என்றும் இனிப்பது ‘நட்பு’!

ஆகஸ்ட் 1 – தேசிய நட்பு தினம்

அன்பு, பாசம், காதல் ஆகியன ஒரே உணர்வுக்கோட்டின் வெவ்வேறு புள்ளிகள். அந்த புள்ளிகளின் கலவையாக வேறொரு எல்லையில் நிற்பது ‘நட்பு’. எத்தனை பெரிய அம்மாஞ்சியாக, அசடாக, முசுடாக, மூர்க்கனாக இருந்தாலும், அவரது வாழ்வையும் நட்பெனும் மாமழை நனைக்கும். அதன் போக்கை முற்றிலுமாக மாற்றும்.

நட்பில் பல வகையுண்டு. அதற்கான எல்லைகளும் கூட, ஒவ்வொருவரையும் பொறுத்து மாறும். ஆனால், மாறாமல் இருப்பது அறுபடாமல் இருக்கும் நட்பெனும் பிணைப்பு இழைதான்!

நட்பென்பது யாதெனின்..!

இதுதான் நட்பு என்று எந்த வரையறையும் கிடையாது. ஆண், பெண், மூத்தோர், இளையோர், செல்வந்தர், வறியவர் உட்பட சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் இருப்போரை இணைக்கக் கூடியது.

சிறு வயதில் ‘பிசிராந்தையார் – கோப்பெருஞ்சோழன்’ கதையைக் கேட்டபோது, ’இதெல்லாம் சாத்தியம்தானா’ என்று தோன்றியதுண்டு. பார்க்காமலே ஒருவரைப் பற்றி நட்பு சித்திரத்தை மனதில் எப்படி வரைய முடியும்?

ஆனால், வயதாக ஆக ஒருவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் குறிப்புகளும் தகவல்களும் நட்புக்கு மூலதனமாகும் என்று எண்ண வைக்கிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பை வளர்க்கிறவர்கள் இதனை ஒப்புக்கொள்வார்கள். சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களோடு பழகுவதில் இருக்கும் அபாயங்களை மீறி, ஒவ்வொருவரும் நட்புக்கண்ணியை வீச இதுவே காரணம்.

கலாசாரங்களை, நாடுகளை, இனங்களை மீறி நட்பு உருவாவதற்கு சமூகவலைதளங்களுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் பேனா நண்பர்கள். கிட்டத்தட்ட 90-களின் இறுதி வரை கடிதம் மூலமாக நட்பை வளர்த்த நம் சித்தப்பாக்களையும், மாமாக்களையும் கேட்டால் இது தெரியவரும். 

அதனால், ’நட்பென்பது யாதெனின்’ என்று எவரும் விளக்கவுரை தர முடியாது. அது நல்லனுபவத்தை தரவல்ல ஒரு நல்லுறவு.

வாழ்வு முழுக்க வரும்!

கிண்டர்கார்டனில் எல்கேஜி படிக்கும்போது அறிமுகமான முகங்களுடன் இப்போதும் நட்பைத் தொடர்பவர்கள் உண்டு. சிறு குழந்தையாக மண்ணில் புரண்டு விளையாடும்போதும் நட்பு துளிர்ப்பதுண்டு. வேண்டுமானால், பெருநகர பூங்காக்களில் விளையாடும் சிறு குழந்தைகளை வேடிக்கை பார்த்தால் இது பிடிபடும்.

பொதுவாக பள்ளிப்பருவத்திலும் கல்லூரியிலும் நட்பு வளையம் பெரியளவில் விரிவடையும். அக்காலத்தில் நாம் சந்திக்கும் ஆண், பெண் எண்ணிக்கையும் மிக அதிகம்.

இது தவிர ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், ஒன்றாக விளையாடுபவர்கள், கலைப் போட்டிகளில் பங்கேற்பவர்கள், நீச்சல் உள்ளிட்ட இதர பயிற்சிகளில் கலந்துகொள்பவர்கள், பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் உடன் வருபவர்கள், எதேச்சையாக சுற்றுலாத் தலங்களிலோ, வழிபாட்டுக் கூடங்களிலோ சந்தித்தவர்கள் என்று பல வகைகளில் நட்பைத் தொடர்பவர்கள் உண்டு. அலுவலகம் மற்றும் அது சார்ந்த பணிகள் மூலமாகவும் நட்பு வாய்ப்பதுண்டு.

வீட்டை நிர்வகிக்கும் பெண்களைப் பொறுத்தவரை அக்கம்பக்கத்து வீட்டினரோடு நட்பு கொள்வது பெரும்பாலும் நிகழும். இப்போது ஒன்றாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஷாப்பிங் செல்பவர்கள், ஒரேவிதமான ஆன்மிகச் சிந்தனை உள்ளவர்கள் என்று இந்த வட்டம் மேலும் விரிவடைந்துள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை, ஆண்களைப் போலவே நட்பில் பெரிய வித்தியாசமில்லை.

பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டிலேயே அடைந்துகிடக்கும் பெரியவர்களும் கூட, டீக்கடைகளுக்கும் பூங்காக்களுக்கும் சென்று நட்பு பாராட்டுவதைப் பார்க்க முடிகிறது. பேச்சுத்துணை என்பதோடு நில்லாமல், ஏதோ ஒருவகையில் நட்பு அவர்களுக்கு ஆசுவாசம் தருகிறது என்பதையே இது காட்டுகிறது.

தலைமுறை தலைமுறையாக நட்பு கடத்தப்படுவதுண்டு. ஏதேனும் விழாக்களில், வைபவங்களில் அணி திரண்டு வருபவர்களின் முகத்தில் இருந்து இதனை அறிந்துகொள்ள முடியும்.

நட்பைக் கொண்டாடுவோம்!

நட்பு முகிழ்க்க ஆயிரம் காரணம் இருந்தாலும், அது தொடர ஒரே காரணம் தான் உண்டு. அது, தோழமை வீழ்ந்துவிடாமல் எக்காலத்திலும் தோள் கொடுக்கும் தன்மை. அதனை கைக்கொள்வதில் எந்த பேதமும் தடையாக இல்லை என்றால், அதுதான் உண்மையான நட்பு.

ஒரே அலைவரிசை கொண்டவர்கள்தான் நட்பில் இருக்க முடியும் என்றில்லை. உண்மையான அன்பும் அக்கறையும் இருந்தால், ஒருவருக்கொருவர் 100% முரண்பட்டவர்கள் கூட தோழமையுடன் இருக்க முடியும்.

நாம் உண்மையானவர்களாக இருந்தால், எத்தகைய இடைவெளிக்குப் பின்னும் முன்பிருந்ததைப் போன்றே நட்பு பாராட்ட முடியும்.

சக மனிதனை நேசிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்போது முதன்முதலாகத் தோன்றியதோ, அப்போதே இவ்வுலகில் நட்பும் பிறந்துவிட்டது.

அந்த நட்பைக் கொண்டாடுவதற்காக உருவானதே ‘நட்பு தினம்’. இதனைக் கொண்டாட புதிதாக நட்பு கொள்ளும் எண்ணமும், பழைய நட்பைச் சிலாகிக்கும் மனமும் இருந்தால் போதும்.

நட்பு தின வரலாறு!

1919-ம் ஆண்டு ஹால்மார்க் வாழ்த்து அட்டைகள் மூலமாக ‘நட்பு தினம்’ கொண்டாடும் வழக்கம் உருவானது. மெல்ல மங்கிய இவ்வழக்கத்தை, 1998-ம் ஆண்டு மீண்டும் உயிர்ப்பித்தார் அப்போதைய ஐநா செயலராக இருந்த கோபி அன்னானின் மனைவி நானே. இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு நாடுகளில் ‘நட்பு தினம்’ கொண்டாடப்படுகிறது.

தொடக்கத்தில் ஜூலை 30-ம் தேதியன்று கொண்டாடப்பட்ட ‘நட்பு தினம்’, தற்போது இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் மாத முதல் ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது.

அர்ஜெண்டினா, பிரேசில், ஸ்பெயின், உருகுவே உள்ளிட்ட நாடுகளில் ஜூலை 20-ம் தேதியும், பொலிவியாவில் ஜூலை 23-ம் தேதியும், பிப்ரவரி 14 அன்று ஈக்வடார், மெக்சிகோ, வெனிசுலா, பராகுவே ஆகிய நாடுகளிலும் ‘நட்பு தினம்’ கொண்டாடப்படுகிறது. பெரு நாட்டில் ஜூலை மாத முதல் சனிக்கிழமையன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுக்க தாய்ப்பாசம் போன்று நட்பும் கொண்டாட்டத்திற்குரிய ஒரு உணர்வென்பதையே இது காட்டுகிறது. ஒரேயொரு போன் கால், வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் இதர தொழில்நுட்ப தொடர்புமுறைகள் மூலமாக நட்பை வளர்க்கும் வாய்ப்பு இன்றிருக்கிறது.

நம்மை நட்பாக எண்ணுபவரையும், நாம் நட்பென்று நம்புவோரையும் சிறப்பிக்க ஒரே வழி நட்பு தினத்தைக் கொண்டாடுவதே!

  • பா.உதய்
Comments (0)
Add Comment