நன்றாக நடிக்க, நடனமாட, சண்டைக்காட்சிகளில் சாமர்த்தியமாகச் செயல்படத் தெரிந்தால் ஒரு நாயகனாகவோ, நாயகியாகவோ திரையுலகில் பிரகாசிக்கலாம். திரையில் தென்படும் அவர்களது தோற்றம், படங்களின் வெற்றி, கேமிராவுக்குப் பின்னிருக்கும் சூழலைக் கையாளும் திறன், சக கலைஞர்களின் ஆதரவோடு மக்களின் வரவேற்பும் கிடைத்தால் மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தைப் பெறலாம்.
இவையனைத்தையும் நன்றாக அறிந்து, புரிந்து, செயல்பட்ட பிறகும் சில கலைஞர்கள் புகழேணியில் ஏற முடியாமல் கஷ்டப்படுவார்கள். தமிழ் திரையுலகில் அப்படியொருவராகக் கருதப்படுபவர் நடிகர் நகுல்.
‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான இவர் ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ போன்ற படங்கள் மூலமாக ரசிகர்களுக்குத் தெரிந்த நாயகனாக உருமாறியிருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு, அவர் நாயகனாக நடித்துள்ள படமே ‘வாஸ்கோ ட காமா’.
ஆர்ஜிகே இயக்கியுள்ள இப்படத்தில் அர்த்தனா பினு, கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எப்படியிருக்கிறது ‘வாஸ்கோ ட காமா’?
டைட்டில் அர்த்தப்பூர்வமானதா?
ஒருநாள் மகாதேவனுக்கு விரலில் அடிபடுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் நகுல். அங்கு ஈசிஜி உட்படப் பல சோதனைகளைச் செய்து, மகாதேவனை ஐசியுவில் வைத்து, இறுதியாக அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.
மகாதேவன் இறந்து கிடப்பதைப் பார்க்கும் சுற்றத்தினர் எவரும் பெரிதாக வருத்தப்படவில்லை. ‘இனி வாசுதேவன் கதி என்னவோ’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுகின்றனர்.
பிறகு, தனது சித்தப்பாவைத் (முனீஸ்காந்த்) தேடி சென்னை செல்கிறார் வாசுதேவன். அந்த ஊரிலேயே தங்குவதாகச் சொல்கிறார்.
அவருக்காக ஒரு வீடு பார்க்கிறார் சித்தப்பா. ஆனால், ‘கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கே வீடு தருவேன்’ என்று வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் ‘ஒரே குரலில்’ சொல்கின்றனர். ’பார்த்தா நல்ல பிள்ளையா இருக்கானே.. ச்சீ.. ச்சீ..’ என்று அலுத்துக் கொள்கின்றனர்.
அதனால், வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் (ஆனந்தராஜ்) வாசுதேவன் ஒரு தீவிரவாதி என்று சொல்கிறார் சித்தப்பா. அதனைக் கேட்டு, அந்த நபர் மகிழ்ச்சியடைகிறார்.
அந்த வீட்டில் தங்கும் வாசுதேவன், வீட்டு உரிமையாளரின் மகளை (அர்த்தனா பினு) பார்த்ததும் காதல்வயப்படுகிறார். ஆனால், அந்தப் பெண்ணோ அவரைக் கண்டுகொள்வதாக இல்லை. சில நாட்களுக்குப் பிறகு, சிறு வயதில் அப்பெண் தன்னோடு பள்ளியில் படித்தது நினைவுக்கு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அப்பெண்ணுக்கும் அந்த நினைவு எட்டிப் பார்க்கிறது.
மெல்லத் தனது காதலை வாசுதேவன் வெளிப்படுத்த, அவரும் அதனை ஏற்றுக்கொள்கிறார். அவர்களது காதல் அப்பெண்ணின் வீட்டாருக்குத் தெரிய வருகிறது. ஒருகட்டத்தில், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
திருமண நிகழ்வின்போது, மண்டபத்தில் ஒரு நபரைச் சிலர் துரத்துகின்றனர். அவரைத் தாக்க முற்படுகின்றனர். அந்த நபர் மகாதேவன் போலவே தோற்றம் தருகிறார்.
அதனைக் கண்டதும், வாசுதேவன் அந்த நபர்களைப் புரட்டியெடுக்கிறார். அவர்கள் தாக்கியவரைக் காப்பாற்றுகிறார்.
ஆனால், ‘அநியாயம் செய்யவிடாமல் தடுத்ததார்’ என்று சொல்லி அவரை போலீஸ் கைது செய்கிறது. அவரை ஒரு சிறையில் அடைக்கிறது.
நியாயமாகச் செயல்படுவேன் என்பவர்களை மட்டுமே அந்தச் சிறைச்சாலையில் காண முடிகிறது. அநியாயம் செய்யத் தயாராக இருந்தால் அவர்களை விடுவிக்கத் தயாராக இருக்கிறது சிறை நிர்வாகம்.
அந்தச் சிறையில், சிறு வயதில் பிரிந்துபோன தனது தந்தையைப் பார்க்கிறார் வாசுதேவன். அதேநேரத்தில், அவரைக் கொல்வதற்காக ஒரு நபர் அங்கு வந்திருப்பதையும் அறிகிறார்.
அந்த நபரின் பெயர் கோவர்தன் (வம்சி கிருஷ்ணா). அவரும் ’எனது அப்பாவைக் கொல்லவே இங்கு வந்தேன்’ என்கிறார்.
வாசுதேவன் தந்தையைத் தனது தந்தை என்று கோவர்தன் சொல்வது ஏன்? அவரைக் கொலை செய்யவிடாமல் வாசுதேவன் தடுத்தாரா? அவரது காதல் என்னவானது என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தருகிறது மீதமுள்ள திரைப்படம்.
வாசுதேவனின் சகோதரர் மகாதேவன் போலத் தோற்றமளிக்கும் இன்னொரு நபர் யார்? இந்தக் கேள்விக்குக் கதையில் பதிலே இல்லை. அது மட்டுமல்ல, வாசுதேவனுக்கும் கோவர்தனுக்குமான உறவு அல்லது பகை எப்படிப்பட்டது என்பதையும் இந்தப் படம் விளக்கவில்லை.
இது போன்ற முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்காத நிலையில், இக்கதையில் லாஜிக் சார்ந்து கேள்வி எழுப்புவது அர்த்தமற்றதாக மாறுகிறது.
இந்தப் படத்தில் நாயகன் செல்லும் சிறைச்சாலையின் பெயரே ‘வாஸ்கோ ட காமா’. அதனால், ’இப்படியொரு டைட்டிலை ஏன் வச்சாங்க’ என்று ரசிகர்களிடத்தில் எழும் கேள்வியை தலைதூக்கவிடாமல் அடக்குகிறார் இயக்குனர் ஆர்ஜிகே.
போலவே, மேற்சொன்னதைப் படித்ததும் ‘இந்த டைரக்டரு எந்த உலகத்துல இருக்காரு’ என்று தோன்றுவது இயல்பு. அதற்கேற்ப, ‘முழுக்க அநியாயங்கள் நிகழும் உலகில் நியாயவானாக இருக்கும் நாயகன் படும் பாடுகளைச் சொல்கிறது இப்படம்’ என்று ஒரு முன்கதைச் சுருக்கத்தை அவர் தந்துவிடுகிறார்.
மோசமான காட்சியாக்கம்!
இதர நாயகர்களைப் போலவே, இதில் சிறப்பாகத் தோன்றியிருக்கிறார் நகுல். அதேநேரத்தில், அவரது நடிப்பு இதில் ‘டெம்ப்ளேட்’ ஆகத் தோன்றுகிறது.
அவர் மட்டுமல்ல, நாயகி அர்த்தனா பினுவும் அப்படித்தான் திரையில் வந்து போயிருக்கிறார். இப்படத்தின் கதையை அவர்கள் உள்வாங்கிய விதம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் போன்றோர் இதனை ஒரு நகைச்சுவைப் படமாகக் கருதி, கேமிரா முன்னால் நின்றிருக்கின்றனர்.
கே.எஸ்.ரவிக்குமார், பிரேம் உள்ளிட்ட சிலரது நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக உள்ளது.
இவர்கள் தவிர்த்து மருத்துவமனை காட்சிகளில் நடித்துள்ள டி.எம்.கார்த்திக், அனிதா சம்பத் போன்றவர்கள் நம்மை ஈர்க்கின்றனர்.
என்.எஸ்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு ஒரு ‘கலர்ஃபுல்’லான உலகைத் திரையில் காட்ட முயற்சித்திருக்கிறது. ஆனால், படம்பிடிக்கப்பட்ட விதமோ தொண்ணூறுகளில் வந்த படங்களை நினைவூட்டுகிறது.
கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் அதற்கேற்ற வகையில் செயல்பட்டிருக்கிறார்.
அருண் என்.வி. இதற்கு இசையமைத்திருக்கிறார். படம் பார்த்து முடித்தபிறகு, பாடல்கள் எந்தெந்த இடங்களில் வருகின்றன என்பதே நம் நினைவில் இருப்பதில்லை. அதேநேரத்தில், நகைச்சுவையை ஊட்டுகிற வகையில் அவரது பின்னணி இசை இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
படத்தொகுப்பாளர் தமிழ் குமரன், காட்சிகளைத் தொகுத்திருக்கும் விதம் நம்மைக் ’குழப்பக்குளத்தில்’ தள்ளுகிறது. திரைக்கதை குழப்பங்களின் தொகுப்பாக வார்க்கப்பட்டிருந்தாலும், அதனைச் சரிப்படுத்துவது ஒரு படத்தொகுப்பாளரின் கடமை. ஆனால் அது சரிவர நிகழவில்லை.
இன்னும் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இதில் அடங்கியிருக்கிறது. அவர்களது ஒத்துழைப்பினால் மட்டுமே, ஒரு மேடை நாடகமாகத் தென்படும் அபாயத்தைத் தவிர்த்திருக்கிறது இப்படம். அதேநேரத்தில், இந்த படத்தின் காட்சியாக்கம் மோசமாக இருக்கிறது என்ற எண்ணத்தையும் நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
அதற்குக் காரணம், இயல்புக்கு மாறான பாத்திரச் சித்தரிப்பு, அவற்றின் செயல்பாடு மூலமாகச் சமகாலச் சமூகம் மீது இயக்குனர் முன்வைக்கும் பகடி கலந்த விமர்சனம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பியாக இருப்பதால், மிகச்சரியானதொரு திரைக்கதை வாய்த்திருந்தால் இந்த படம் ஒரு ‘கல்ட்’ கிளாசிக் ஆக மாறியிருக்கும் என்ற ஆதங்கத்தையும் நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
சிறப்பான ‘ஐடியா’!
’ஒரு மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுக்கப் பொதுவானது. அதனால், அதனைப் போதிப்பதே சிறந்த கல்வியாகக் கருதப்படுகிறது. அப்படி வாழும் நபர்கள் மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
’அதெல்லாம் அந்தக் காலம். கலியுகத்தில் நல்லதுக்கு காலமில்லை’ என்று செயல்படுகிற, புலம்புகிற, போதிக்கிற நபர்கள் எல்லா காலகட்டத்திலும் இருந்து வருகின்றனர். நல்லவர்கள், தீயவர்கள் சம அளவில் இருக்கின்றனர் என்று கருதிய காலம் மலையேறி, ‘இந்த உலகம் கெட்டவர்களுக்கானது’ என்ற எண்ணம் சாதாரண மனிதர்களிடத்தில் பரவும் அளவுக்கு நிலைமை மாறி வருகிறது.
அதனைப் பகடி செய்கிறது ‘வாஸ்கோ ட காமா’. அந்த வகையில், இயக்குனர் ஆர்ஜிகே ஒரு சிறப்பான ஐடியாவுக்கு திரையுருவம் தந்திருக்கிறார்.
சமூக, அரசியல் நிகழ்வுகளைப் பகடி செய்வதென்பது ஒரு அசாதாரணமான விஷயம். அதிலும் திரைப்படங்களில் அதனைச் சாத்தியப்படுத்துவது மிகக்கடினம். ‘முகமது பின் துக்ளக்’ உள்ளிட்ட ஒரு சில படங்களையே தமிழில் அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
அந்த வரிசையில், சமகாலச் சமூக அரசியலோடு சேர்த்து மக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கிண்டலடித்திருக்கிறது ‘வாஸ்கோ ட காமா’. அந்த ஒரு விஷயமே இந்தப் படத்தைப் பத்தோடு பதினொன்றாகக் கருதாமல் தவிர்த்திருக்கிறது. ஆனால், அது மட்டுமே போதாது என்பதை இயக்குனர் ஆர்ஜிகேவுக்கு யாராவது எடுத்துச்சொன்னால் நல்லது.
கொஞ்சம் முயன்றிருந்தால், 2கே கிட்ஸ்களுக்கான இன்னொரு ‘முகம்மது பின் துக்ளக்’ போல இந்தப்படத்தை ஆக்கியிருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தும் தவறவிட்டிருக்கிறது ‘வாஸ்கோ ட காமா’. அதனால், ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
– உதயசங்கரன் பாடகலிங்கம்