப் போராட்டங்களை நாமும் உணர வைக்கிறார். வழக்கமாக நாம் காணும் படங்களில் இருந்து அவ்விசை விலகியிருப்பது, அவரை கூர்ந்து நோக்க வைத்திருக்கிறது.
‘இரு பெரும் நதிகள்’ இந்த ஆண்டின் ஹிட் பாடல்களில் ஒன்றாக இடம்பெறவல்லது.
சபரி ஆக வரும் பிரவீன் கிஷோர், கிளைமேக்ஸ் காட்சியில் நம்மை அழ வைக்கிறார்.
வாழ்வின் மீதான நம்பிக்கையையும் காதலையும் மிகுதியாகக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகையில் ‘ஆஹா’ என்றிருக்கிறது பிரவீணாவாக வரும் எஸ்தர் அனிலின் நடிப்பு.
சுமார் ஆறு ஆண்டு கால இடைவெளியில் நிகழும் காட்சிகளைக் காட்ட, உண்மையாகவே அத்தனை ஆண்டுகள் கழித்து இதில் எஸ்தரும் பிரவீனும் நடித்துள்ளனர். அப்போதும், முன்பாதியில் சுமந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும்விதமாக முகபாவனைகளை வெளிப்படுத்தியிருப்பது அபாரம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பியும் கூட.
இதில் பாரி முகிலனாக நடித்துள்ள கௌரவ் காளை திரையில் சில நிமிடங்களே வருகிறார். ஆனால், ’படம் முழுக்க அவர் வருகிறார்’ எனும் அளவுக்குத் திறம்பட அமைந்துள்ளது அவரது இருப்பு.
இவர்கள் தவிர்த்து இதர பாத்திரங்கள் சில படத்தில் இடம்பெற்றுள்ளன. சந்தோஷ் பிரதாப், நிவேதா சதீஷ் இதில் கௌரவ வேடத்தில் தலைகாட்டியிருக்கின்றனர்.
இயக்குனரின் அர்ப்பணிப்பு!
ஒரு படத்தில் இடம்பெறும் இரண்டு பாத்திரங்களை ஆறாண்டு கால இடைவெளியில் திரையில் காட்ட வேண்டும் என்று இயக்குனர் ஹலீதா ஷமீம் யோசித்திருப்பது வழக்கத்திற்கு மாறானது. அதற்கு, அப்படத்திற்காகத் தமது வாழ்நாளின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டும். அதனைச் செய்திருப்பதற்காக, அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஊட்டியிலுள்ள ரெசிடென்சியல் பள்ளி வாழ்க்கை, இமயமலைக்குப் பயணம் என்று கொஞ்சம் ‘காஸ்ட்லி’யான வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது இப்படம். அதனால், இதில் வரும் பாத்திரங்களோடு ரசிகர்கள் அனைவரும் தங்களைப் பிணைத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அதேநேரத்தில், வாழ்வில் எப்போதோ, எதற்காகவோ நிகழ்ந்த ஏதேனும் ஒன்றுக்காகக் குற்றவுணர்ச்சியில் உழல்வது சரியல்ல என்று அழுத்தமாகச் சொல்வதனைத் தனியே பாராட்டலாம்.
தம் மீது அன்பு காட்டியவரிடம் அதனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டு வருத்தப்படுபவர்களை ஈர்க்கும் விதமாகவே இதன் திரைக்கதை உள்ளது.
நேரடியாக வசனங்களில் அவ்விஷயங்களைச் சொல்லாமல் விட்டிருப்பது சிலருக்கு அசூயையைத் தரலாம்.
இரண்டாம் பாதியில் நாயகன், நாயகி இருவருமே தத்துவார்த்தமாகப் பேசிக்கொள்ளும் இடங்கள் ‘அடங்கொன்னியா’ என்று பற்களைக் கடிக்க வைக்கின்றன. அதேநேரத்தில், சோகத்தில் உழல்பவருக்கு அவ்வசனங்களும் காட்சியமைப்பும் மருந்தாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
ஒருவரது பிரச்சனைகளைச் சொல்லி, அதற்கான தீர்வுகளைச் சில சம்பவங்களோ, நபர்களோ ஏற்படுத்துவதாகச் சில திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் நகைச்சுவைக்கும் ஒரு பங்கு இருக்கும். 2022-ல் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ உட்படச் சில தமிழ் படங்களை அதற்கு உதாரணம் காட்டலாம். இதில் அந்த வாய்ப்பினைத் தவற விட்டிருக்கிறார் இயக்குனர் ஹலீதா ஷமீம். ‘தனக்கு இது போதும்’ என்று அவர் கருதியிருக்கலாம்.
‘இயற்கையிடம் நம்மை ஒப்படைத்தால், அது நம் வாழ்வைத் தீர்மானித்துக்கொள்ளும்’ என்கிறது ‘மின்மினி’. இது நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றது தான். ‘விதி வழி நடப்போம்’ என்பதற்கும் இதற்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு.
‘நாமாக வலிந்து எதையும் நம் வாழ்வுக்குள் திணித்துக்கொள்ள வேண்டாம்’ என்பதனை இப்படம் தரும் பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.
மிக முக்கியமாக, நாயகன் மீது நாயகி கொள்ளும் ஈர்ப்பு எந்தச் சூழலில் உருவானது என்பதைக் காட்டியிருப்பது கொஞ்சம் புதிதாக இருக்கிறது. வழக்கமான ரொமாண்டிக் படங்களில் இருந்து வேறுபட அது காரணமாக விளங்குகிறது.
‘மின்மினி’ ஒரு மெலோடிராமா. அதற்கேற்ப இதன் திரைக்கதை ‘ஸ்லோ’ ஆகவும் நகரும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பரபரவென்று நகரும் திரைக்கதைகளைப் பார்த்துப் பழகியதால், அது குறையாகவே தென்படும். அதனையும் மீறி ‘மின்மினி’யை ரசிக்கத் தொடங்கினால் போதும்; அடுத்த சில நிமிடங்களில் திரையோடு ஒன்றிப்போவோம். அதற்கேற்ற உள்ளடக்கம் இதில் உண்டு என நிச்சயமாய் சொல்லலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்