உச்ச நட்சத்திரங்கள் எல்லோருமே, தாங்கள் வளர்ந்து வரும் நேரத்தில் ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்கள், ஆண்டுக்கு பத்து பதினைந்து சினிமாக்களைக் கூட கொடுத்துள்ளார்கள்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி ரஜினி, கமல் வரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு என இந்த நட்சத்திரங்கள் படங்களை குறைத்துக்கொண்டனர்.
இப்போது ‘அல்டிமேட் ஸ்டார்’ ஆக உயர்ந்துள்ள அஜித்தும் அப்படித்தான். 20 வருடங்களுக்கு முன்பு, அஜித் ஒரே நேரத்தில் இரண்டு மற்றும் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டுத் தான் அடுத்த திரைப்படத்தில் நடிப்பது என்பதை கொள்கையாகவே வைத்துள்ளார், அஜித். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தால் குழப்பம் ஆகிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.
20 வருடங்களுக்கு பிறகு இப்போது தான், அவர் ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் .
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த ஆண்டு எச். வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு’ படத்தில் கடைசியாக அஜித் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதன் தொடர்ச்சியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித். ‘லைகா’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை தொடங்குவதிலேயே தாமதம் ஏற்பட்டது. இதனால் அஜித், ஓராண்டு வீட்டிலேயே இருக்கும்படி ஆயிற்று.
ஒருவழியாக விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. அங்கு நிலவிய மோசமான சீதோஷ்ண நிலை, லைகா நிறுவனத்தின் பொருளாதார நிலை போன்ற காரணங்களால் விடாமுயற்சிக்கு ‘பிரேக்’ விடப்பட்டது.
மறுபடியும் ஓராண்டு ஓய்வில் இருப்பதா? என பதற்றமடைந்த அஜித், உடனடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ எனும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார்.
அஜர்பைஜானில், விடாமுயற்சி ‘ஷுட்டிங்’ முடிந்து விட்டது. இப்போது ஐதராபாத்தில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அதே ஐதராபாத்தில் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பும் நடக்கிறது. இந்தப் படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சி இப்போது படமாக்கப்படுகிறது.
இந்த இரு படங்களிலும் இரவு பகலாக நடித்து வருகிறார் அஜித். பகலில் விடாமுயற்சி. இரவில் குட் பேட் அக்லி. குறிப்பிட்ட காலத்தில் இரு சினிமாக்களையும் முடித்துக்கொடுத்து விட வேண்டும் என்ற மன உறுதியோடு உள்ளதால், ஒரே நாளில் 21 மணி நேரம் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித்.
இது குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அளித்த விளக்கம் :
“விடாமுயற்சி படப்பிடிப்பு, ஜுன் அல்லது ஜூலை மாதம் முடித்திருக்க வேண்டும். வரும் பொங்கல் திருநாளில் படம் ‘ரிலீஸ்’ என அறிவிக்கப்பட்டது.
எதிர்பாராத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டு படங்களையும், குறிப்பிட்ட காலத்தில் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதால், கடந்த 5 ஆம் தேதியிலிருந்து அஜித் தினமும் 21 மணி நேரம் நடித்துக் கொடுக்கிறார்” என்றார்.
அஜித் முடிவு – ‘வெரிகுட்’.
– பாப்பாங்குளம் பாரதி.