வயநாடு பேரிடர்: மனசாட்சியை உலுக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை!

கேரளாவின் வயநாடு பகுதியில் உருவான தேசியப் பேரிடரின் விளைவாக சீரழிந்த பகுதிகளை மீட்பதற்கான பணிகள் மூன்று நாட்களாக துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை ஏறத்தாழ 270 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சரிந்த மலைப் பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் காட்சி அனைவரையும் சங்கடப்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.

ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் ஒரு மாநிலம் மிகவும் இக்கட்டான தேசியப் பேரிடரை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்பதே பொதுவான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, “கேரளா அரசுக்கு நிலச்சரிவு குறித்து முன்னரே நாங்கள் தெரியப்படுத்தி இருக்கிறோம்” என்பதைச் சொல்லி இருக்கிறார்.

அதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிற கேரளா முதல்வரான பினராயி விஜயன், “தங்களுக்கு கனமழைக்கான அலர்ட் மட்டுமே தெரியப்படுத்தப்பட்டது. அதுவும் சம்பவம் நடக்கிற முந்தைய நாளன்று தான் அந்த அலர்ட் குறித்த எச்சரிக்கை எங்களுக்கு கிடைத்தது என்பதை தெரியப்படுத்திருக்கிறார்.

அதோடு ஒரு தேசியப் பேரிடரைச் சந்திக்கும் நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டியதில்லை என்பதையும் மென்மையான முறையில் உணர்த்தியிருக்கிறார்.

ஒரு எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலையை ஒரு மாநிலம் எதிர்கொள்ளும்போது நாம் எந்த அரசியலுக்கான தூண்டிலையும் போட வேண்டியதில்லை.

தற்போதைய உடனடியான தேவை மீட்புப் பணியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணியும் மட்டுமே. இதற்கு தான் தற்போது முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர, அரசியல் விவாதங்களை இந்த சந்தர்ப்பத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியதில்லை.

அதோடு மற்றொரு கேள்வியும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் எழுப்ப வேண்டி இருக்கிறது. இதற்கு முன்பு 2011 துவங்கி மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து இரண்டு முக்கியமான ஆய்வு அறிக்கைகள் மத்திய அரசின் முன்பு வைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றில் மேற்குத் தொடர்ச்சி மலை எம்மாதிரியான ஆபத்துக்களை எதிர்கொள்ள இருக்கிறது, எந்தெந்த இடங்களில் நிலச்சரிவுகள் உருவாகக்கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றன என்பதெல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படிப்பட்ட இரண்டு முக்கியமான சுற்றுச்சூழல் அறிஞர்கள் சமர்ப்பித்த அறிக்கை ஏன் மத்தியில் இருந்த அரசு பொருட்படுத்தவில்லை? அந்த அறிக்கையை மையப்படுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளவில்லை?

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைப் பாதுகாப்பதற்கான பணிகளை ஏன் மேற்கொள்ளவில்லை? என்று சுற்றுச்சூழல் சார்ந்த பல கேள்விகளை அப்போதே எழுப்பி இருக்கின்றன அந்த அறிக்கைகள்.

இதை இப்போது நினைவுபடுத்துகிற சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், இத்தகைய எச்சரிக்கையை இனிமேலாவது மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தி இனிமேலும் இத்தகைய தேசியப் பேரிடர் நிகழாதவாறு ஒரு சூழலை உருவாக்க மீள வேண்டும்.

மேலே சொன்ன இரண்டு அறிக்கைகளிலும் தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன.

எந்தெந்தப் பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய ஆபத்தும் இருக்கின்றன என்பதும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக நீலகிரியும் கோத்தகிரியும் கொடைக்கானல் உள்ளிட்ட பல பகுதிகளை அந்த அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.

தற்போது கேரளாவில் நிகழ்ந்திருப்பது மோசமான ஒரு துயர நிகழ்வு என்றாலும், இந்த மோசமான நிகழ்விலிருந்து மற்ற மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய பேரிடர் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிலும், குறிப்பாக தமிழக அரசு நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திருக்கிறது கேரளத்தில் நடந்திருக்கும் துயரமான நிகழ்வு.

-யூகி

Comments (0)
Add Comment