வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஐந்தாவது நாளாக இன்றும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதுவரை 340-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 9,328 பேர் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்டு மருத்துவமனைகளிலும் முகாம்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்று வரை ராணுவம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்பு குழுவின் உதவியுடன் நடந்து வரும் மீட்புப் பணியில் ஈடுபவர்களுடைய அர்ப்பணிப்பு அதை கவனிக்கும் எவரையுமே வியப்புக்குள்ளாக்குகிறது. அந்த அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. பெருமை கொள்ள வைக்கிறது.
எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் மிகத் துரித காலத்தில் இரும்புப் பாலத்தை கட்டமைத்து, அதன் வழியே உள்ளே பொக்லைன் இயந்திரங்களை எடுத்துச் சென்று, அங்கங்கே மலைச் சரிவில் இருந்த சடலங்களை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், சிலரை நான்கு நாட்களுக்குப் பிறகும் உயிரோடு மீட்டிருப்பது இருப்பது ஆரோக்கியமான ஒன்றாகத் தெரிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகம் பாதிக்கப்பட்ட முண்டக்கைப் பகுதியில் உள்ள அடர்ந்தக் காட்டுப்பகுதியில் உள்ளே சிக்கியிருந்த பழங்குடிக் குடும்பத்தைப் பற்றி சொல்லப்பட்டு, ராணுவத்தினர் மிகுந்த சிரமத்திற்கு இடையில் உள்ளே போனபோது அங்கே மூன்று குழந்தைகள் உட்பட ஒரு பழங்குடிக் குடும்பமே ஒரு மரத்தின் மேல் பாதுகாப்புடன் அமர்ந்திருந்தார்கள்.
மூன்று நாட்களுக்கும் மேல் பசியுடன் தவித்த அவர்களை ராணுவம் மீட்டெடுத்துக் கொண்டு வந்தபோது பலரும் நெகிழ்ந்து போனார்கள். அந்த ஏழெட்டு வயதான பழங்குடிக் குழந்தைகள் உடுக்க ஆடைகள் இல்லாத நிலையில் இருந்தன.
எவ்வளவோ வசதிகளை எதிர்பார்த்து சிறு சிறுப் பிரச்சனைகளுக்குக் கூட அதீதமாக கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் உறவுகளுக்கு மத்தியில், எவ்வளவோ நம்பிக்கையுடன் பசியோடு மரத்தில் அமர்ந்தபடி அவர்கள் அந்தக் குழந்தைகள் தங்கள் உயிரை பாதுகாத்திருக்கிறார்கள். அவர்களை ராணுவ மீட்டெடுத்திருக்கிறது.
இன்னும் ட்ரோன் உதவியுடனும் நவீன வசதிகளுடனும் மண்ணில் உயிரோடுப் புதைந்திருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்கள் நான்கு பேரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது ராணுவம்.
இன்றைக்கும் கூட ஐந்தாவது நாட்களாக காட்டுப் பகுதியில் பாறையின் மேல் இருந்தபடி கூச்சல் எழுப்பிய மூன்று பேரைக் கண்டறிந்து அவர்களை ஹெலிகாப்டரின் மூலம் மீட்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையிலும் தேசியப் பேரிடருக்கு இடையிலும் உயிர்ப்பூட்டும் நம்பிக்கையான அம்சங்கள் துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே ஒரு ஆரோக்கியமான விஷயமாகப்படுகிறது.