எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி மாணவிகளின் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவை பாரம்பரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர் இங்குள்ள மாணவிகள். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் 4000 மாணவிகள் கலந்துகொண்டனர். “தண்ணீரை சேமித்தல்” என்ற தலைப்பில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தில் ஒன்பது வகையான தானியங்களை வளரச்செய்து மண் பானைகளில் ஏந்தி ‘முளைப்பாரி’ வழிபாட்டில் பங்கேற்றனர். மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள சிறு குளத்தில் மாணவிகள் அகல் விளக்குகளில் தீபமேற்றி மிதக்க விட்டனர்.

பின்னர், மாணவிகள் “சித்ரா அன்னம்” என்று சொல்லக்கூடிய எலுமிச்சை சோறு, புளி சோறு, தேங்காய் சோறு ஆகியவற்றை பகிர்ந்துண்டனர்.

இந்த விழாவில் ‘தண்ணீரை சேமித்தல்’ என்ற தலைப்பை மையப்படுத்தி பரதநாட்டியம், கும்மியாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மௌனமொழி நாடகம், குழு நடனம் ஆகிய கலைகளை அரங்கேற்றினர்.

ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடுவது குறித்துப் பேசிய மாணவி இனியா, “கிராமத்தில் கொண்டாடுவது போல பாரம்பரியமான முறையில் இந்த விழா ஏற்பாடு செய்துள்ளோம்.

மழைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், விவசாயிக்கு நன்றி செலுத்தும் வகையிலும் இந்த விழா கொண்டாடப்பட்டது. அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த திருவிழாவைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

பின்னர் பேசிய விழாவை ஒருங்கிணைத்த மாணவிகள், “எப்பொழுதும் எங்கள் கல்லூரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் அதே போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த விழாவிற்கு அனைத்து மாணவிகளும் பாரம்பரிய உடையை அணிந்து வந்துள்ளோம். இதன் பின்னர் மாணவிகளின் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடனம், சிலம்பம், கரகாட்டம் போன்ற கலைகளை வெளிப்படுத்தினர், மேலும் பல போட்டிகளும் நடத்தி வருகிறோம்” என்றார்.

மாணவிகளைத் தொடர்ந்து பேசிய உதவிப் பேராசிரியர் சர்ஜனா, “இந்த வருடம் ‘Save Water’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக நடத்திவருகிறோம்.

நிகழ்ச்சிகளில் நல்ல கருத்தை தலைப்பாக வைத்தால் மாணவர்களிடம் எளிதில் கொண்டு சேர்த்துவிடலாம் என்பதால், எல்லா கொண்டாட்டங்களிலும் இதுபோன்ற கருத்தை மையமாக வைத்துள்ளோம்.

ஒரு புறம் பெருவெள்ளம் வந்துகொண்டிருக்கிறது, ஒரு புறம் தண்ணீரே இல்லாத வறட்சியான சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலைப் போக்க, நீரை சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் இங்கு பல நடனக் கலைகளை வெளிப்படுத்தினர். இங்கு நிறைய பேர் நமது பாரம்பரிய கலைகளை மறந்திருப்போம். எனவே பாரம்பரியத்தை மறக்க கூடாது என்ற வகையில் கிராமத்தில் இருக்கக்கூடிய கலாச்சாரத்தை இங்கு அனைவரிடமும் கொண்டு வந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

#aadi_-perukku_celebration_of_mgr_janaki_college_students #சென்னை_ராஜா_அண்ணாமலைபுரம் #டாக்டர்_எம்ஜிஆர்_ஜானகி_மகளிர்_கலை_அறிவியல்_கல்லூரி #ஆடித்_திருவிழா #aadi_thiruvizha #ஆடிப்_பெருக்கு #mgr_janaki_college #Dr_mgr_janaki_college 

Comments (0)
Add Comment