தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

திரைத் தெறிப்புகள் – 16:

*
சில பாடல்கள் வெளியானதுமே பெரிதும் கவனம் பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

பாடலாசிரியரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் துடிப்புமிக்க இளமைக் காலத்தை நினைவூட்டும் இந்தப் பாடலுக்கு தேர்ந்த ரசிகர்களாக ரசித்து இசையமைத்தவர்கள் எம்.எம். விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி.

1956-ம் ஆண்டு வெளிவந்த ‘பாசவலை’ படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகள் இவை.

இந்தப் பாடல் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் எம்.எஸ். விஸ்வநாதனும் நெருக்கமாவதற்கு காரணமாக இருந்த பாடலும் இதுவே.

பட்டுக்கோட்டையாருக்கு திரையுலகில் அழுத்தமான தடம் பதிக்க உதவிய பாடலும் இதுதான்.

“குட்டி ஆடு மாட்டிக்கிட்டா
குள்ளநரிக்குச் சொந்தம்.
குள்ளநரி மாட்டிக்கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்.
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்.
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடி தான் சொந்தம்”

– என்று துவங்கும் பாடலை மிக அருமையாகப் பாடியிருப்பார் இசைச் சித்தரான சிதம்பரம் ஜெயராமன். அதற்குப் பொருத்தமான உடல்மொழியோடு நடனமாடியபடி நடித்திருப்பார் பழம்பெரும் நடிகரான எம்.கே. ராதா.

அந்தப் பாடலில் இடம்பெற்ற கீழ்க்கண்ட வரிகளை இப்போது கேட்டாலும் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கும்.

அத்தனை இளம் வயதில் பட்டுக்கோட்டையார் எப்படி பட்டிணத்தாரைப் போல தத்துவார்த்த முதிர்ச்சியோடு எழுதி இருக்கிறார் என்பதைக் கேட்கும்போது வியப்பாகவும் இருக்கும்.

“கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா.
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோடே சொந்தம் மாறுமடா – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும்போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா”…..

சுதந்திரத்திற்குப் பிறகு நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதியான வியாபாரிகளுக்கும், வியாபாரியான அரசியல்வாதிகளும் இணைந்து தாங்கள் கண்ணில் பட்டதை எல்லாம் அதிகார பலத்துடன் சுருட்டிக் கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டம் வரை பட்டுக்கோட்டையாரின் கீழ்க்கண்ட சொற்கள் பொருத்தமாகவே இருக்கின்றன.

“பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலை செய்த
பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்,
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா”.

என்று நிறைவடையும் வரிகள் ஜனநாயக நாட்டில் நடந்து வரும் செயற்கைப் பேரிடரை நமக்கு சொல்லாமல் சொல்லும் வல்லமையுடன் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

நிஜமாகவே தனது எளிய சொற்களின் மூலம் மக்கள் கவிஞனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

Comments (0)
Add Comment