‘அல்டிமேட் ஸ்டார்’, ‘தல’ என ரசிகர்களால் சிலாகிக்கப்படும் அஜித், முதன்முதலாக விளம்பரப் படங்களில் தான் நடிக்கத் துவங்கினார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே ‘பிரேம புத்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். 1992-ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. ‘பிரேம புத்தகம்’ படத்திற்காக இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே தமிழில் ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அஜித் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆவதை அவரது ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நிறைவடைந்தது.
தொடர்ந்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார்.
கவனம் ஈர்த்த சுவரொட்டிகள்:
அஜித்குமார் திரையுலகில் 32 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை சிறப்பிக்கும் விதமான அவர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு, சிறப்புப் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அஜித் முகத்தில் ரத்தம் வழியும் புகைப்படம் ஒன்றையும், அதையொட்டி, “32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும், யாவையும் எதிர்கொண்டு வெல்லும் ‘விடாமுயற்சி’ ” என எழுதப்பட்டுள்ளது.
அதேபோல ‘குட் பேட் அக்லி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில், “32 ஆண்டுகால மன உறுதி, தைரியம், ஒழுக்கம், கண்ணியம் மற்றும் நல்லது, கெட்டது ஆகியவற்றுடன் கோரமான பயணங்களை சந்தித்துள்ள அஜித் இன்னும் பல ஆண்டுகள் புகழ் பெற வாழ்த்துகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனம் ஈர்த்துள்ள இந்தப் போஸ்டர்களை பகிர்ந்து ரசிகர்கள் பலரும் ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சாகசப் பயணம்:
போஸ்டரில் குறிப்பிட்டிருப்பது போல், அஜித்தின் பயணம் கோரமானது மட்டுமல்ல, பைக் மற்றும் கார் பயணம் போன்று சாகசங்கள் நிறைந்ததாகும்.
தமிழில் அறிமுகமான ‘அமராவதி’ அஜித்துக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுக்கவில்லை. ஒரு சராசரி கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அஜித் போராடிக் கொண்டிருந்த நிலையில், இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது இயக்குநர் வசந்த் இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான ‘ஆசை’ திரைப்படம்.
இன்று உயரத்தில் இருக்கும் ரஜினி, கமல் போன்றோர் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகிய ஜாம்பவான்கள் பல்வேறு காலகட்டங்களில் செதுக்கிய உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் யாரும் தொடாமலேயே, இன்று உச்சத்தில் இருக்கும் ஒரே நடிகர் அஜித் என்றால், அது மிகையல்ல.
ஒரிரு சினிமாக்களையே, அந்த நேரத்தில் இயக்கி இருந்த வசந்த், அகத்தியன், சரண், எஸ்.ஜே.சூரியா, வெங்கட்பிரபு, ‘சிறுத்தை’ சிவா ஆகியோரால் பட்டை தீட்டப்பட்டு இமயம் தொட்டவர் அஜித்.
அவர் நடித்து வெளியான வெள்ளிவிழாப்படங்களை காட்டிலும், இவர் நிராகரித்த வெள்ளிவிழா படங்கள் அதிகம் என்பது ஆச்சர்யமூட்டும் சங்கதி. அவற்றில் சில : சாமி, காக்க காக்க, கஜினி, நியூ.
வேண்டாம் அரசியல்:
அஜித்தை அரசியலில் இழுக்க பல ‘பெரிய தலைவர்கள்’ முயற்சி செய்தது உலகம் அறிந்த செய்தி. அதில் அவர் மாட்டிக்கொள்ளவே இல்லை.
‘தனது அரசியல் கடமை, வாக்கு செலுத்துவது மட்டுமே’ என்பதில் நம்ம ‘தல’ தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார்.
சின்ன உதவி செய்தால் கூட அதனை விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் மத்தியில், ஓசை இல்லாமல் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்.
ஒரு மாமாங்கத்துக்கும் மேலாக ஊடகங்கள் பார்வையில் இருந்து தன்னை மறைத்து வைத்திருக்கும் ஒரே உலக நடிகர் அஜித் மட்டுமே என உறுதியாகச் சொல்லலாம்.
– பாப்பாங்குளம் பாரதி.