கமலா ஹாரிஸ் நெருப்பாற்றில் நீந்துவாரா?

தேர்தல் என்ற வார்த்தை படுத்தும் பாடு, உலகம் முழுக்க ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் போலும்!

இதோ, இப்போதே அமெரிக்க தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடனே முன்னிறுத்தப்படுவாரா அல்லது வேறு யாரேனும் புதிதாக அறிவிக்கப்படுவார்களா என்ற கேள்வியே சில மாதங்களாக அங்கு நிலவி வந்தது.

ஏனென்றால், எதிரே குடியரசுக் கட்சி சார்பில் நிறுத்தப்படுவது டொனால்டு ட்ரம்ப் என்று தெரிந்தபிறகு, அது மிகப்பலமானதாக மாறிப்போனது.

பைடனே நிறுத்தப்படலாம் என்று பல கணிப்புகள் உறுதிபடச் சொன்ன நிலையில், துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸே அதிபராகப் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவை ஆளப் போவது யார் என்ற கேள்விக்குப் பதில் நவம்பர் 5ஆம் தேதிக்குப் பிறகு தெரியும்.

அது வரையிலும் கமலா ஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப் இடையிலான வார்த்தைப் போரையும் வாக்குறுதி மழையையும் அந்நாட்டு மக்கள் கடந்து வரத்தான் வேண்டும்.

யார் இந்த கமலா ஹாரிஸ்?

கமலா தேவி இவரது முழுப்பெயர். கமலா ஹாரிஸின் தாய் சியாமளா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தனது 19வது வயதில் அவர் அமெரிக்காவுக்கு மேற்படிப்பு முடிக்கச் சென்றார். அங்கேயே ஆராய்ச்சிப் படிப்பையும் முடித்துப் பணியாற்றினார்.

கமலாவின் தாய் வழி தாத்தா பி.வி.கோபாலன், இந்திய குடிமைப்பணி அதிகாரியாகப் பணியாற்றியவர். ஜாம்பியாவிலுள்ள லுசாகாவில் வாழ்ந்த அனுபவம் அவருக்குண்டு.

சியாமளா, சரளா, மகாலட்சுமி, பாலசந்திரன் என்று கோபாலன் – ராஜம் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள்.

அறுபதுகளில் அமெரிக்கா சென்ற சியாமளா, பெர்க்லேவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது டொனால்டு ஹாரிஸை சந்தித்தார். ஜமைக்காவை பூர்விகமாகக் கொண்டவர் ஹாரிஸ். ஆய்வுப்படிப்பை முடிப்பதற்குள்ளாகவே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

கமலா பிறந்தபிறகே சியாமளா ஆய்வுப்படிப்பை முடித்தார். பின்னர் டொனால்டு ஹாரிஸும் தனது ஆய்வுப்படிப்பை நிறைவு செய்தார்.

சிறு வயதிலேயே பெற்றோர் விவகாரத்து செய்துகொண்டதை அறிந்தாலும் தாய் மற்றும் தந்தை இருவரது மரபுக்கும் மரியாதை தருபவராகவே வளர்ந்தார் கமலா. அவரது தங்கை மாயாவும் அப்படித்தான் இருந்தார்.

சிறு வயதில் இருந்தே கிறித்தவம், இந்து மதங்கள் தொடர்பான அறிமுகத்தைக் கமலாவும் மாயாவும் ஒருங்கே பெற்றனர். அதேநேரத்தில், தங்களது தோழர்கள், தோழிகளுடன் இருக்கையில் ‘ஆப்பிரிக்க அமெரிக்கர்களாகவே’ தாங்கள் அடையாளம் காணப்பட்டதாகச் சொல்கிறார் கமலா.

சான் பிரான்சிஸ்கோவிலுள்ள கலிபோர்னியா சட்டக் கல்லூரியில் பயின்ற கமலா, பின்னர் அலமேடா கவுண்டியில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கியவர் பின்னர் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ஆக உயர்ந்தார்.

இரண்டு முறை அந்தப் பதவியை வகித்த அவர், 2017இல் அமெரிக்க செனட் உறுப்பினர் ஆனார். பிறகு, 2021இல் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதும், சர்வதேச அளவில் கவனம் பெற்றதும் வரலாறு.

கமலா ஹாரிஸ் தனது கணவர் டக்ளஸ் இம்ஹாஃபை 2013இல் சந்தித்தார். அடுத்த ஓராண்டிலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டார். டக்ளஸின் முதல் மனைவி கெர்ஸ்டினுக்கு பிறந்த கோல் மற்றும் எல்லா உடன் தற்போது வாழ்ந்து வருகிறார்.

கடுமையாக விமர்சிக்கும் ட்ரம்ப்!

அரசியல் விமர்சகர்களைப் பொறுத்தவரை ஜனநாயகக் கட்சி இடதுசாரி தன்மை கொண்டது என்றும், குடியரசுக் கட்சி பழமைவாதத்தில் ஈடுபாடு மிக்கது என்றும் சொல்கின்றனர். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அதனை மெய்ப்பிக்கும் விதமாகத் தொடர்ந்து தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

எதிரே இருப்பவர் மீது சேற்றை வாரியிறைப்பது போல பேசுவது ட்ரம்பின் பாணி. இதுநாள் வரை ஜோ பைடனை விமர்சித்தவர், தற்போது கமலா ஹாரிஸின் பக்கம் திரும்பியிருக்கிறார்.

‘இதுநாள்வரை தன்னை இந்திய மரபினராகவே வெளிப்படுத்திய கமலா, இப்போது தன்னை ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராக காட்டிக் கொள்கிறார். அதனை என்னால் ஏற்க முடியவில்லை’ என்றிருக்கிறார்.

கமலா கருப்பினத்தவராகத் தன்னைக் காட்டிக்கொள்வது வாக்கு வங்கி அரசியல் என்று கூறுவது தெளிவாகத் தெரிகிறது.

போகப் போக, டொனால்டு ட்ரம்ப் ‘பாலீஷ்’ செய்யப்படாத வார்த்தைகளால் கமலாவை விமர்சிப்பார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

ட்ரம்ப் விமர்சனத்திற்குப் பதிலளிக்கத் தொடங்கினால், கட்சியின் வாக்குறுதுகள் குறித்தோ, தனிப்பட்ட கருத்துகளைச் சொல்வதோ இயலாமல் போகும் என்று உணர்ந்தால் மட்டுமே, இதிலிருந்து அவரால் தப்பிக்க முடியும்.

கடந்த காலத்தில் கமலா எவற்றையெல்லாம் தனது அடையாளங்களாக வெளிப்படுத்தினாரோ, அவை குறித்தெல்லாம் இனி ட்ரம்ப் விமர்சிப்பார் என்பதையும் அவர் உணர்ந்தாக வேண்டும்.

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது கமலாவின் குரல்களில் ஒன்றாக உள்ளது.

ஆசிய பாரம்பரியம், ஆப்பிரிக்க அமெரிக்கப் பாரம்பரியத்தைக் கொண்டவராக, இதுநாள்வரை தன்னை வெளிக்காட்டி வருகிறார். அது சார்ந்த சர்வதேசப் பிரச்சனைகளில் கமலாவின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் சவால்களையும் இனி அவர் சந்திக்க வேண்டி வரலாம்.

ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கும் கூட, ஆட்சிப்பொறுப்பில் பங்கு வகித்தவராகக் கமலா பதில் சொல்ல நேரிடலாம். நிச்சயமாக அது எளிய வேலையாக இராது.

அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் விலை உயர்வு முதல் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை வரை பல்வேறு விஷயங்களுக்கான தீர்வுகளை அவர் தெளிவுடன் முன்வைத்தாக வேண்டும்.

முக்கியமாக இனம், நிறம், மதம் மற்றும் இதர வேறுபாடுகளை முன்வைத்து ஆதிக்க மனப்பான்மையுடன் கருத்துகள் முன்வைக்கப்படும்போது, அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய சிரமத்தை நிச்சயம் கமலா எதிர்கொள்வார்.

ஏனென்றால், கடந்த காலத்தில் அப்படிப்பட்ட சிந்தனைகளைத் தனது அடையாளங்களில் ஒன்றாக வெளிப்படுத்தியவர் ட்ரம்ப்.

இஸ்ரேல் – பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இடையிலான மோதலில் பெஞ்சமின் நேதன்யாகுவின் பக்கம் நிற்கிறது அமெரிக்கா. அதற்காக, ஜோ பைடன் சில நாடுகளின் எதிர்விமர்சங்களை எதிர்கொள்கிறார்.

அதேபோல உக்ரைன் – ரஷ்யா போரில் அமெரிக்கா தலையிடுவதற்கு எதிராக, அந்நாட்டிலேயே பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அக்கேள்விகளுக்கும் கமலா பதிலளிக்க வேண்டியிருக்கும்.

மேலும் கருக்கலைப்புக்கான பாதுகாப்பு உரிமைகள், வானிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகள், மண்ணில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை எடுக்க ஹைட்ராலிக் அழுத்தத்தைப் பயன்படுத்துதல், அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடு, அங்கு நடக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் முக்கிய பேசுபொருட்களாக இருக்குமென்று நம்பலாம்.

2016 அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றபோது, சமூகவலைதளப் பிரச்சாரமே அதன் அடித்தளமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.

பிறகு, ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனமொன்று அவரது வெற்றிக்கு மறைமுகமாக உதவியதாகச் சொல்லப்பட்டது. இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட குழுவொன்று, அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக அறிக்கை அளித்தது. இந்த விவகாரத்தில் முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இது தவிர, டொனால்டு ட்ரம்பின் தனிப்பட்ட இமேஜும், கட்சி சார்ந்த அவரது கருத்துகளும் ஆதரவையும் எதிர்ப்பையும் மலை போலக் குவித்து வருகின்றன.

ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க மக்கள் எதிர்கொண்ட அனுபவங்களும், அவற்றின் தாக்கமுமே தேர்தலில் பிரதிபலிக்கும் எனும் நிலையில், அது கமலா ஹாரிஸின் வெற்றிக்கு எந்தளவுக்குச் சாதகமாக இருக்கும் என்று தெரியவில்லை.

மொத்தத்தில் ட்ரம்பின் வலதுசாரி சிந்தனைகளுக்கு எதிராகத் தனது பிம்பத்தை விஸ்வரூபமாக்கிக் காட்ட வேண்டிய கட்டாயம் கமலாவின் முன்னே இருக்கிறது.

இனம், மதம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கடந்தவராகத் தன்னை முன்னிறுத்தும் அவர், அந்த தகுதிகளையே எதிர்மறையானவையாக விமர்சிக்கும் போக்கை நெருப்பாறாக எண்ணிக் கமலாவால் நீந்திக் கடக்க முடியுமா?

அமெரிக்கத் தேர்தலை வேடிக்கை பார்க்கும் உலகின் மூலைமுடுக்கெங்கும் வசிக்கும் இந்தியர்கள், கமலாவின் போட்டி குறித்து என்ன நினைக்கின்றனர்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களும் கூட, அவரது வெற்றியை அல்லது தோல்வியைத் தீர்மானிக்கும்.

-மாபா

Comments (0)
Add Comment