வயநாடு பேரழிவு – எப்படிக் கடந்துபோகப் போகிறோம்?

தலையங்கம்:

சற்றும் எதிர்பாராத விதத்தில் பெரும் துயர நிகழ்வைச் சந்தித்திருக்கிறது கேரள மாநிலம்.

இரு நாட்களுக்கு முன்பு வயநாட்டை ஒட்டியுள்ள 3 மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலச்சரிவுகள் அந்த மாநிலத்தையே பதற்றமடைய வைத்திருக்கின்றன.

இதுவரை 180-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

பெரும் மலைக்கு இடையில் மண்ணைத் தோண்டத் தோண்ட சிதைந்த நிலையில், சடலங்கள் கிடைத்து வருகின்றன.

மொத்தமாக பல உடல்களை எரியூட்டும் நிகழ்வுகள் பலரையும் கண்கலங்க வைக்கின்றன.

“அனைத்து ஆதரவு சக்திகளையும் ஒருங்கிணைத்து துயர நிகழ்வை எதிர்கொள்வோம்” என்று அறிவித்திருக்கிறார் கேரள முதல்வரான பினராயி விஜயன்.

நாடாளுமன்றத்தில் வயநாடு சம்பவம் குறித்து கேரள எம்.பி.க்கள் குரல் எழுப்பியிருக்கிறார்கள். வயநாட்டில் போட்டியிட்ட அனுபவத்தோடு எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி மத்திய அரசின் உடனடியான நடவடிக்கையை கோரியிருக்கிறார்.

வயநாட்டில் கடந்த தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட்டதன் மூலம் அந்த வயநாடு தொகுதிக்கே தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைத்தது.

அதே வயநாட்டில் தற்போது இவ்வளவு கடும் துயரமான சம்பவம் நடந்தேறி இருக்கும்போது, அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளைப் பார்க்க வேண்டுமே ஒழிய எந்த விதமான உள் அரசியலும் இருக்கக்கூடாது.

வயநாடு துயரத்தை தேசிய அளவில் ஊடகங்கள் முதன்மைப்படுத்தி இருக்கின்றன. 3-வது நாளாக இன்றும் மலைப்பகுதியில் சிதலமடைந்து விழுந்து கிடக்கும் கட்டடங்களுக்கிடையே சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

வயநாட்டுக்கு அருகில் உள்ள ஒரு தடுப்பணைப் பகுதியில் மட்டும் ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மீட்புப் பணியில் ராணுவத்தின் முப்படைகளும், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவும், மாநில அதிகாரிகளும் இணைந்து முழுமூச்சுடன் செயலாற்றியதன் விளைவாக பல ஆயிரக்கணக்கான பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

வயநாட்டிற்கு அருகில் தற்காலிக முகாம்கள் உருவாக்கப்பட்டு அதில் பல குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றன.

நள்ளிரவு நேரத்தில் கூட தொடர் மழைக்கிடையில் நடந்த இந்த மீட்புப் பணியின்போது, இரவு நேர மங்கிய மின் வெளிச்சத்தில் ராணுவ வீரர் ஒருவர் 5 வயது பெண் குழந்தையின் உயிரற்ற உடலைச் சுமந்தபடி மறுகரைக்கு வந்திறங்கியதைக் காட்சி ஊடகங்கள் நேரலையாக ஒளிபரப்பிய காட்சி, ஈரமுள்ள யாரையுமே உருக வைக்கும்.

இதுவரை இந்திய வட எல்லை மாநிலங்கள் மட்டுமே ராணுவத்தின் அவசர காலச் செயல்பாடு உணரப்பட்டிருக்கும்.

தென்னிந்தியாவில் பெரும் துயரான பேரிடர் நிகழும்போது, மத்திய ராணுவப்படை எப்படி எல்லாம் துரிதமாக செயலாற்றும் என்பதை தென்னிந்திய மக்கள் உணரும் சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது.

இந்த சமயத்தில், முக்கியமான ஒன்றை நினைவுப்படுத்த வேண்டும். கேரளாவைப் பொறுத்தவரை மலைப்பாங்கான பகுதிகள் அதிகமுள்ள ஒரு மாநிலத்தில் நிலச்சரிவுகள் நடப்பது புதிதல்ல.

1961-லிருந்து 2016 வரை கேரள மாநிலத்தில் நடந்த நிலச்சரிவுகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 438 பேர் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் மீட்புப்பணி நிறைவடையும்போது, இன்னும் துல்லியமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியே தெரிய வரலாம்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய முன்வரலாம். பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவுக் கரங்கள் நீளலாம்.

இத்தகைய பேரிடரை ஒரு மாநிலம் எதிர்கொள்ளும்போது அதன் வழியை தேசிய அளவில் மற்ற மாநிலஙகளும் உணரவேண்டும். ஆளுகின்ற மத்திய அரசும் முன் வர வேண்டும்.

அனைவரின் ஒருங்கிணைந்த ஆதரவும் உதவியும் மட்டுமே கேரள மாநிலத்தை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்க முடியும்.

இந்தச் சமயத்தில் கேரளாவின் முக்கிய வருவாயில் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருந்த சுற்றுலாத் துறைக்கு தற்போது நிகழ்ந்துள்ள இந்த பெருந்துயரம் ஒரு கரும்புள்ளியைப் போல அமையலாம்.

ஆனால், இயற்கையின் செழுமையான பகுதியைப் போல திகழ்ந்து கொண்டிருந்த மேற்குத் தொடர்ச்சி மலையை எப்படியெல்லாம் நாம் நம் தேவைகளுக்காக பாழ்படுத்தி இருக்கிறோம் என்பதையும் சற்றே குற்ற உணர்வோடு நாம் திரும்பிப் பார்த்தாக வேண்டும்.

பல்லாண்டு காலமாக அங்கு அடர்த்தியாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு, தேயிலைத் தோட்டங்களும் வேறுவிதமாக பணப் பயிர்களும் அங்கு பெரு முதலாளிகளின் லாபக் கணக்கை எதிர்பார்த்து, இயற்கையான காட்டின் வளம் சிதைக்கப்பட்டிருக்கிறது.

அதனால், இயற்கையாக மலையின் மழையின் உள்வாங்கிக் கொள்ளும் திறனை இந்த மலைப்பகுதி இழந்திருக்கிறது.

இயற்கையாக அமைந்திருக்கிற மலையினூடே சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக சொகுசு விடுதிகள் ஆங்காங்கே உருவாவது கடந்த பத்தாண்டுகளாவே அதிகப்பட்டிருக்கிறது.

இப்படி மேற்குத் தொடர்ச்சி மலை அதன் இயல்பான தன்மையை இழந்த நிலையில், இயற்கைப் பேரிடரை இயல்பாக எதிர்கொள்ள முடியாமல், இத்தகைய பெரு வெள்ளமும் அளப்பரிய சேதமும் உருவாகி நமக்கு முன்னே துயரச் செய்திகளாக நம்மைக் கடந்து போகின்றன.

நாமும் இத்தகைய செய்திகளை வெறுமனே ஓரிரு வாரங்களுக்கான செய்தியாக மட்டுமே கருதி இப்பெரும் துயரத்தைக் கடந்து போய் விட வேண்டாம்.