அந்தகன் – மீண்டும் புகழ் வெளிச்சத்தில் பிரசாந்த்!

தொண்ணூறுகளில் தமிழ் திரையுலகில் நடிகர் பிரசாந்துக்கென்று ஒரு தனியிடம் இருந்தது. அதற்கேற்ப அவரது முதல் படமான ‘வைகாசி பொறந்தாச்சு’ தொடங்கி ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘செம்பருத்தி’, ‘லாத்தி’, ‘ஆணழகன்’, ‘ஜீன்ஸ்’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘காதல் கவிதை’, ‘ஜோடி’, ‘பார்த்தேன் ரசித்தேன்’ என்று பல படங்கள் பெரிய வெற்றிகளைப் பெற்றன.

ஆனால், 2000வது ஆண்டுக்குப் பிறகு அவர் நடித்தவற்றில் ‘தமிழ்’, ‘வின்னர்’ ஆகியன மட்டுமே பெரிய கவனிப்பைப் பெற்றன. அதன் தொடர்ச்சியாக, அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.

2018-ல் வெளியான ‘ஜானி’ என்ற படத்திற்குப் பிறகு பிரசாந்தின் படங்கள் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து, தற்போது அவர் நடிப்பில் ‘அந்தகன்’ வந்திருக்கிறது.

இது, ஸ்ரீராம் ராகவன் இந்தியில் இயக்கிய ‘அந்தாதுன்’ என்ற படத்தின் ரீமேக். விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற படமது.

தமிழில் இதனைப் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘அந்தகன்’ படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது? நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான இப்படம் பிரசாந்தின் ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறதா?

பரிதாபத்தைத் தேடும் இசைஞன்!

கிருஷ்ணா (பிரசாந்த்) ஒரு பியானோ இசைக்கலைஞர். பாண்டிச்சேரியின் ஒரு பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வருபவர்.

பியானோ வகுப்புகள் எடுப்பது என்று பிழைப்பை ஓட்டி வரும் அவருக்கு, லண்டன் சென்று பியானோ கலைஞனாகப் புகழ் பெற வேண்டும் என்பது பெருங்கனவு. அதற்கேற்ப, அங்கு நடைபெறும் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

‘இன்னும் இரண்டு மாதங்களில் லண்டன் செல்ல வேண்டும்’ என்ற வேட்கையோடு இருக்கும் கிருஷ்ணா, ஒருநாள் சாலையோரம் நடந்து செல்லும்போது விபத்துக்குள்ளாகிறார். பைக்கில் வந்த ஜூலி (பிரியா ஆனந்த்) என்ற பெண் அவர் மீது தவறுதலாக இடித்துவிடுகிறார்.

கிருஷ்ணா பார்வைத்திறனற்றவர் என்பதை உணர்ந்ததும், அவரை வீட்டில் கொண்டுபோய்விடுவதாகச் சொல்கிறார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மெல்லத் தொடங்குகிறது அவர்களது நட்பு.

பிறகு, கிருஷ்ணாவைத் தங்களது ரெஸ்டாரெண்டில் பியானோ வாசிக்கச் சொல்கிறார் ஜுலி. ரெஸ்டாரெண்டில் கிடைக்கும் டிப்ஸ் கிருஷ்ணாவின் லண்டன் கனவைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக உள்ளது. பழகிய சில நாட்களிலேயே கிருஷ்ணாவைக் காதலிக்கத் தொடங்குகிறார் ஜுலி.

இந்த நிலையில், அந்த ரெஸ்டாரெண்டுக்கு வரும் நடிகர் கார்த்திக் (கார்த்திக்) கிருஷ்ணாவின் பியானோ இசைக்கும் திறமையைக் கண்டு வியக்கிறார். அவரைத் தன் வீட்டுக்கு வந்து, மனைவி சிமியின் முன்னால் தனது படப் பாடல்களை பியானோவில் இசைக்கச் சொல்லி ‘அட்வான்ஸ்’ பணம் கொடுக்கிறார்.

அதற்கடுத்த நாள், அவர்களது திருமண நாள். அதனால், சிமியை (சிம்ரன்) ஆச்சர்யப்படுத்தும் விதமாக அந்த நிகழ்வு இருக்க வேண்டும் என்பது கார்த்திக்கின் எண்ணம்.

கார்த்திக் சொன்னது போலவே, அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு முன்னதாக அவரது அபார்ட்மெண்டுக்கு செல்கிறார் கிருஷ்ணா. ஆனால், கதவைத் திறக்கும் சிமி அவரை வீட்டுக்குள் அழைத்துச் செல்லத் தயங்குகிறார்.

அந்த நேரத்தில், எதிர்வீட்டில் வசிக்கும் பெண்மணி (லீலா சாம்சன்) வெளியே வர, உடனே கிருஷ்ணாவை வீட்டுக்குள் அழைத்துப் போகிறார். உள்ளே சென்றதும், பியானோவில் கார்த்திக் நடித்த படங்களின் பாடல்களை இசைக்கத் தொடங்குகிறார் கிருஷ்ணா.

அவர் இசைத்துக் கொண்டிருக்கும்போது, ஹாலில் இறந்த நிலையில் கார்த்திக் கிடக்கிறார். அந்த பாடலை இசைத்ததும் பதற்றமடையும் கிருஷ்ணா, சிமியிடம் “பாத்ரூம் செல்ல வேண்டும்” என்று கூறுகிறார்.

சிமி அவரது கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். பாத்ரூமிலோ, கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார்.

திரும்பி வருகையில், கார்த்திக் இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு கிருஷ்ணா அதிர்ச்சியடைகிறார். அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, மேலும் சில பாடல்களை இசைக்கிறார்.

அந்த கணத்தில், கிருஷ்ணாவை வெளியே அனுப்புவதிலேயே சிமியும் அந்த நபரும் குறியாக இருக்கின்றனர். கார்த்திக் வீட்டுக்குள் நுழைந்துவிட்டு உடனே திரும்பிச் செல்வது போல நாடகமாடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார் கிருஷ்ணா. ஒரு கொலை நடந்திருப்பதாகப் புகார் தெரிவிக்கிறார். அப்போது, இன்ஸ்பெக்டர் அங்கு வருகிறார். அந்த நபர், கார்த்திக் வீட்டில் சிமியுடன் பார்த்த அதே நபர். அவரது பெயர் மனோகர் (சமுத்திரக்கனி).

உடனே, அங்கிருக்கும் கான்ஸ்டபிளிடம் தனது பூனை காணாமல் போனதாகப் புகார் தர வந்திருப்பதாகச் சொல்கிறார் கிருஷ்ணா. அவரைக் கண்டு அதிர்ச்சியடையும் மனோகர், ‘உண்மையிலேயே அவர் கண் பார்வைத்திறன் அற்றவரா’ என்று அறிய விரும்புகிறார்.

கிருஷ்ணாவை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அதன்பிறகு நடக்கும் சில சம்பவங்கள் கிருஷ்ணாவின் வாழ்வை அடியோடு புரட்டிப் போடுகின்றன.

இறுதியில் கிருஷ்ணாவின் லண்டன் கனவு நனவானதா என்பதோடு இப்படம் முடிவடைகிறது.

மேற்கண்ட கதையைக் கேட்டதும், கிருஷ்ணாவுக்கு உண்மையிலேயே கண்பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்ற கேள்வி நமக்குள் எழும். ஆனால், அந்தக் கேள்விக்கான பதில் இடைவேளையிலோ, பின்பாதியிலோ சொல்லப்படுவதற்குப் பதிலாகத் திரைக்கதையின் தொடக்கத்திலேயே அதனைத் தெளிவுபடுத்திவிடுகிறது ‘அந்தகன்’.

அதனால், கார்த்திக் வீட்டில் நடக்கும் களேபரங்கள் ‘த்ரில்லர்’ ஆக மட்டுமல்லாமல் ‘பிளாக் ஹ்யூமர்’ ஆகவும் இருக்கின்றன. இடைவேளைக்குப் பிறகு இந்தக் கதையில் வரும் சில பாத்திரங்களும், அவற்றின் செயல்பாடுகளும் கூட அப்படித்தான் இருக்கின்றன. அதுவே ‘அந்தகன்’ படத்தின் யுஎஸ்பி.

பரிதாபத்தையும் உடனடிக் கவன ஈர்ப்பையும் பெறுவதற்காகப் பார்வைத்திறன் குறைபாடு உடை இசைக்கலைஞராகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது, இக்கதையில் வரும் கிருஷ்ணா எனும் முதன்மை பாத்திரம். எதிர்பாராமல் சந்திக்கும் ஒரு பெண்ணுக்காக, தனது நடிப்பைத் தொடர்வதில் அவர் வெளிப்படுத்தும் குறைபாடுகளால் உருவாகும் இடியாப்பச் சிக்கல்களைச் சொல்கிறது இப்படம்.

பிரசாந்தின் கம்பேக்!

இந்த படத்தில் பிரியா ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி, வனிதா, யோகிபாபு, ஊர்வசி, லீலா சாம்சன் உட்படச் சுமார் இரண்டு டஜன் பேர் நடித்துள்ளனர்.

சமுத்திரக்கனி – வனிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் அழுத்தமாகத் திரையில் வெளிப்பட்டிருக்கலாம் எனுமளவுக்கு உள்ளன. நாயகன் வீட்டருகே வசிக்கும் சிறுவனாக வரும் பூவையாரும் கூடத் திரையில் மிகச்சில நொடிகளே வந்து போகிறார்.

ஒரிஜினல் படத்தில் உள்ளது போல ஊர்வசி, யோகிபாபுவை எப்படி இதில் இயக்குனர் காட்டியிருப்பார் என்று உற்றுநோக்கினால், நாம் குறை சொல்லாத வகையில் அக்காட்சிகளைத் தந்திருக்கிறார் தியாகராஜன். ஆனால், அப்பாத்திரங்களின் வில்லத்தனத்தை முடிந்தவரையில் குறைத்துக் காட்ட விரும்பியிருக்கிறார். அதற்குப் பதிலாக, வேறு நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.

மறைந்த இயக்குனர் மனோபாலா, பெசன்ட் ரவி, லீலா சாம்சன் போன்றவர்களும் இதில் நடித்துள்ளனர்.

பிரசாந்த் ரசிகர்களுக்கு ஒரு ‘ட்ரீட்’ ஆக இருக்குமளவுக்கு, அவர் இதில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கட்டுமஸ்தான உடல்வாகு, நடனமாடுவதற்கான நளினம், முகபாவனைகளில் இறுக்கமின்மை போன்றவற்றைக் காணும்போது, அடுத்தடுத்து பல படங்களை அவர் தருவார் எனும் நம்பிக்கை பிறக்கிறது. அதனால், இடைப்பட்ட காலத்தில் அவர் தந்த படங்களை மறக்கும் அளவுக்கு ஒரு ‘கம்பேக்’ படமாக ‘அந்தகன்’ உள்ளது.

இந்தப் படத்தில் கார்த்திக், நடிகர் கார்த்திக் ஆகவே திரையில் வந்து போயிருக்கிறார். அந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடில்லை. நிஜத்தையும் நிழலையும் குழப்பிக் கொள்வதற்கு அது வழி வகுக்கும். அதற்குப் பதிலாக, கார்த்திக் நடித்த படங்களின் பாடல்களைக் காண்பித்துவிட்டு அவரது பெயரை மாற்றிக் காட்டியிருக்கலாம். அது இப்படத்திற்கு ஒரு ‘திருஷ்டி பொட்டு’.

அதேநேரத்தில், ‘அந்தாதுன்’ படத்தில் ஆயுஷ்மான் குரானாவைக் கண்டவர்களுக்கு, இப்படத்தில் பிரசாந்தின் இருப்பு முழுமையான திருப்தியைத் தராது. அது, ‘ரீமேக்’ படங்களைக் காணும்போது நிகழும் ஒரு விஷயம்.

ஸ்ரீராம் ராகவன் எழுதிய ஒரிஜினல் கதையில் சிற்சில மாற்றங்களைச் செய்து தமிழில் தந்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன். வசனங்களைத் தமிழில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆக்கியிருக்கிறார்.

இந்தக் கதை பாண்டிச்சேரியில் நிகழ்வதாகக் காட்டியிருப்பது, அதன் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகிறது.

ரவி யாதவ் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரிஜினல் படத்தில் இருக்கும் ‘செவ்வண்ணம்’ இதிலும் தெரியும் வண்ணம் காட்சிகளைப் படம்பிடித்திருக்கிறார்.

சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில் காட்சிகள் செறிவாக அடுக்கப்பட்டுள்ளன. ஆனால், விடுபட்ட காட்சிகள் உருவாக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க, அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஆங்காங்கே சில நிமிடங்கள் மட்டும் ஒலிக்கின்றன. கிளைமேக்ஸில் வரும் ‘என் காதல்’ சட்டென்று நம்மை ஈர்க்கிறது.

அதேநேரத்தில் படம் முடிந்த பின்னர் திரையில் ஓடும் ‘அந்தகன் ஆந்தம்’, அதன் கொரியோகிராபியின் காரணமாக வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. ஆனால், அது படம் தந்த காட்சியனுபவத்தோடு கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை.

பின்னணி இசையில் வழக்கம்போல நம்மை அசத்தியிருக்கிறார் ச.நா.

செந்தில் ராகவனின் கலை வடிவமைப்பு, பெரும்பாலும் ‘அந்தாதுன்’ படத்தைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்துள்ளது. ராம்குமாரின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, கதையின் தன்மைக்கேற்ப அமைந்துள்ளது.

ஒரு இயக்குனராக, தியாகராஜன் இதில் சிறப்பான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், ‘கல்ட் கிளாசிக்’ ஆக மாறிய ஒரு படத்தினைத் தமிழில் ‘ரீமேக்’ செய்கையில் வழக்கமான ‘கமர்ஷியல்’ படம் போலத் தோற்றமளிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். நல்லவேளையாக, அந்த எண்ணம் திரைக்கதையிலோ, பாத்திர வார்ப்பிலோ பிரதிபலிக்கவில்லை.

திரைக்கதையில் தெளிவின்மை!

‘அந்தாதுன்’ படத்தில் ஒரு முன்னாள் திரைப் பிரபலம் எப்படிக் கொலையானார் என்பது தான் ‘ஹைலைட்’டாக இருக்கும்.

அந்த பாத்திரத்தின் இயல்பு, அவரது மனைவியாக வருபவரின் அலட்டல் எல்லாம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். இதில் சிம்ரனை முன்னிலைப்படுத்திய அளவுக்குக் கார்த்திக்கைக் காட்டவில்லை.

உண்மையைச் சொன்னால், அப்பாத்திரம் கொல்லப்படுவது படத்தில் இடம்பெறவே இல்லை.

அதேபோல, ஒரிஜினலில் இருப்பது போலல்லாமல் கிளைமேக்ஸ் பகுதியில் சில காட்சிகளை இடம் மாற்றிக் காட்டுகிறது ‘அந்தகன்’. அது, ‘நாயகன் என்பவன் நல்லவன்’ எனும் தொனியை வெளிப்படுத்துகிறது. உண்மையைச் சொன்னால், அது போன்ற கற்பிதங்களை ‘அந்தாதுன்’ உடைத்திருக்கும்.

கிருஷ்ணா உண்மையிலேயே பார்வைத்திறன் குறைபாடு உடையவரா என்று அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு சிறுவன் சந்தேகப்படுவதாகவும் இதில் காட்சிகள் உண்டு. இடைவேளைக்குப் பிறகு, பார்வை தெரியாமல் கிருஷ்ணா தட்டுத் தடுமாறி வீதிகளில் ஓடுவதாகவும் சில காட்சிகள் உண்டு. அவை ஒரிஜினல் படம் தந்த திருப்தியைத் தரவில்லை.

இப்படிச் சில குறைகள் ‘அந்தகன்’ திரைக்கதையில் இருக்கும் தெளிவின்மையைக் காட்டுகின்றன.

மற்றபடி, ஒரிஜினல் படத்தில் இருப்பது போலவே லொகேஷன்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வசனங்களில் கூட பெரிய மாற்றங்கள் இல்லை.

நிச்சயமாக, ‘அந்தகன்’ படத்தை பிரசாந்தின் ‘கம்பேக்’ என்று சொல்லலாம். அதேநேரத்தில், தொண்ணூறுகளில் திரையில் நாயகர்கள் காட்டப்பட்டதற்கும் தற்காலத்திற்குமான வித்தியாசத்தை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப, யதார்த்தமாக நாம் நேரில் சந்திக்கும் ஒரு மனிதனைப் போலத் திரையில் தோன்றி, அந்த திரைக்கதையோடு பொருந்தி நிற்க வேண்டும். அதன் வழியே, அவர் மீது புகழ் வெளிச்சம் மேலும் அதிகமாகும்.

‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘தமிழ்’ உட்படப் பல படங்களில் பிரசாந்த் அதனைக் கையாண்டவர் தான். ’அந்தகன்’ படத்திலும் அதனை வெளிப்படுத்திய காரணத்தாலேயே, அவரது இருப்பு நம்மைக் கவர்கிறது.

‘அதீத ஹீரோயிசம்’ தவிர்த்து, ‘க்ரிஞ்ச்’ என்று சொல்லப்படாவண்ணம் இன்றைய ரசிகர்களிடம் ‘பாஸ்மார்க்’ வாங்குவதே பெரும்பாடு. அதற்கு மத்தியில், பிரசாந்த் தனது காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் அளவுக்கு அமைந்துள்ளது ‘அந்தகன்’!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment