மிகச்சில பாத்திரங்கள் மட்டுமே திரையில் நடமாடும்போது, பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் போரடிக்கும். அதுவே, அவற்றுக்கு இடையேயான முரண்களை, பொய்களை, விடுபட்ட தகவல்களை வைத்துக்கொண்டு பிரச்சனைக்கான முடிச்சை இறுக்கினால் சுவாரஸ்யமான திரைக்கதை கிடைக்கும். அதன் வழியே நல்லதொரு காட்சியனுபவத்தைத் திரையில் பெறலாம்.
இந்த யோசனையோடு, ‘லெவல் கிராஸ்’ எனும் மலையாளப் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அர்பாஸ் அயூப். இதில் ஆசிஃப் அலி, அமலா பால், ஷராபுதீன் பெரும்பாலான காட்சிகளில் வந்து போகும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
படம் எப்படி இருக்கிறது?
அப்பாவி யார்?
காலம், இடம் குறித்த கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கதையை ‘லெவல் கிராஸ்’ஸில் சொல்கிறார் இயக்குனர் அர்பாஸ் அயூப்.
அதனை மனதில் பதிய வைத்தபிறகு படத்தைப் பார்க்க வேண்டும் என்பதே நிபந்தனை.
பாலை நிலம் போன்ற பரப்பு. அங்கு ஒரு லெவல் கிராசிங் இருக்கிறது. அதனைப் பராமரிக்கும் நபர், அதையொட்டியுள்ள வீட்டில் வசிக்கிறார். ஒரு நாளில் எப்போதாவதுதான் அந்த இடத்தை ரயில்கள் கடந்து செல்லும்.
ஒருநாள், ரயிலில் இருந்து ஒரு பெண் கீழே விழுவதைப் பார்க்கிறார் அந்த நபர். மயங்கிக் கிடக்கும் அந்தப் பெண்ணைத் தூக்கி வருகிறார்.
கண் விழிக்கும்போது, அந்தப் பெண் துணுக்குறுகிறார். இரண்டு பேர் சண்டையிடும்போது வாஷ் பேஷின் அருகே நின்று கொண்டிருந்த தான் கீழே விழுந்ததாகச் சொல்கிறார். ரயிலில் இருக்கும் கணவர் தன்னைத் தேடுவார் என்கிறார்.
அங்கிருந்து நடந்து செல்வது உசிதம் இல்லை என்று சொல்லும் அந்த நபர், அன்றிரவு அங்கேயே தங்கலாம் என்கிறார்.
இரவுப்பொழுதில், நீண்ட நாட்கள் கழித்து அந்த இடத்திற்கு அப்பெண் மட்டுமே வந்ததாகக் கூறுகிறார். அதனைக் கேட்டு அப்பெண் நிம்மதி கொள்கிறார்.
விடிந்தபிறகு, ரயில் வருவது குறித்து அறிவிக்கத் தொலைதூரத்திலுள்ள ரயில் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்று சொல்கிறார்.
அப்போது, ‘உங்களைக் குறித்த தகவலைச் சொல்கிறேன்’ என்கிறார். ஆனால், அவ்வாறு போனில் பேச முற்படும்போது, அந்த நபரைத் தடுக்கிறார் அப்பெண்.
தனது பெயர் சைதாலி என்றும், தான் ஒரு மனநல மருத்துவர் என்றும் தெரிவிக்கிறார். தன்னிடம் சிகிச்சை பெற வந்த ஜின்கோவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போது அவரால் தினமும் சித்திரவதை அனுபவித்து வருவதாகவும் கூறுகிறார்.
அதனைக் கேட்டதும், அப்பெண் மீது அந்த நபருக்கு இரக்கம் வருகிறது. அவர் தனது பெயர் ரகு என்று சொல்கிறார்.
தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பல பெண்களைத் தாயார் பார்த்ததாகவும், அவர் இறந்தபிறகு ஒற்றை ஆளாக அங்கு வசிப்பதாகவும் கூறுகிறார்.
அவர் தண்ணீர் எடுக்க வெளியே செல்ல, அந்த அறையைச் சுத்தம் செய்கிறார் அப்பெண். அப்போது, ஒரு பெட்டியில் ஒரு அடையாள அட்டை இருக்கிறது.
அதில், ‘கேட் கீப்பர் ரகு’ என்ற பெயரில் இன்னொரு நபரின் புகைப்படம் இருக்கிறது. கூடவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொடூரமாகக் கொன்ற ஒரு கொலையாளியை போலீசார் தேடுவதாகச் செய்தித் துணுக்குகளும் உள்ளன.
அதனைக் கண்டதும், அங்கு வசிக்கும் நபர் உண்மையான ரகு அல்ல என்று அந்தப் பெண்ணுக்குப் பிடிபடுகிறது.
அவர் அந்த அடையாள அட்டையை எடுத்த இடத்தில் வைப்பதற்குள் அந்த நபர் அங்கு வந்துவிடுகிறார். அதையடுத்து, அந்தப் பெண் கையில் இருக்கும் கத்தியைக் கொண்டு அவரை மிரட்டுகிறார்.
அதனைக் கண்டு பயமுறாமல் கத்தியைப் பிடித்திழுத்து கீழே வைக்கிறார் அந்த நபர். தன் மனைவி உறவினர் ஒருவருடன் சேர்ந்து துரோகம் செய்ததாகவும், அதனைத் தாங்க முடியாமல் நான்கு பேரையும் கொன்றதாகவும் இன்னொரு ‘கதை’யைச் சொல்கிறார்.
இவ்விரண்டு கதைகள் போதாதென்று, அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டு அவரது கணவர் வருகிறார். அவரது வருகையின்போது, அங்கு அப்பெண் இல்லை.
அவரோ, தனது மனைவிதான் மனநோயாளி என்றும், தான் ஒரு மனநல மருத்துவர் என்றும் கூறுகிறார்.
இந்த மூன்று பேரில் யார் உண்மையைச் சொல்கின்றனர்? அபாயகரமான இரண்டு பேர்களுக்கு மாட்டிக்கொள்ளும் அப்பாவி நபர் யார்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘லெவல் கிராஸ்’ஸின் மீதி.
ஊர்ந்து செல்லும் திரைக்கதை!
’லெவல் கிராஸ்’ திரையில் மொத்தமாக 116 நிமிடங்கள் ஓடுகிறது. ஆனால், ரொம்ப நேரம் படம் பார்த்த அயர்ச்சி நம்மைத் தொற்றுகிறது. காரணம், குறைவான அளவில் காட்சிகள் இருந்தாலும், அவை நத்தை போல மெதுவாக ஊர்ந்து செல்வது தான்.
இயக்குனர் அர்பாஸ் அயூப் அதனைத் திரைக்கதைக்கான ‘ஸ்டைல்’ ஆக கொண்டிருந்தாலும், அது எந்த விதத்திலும் பார்வையாளர்களைக் கவரவில்லை.
கதாபாத்திரங்களின் அசைவுகள் மெதுவாக அமைவதில் தொடங்கி, காட்சிகள் அடுத்த கட்டத்தை அடைவது வரை அனைத்தும் மந்த கதியில் நிகழ்வதைத் தவிர்த்திருக்கலாம்; படத்தின் நேரத்தைக் குறைத்திருக்கலாம்.
பிரேம் நவாஸின் தயாரிப்பு வடிவமைப்பில், கதை நிகழும் களத்தின் வெறுமையும் ஆங்காங்கே இருக்கும் சில பொருட்களும் நம் கவனத்தைக் கவர்கின்றன.
உடைந்த படகு, பேருந்து, தூசி படிந்த வீடு, அதனுள் இருக்கும் பொருட்களைக் காட்டுகையில் பிரேம்கள் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் எனுமளவில் உள்ளன.
விஎஃப்எக்ஸ் உதவியைப் பெறச் சில ஷாட்களை ‘க்ரீன்மேட்’டில் படம்பிடித்தாலும், ’யாருமற்ற நிலப்பரப்பைக் காண்கிறோம்’ எனும் உணர்வைத் தனது ஒளிப்பதிவால் உருவாக்கியிருக்கிறார் அப்பு பிரபாகர்.
படத்தொகுப்பாளர் தீபு ஜோசப், முடிந்தவரை இயக்குனர் சொல்லும் ஷாட்களை அடுக்கினால் போதுமென்று செயல்பட்டிருக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, காட்சிகளைத் தாங்கி நிற்கும் தூணாக உள்ளது. முதல் பாதியை நகர்த்திச் செல்வதில் அது முக்கியப் பங்காற்றுகிறது.
இயக்குனர் அர்பாஸ் அயூப்பின் தந்தை ஆடம் அயூப் இதற்கு வசனம் எழுதியிருக்கிறார். ‘வெறுமையைத் தவிர வேறெதுவும் இல்லை, ரொம்ப கீழே இருக்கிறேன்’ என்று ஒரு பாத்திரம் சொல்ல, ‘நல்ல விஷயம், இனிமே நீங்க மேலதான் போக முடியும்’ என்கிற வசனத்தை மருத்துவர் பாத்திரம் சொல்லும். இது போன்ற வசனங்கள் தனிப்பட்ட முறையில் கவர்ந்திழுப்பதோடு, கதையோட்டத்திற்கும் உதவுவதாக உள்ளது.
நல்ல முயற்சி!
குறைந்த பட்ஜெட்டில் படத்தை உருவாக்கினாலும், தேர்ந்த நடிகர்கள் சிலரைப் பயன்படுத்துவதன் மூலமாகக் கவன ஈர்ப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்பியிருக்கிறார் இயக்குனர் அர்பாஸ் அயூப். அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறார்.
தனது எண்ணத்திற்கேற்ப, மூன்று பாத்திரங்களுக்கு இடையிலான முரண்களைத் திரையில் சொல்லியிருக்கிறார். தாங்கள் செய்த குரூரங்களைச் சொல்லாமல் மறைக்க, அப்பாத்திரங்கள் பொய்களை உண்மை கலந்து சொல்வதாகக் காட்டியிருக்கிறார்.
அதுவே, மூன்று பிரதான பாத்திரங்களில் உண்மையைச் சொல்வது யார் என்ற தேடலை உருவாக்குகிறது.
படம் முடிவடையும்போது, இதற்காகத்தான் இப்பாத்திரம் இப்படிப் பேசியதோ என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வைக்கிறது. அந்த வகையில், ‘ஒரு உளவியல் கபடி’ ஆட்டம் திரைக்கதையில் காணக் கிடைக்கிறது.
நிச்சயமாக, அது இயக்குனர் அர்பாஸ் அயூப்பின் சாதனை தான்.
அதேநேரத்தில், இந்த கதை இவ்வளவு நேரம் திரையில் ஓட வேண்டுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அது இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
அது மட்டுமல்லாமல், படத்தில் நாயகனுடன் ஒரு கழுதை வருகிறது.
மிகச்சில ஷாட்களில் ஒரு வண்டு பறக்கிறது. அவை, குறிப்பிட்ட பாத்திரத்தின் மனநலப் பிரச்சனையைக் காட்டுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதனை ஏதோ ஒரு இடத்திலாவது அடிக்கோடிட்டுக் காட்டாமல் விட்டது சரியல்ல. போலவே, பாத்திரங்களின் பின்னணியில் காட்டப்படும் பொருட்கள் என்ன அர்த்தத்தை உணர்த்துகின்றன என்றும் முழுமையாக அறிய முடிவதில்லை.
கொஞ்சம் முயற்சி செய்திருந்தால், இன்னும் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக, எந்த இடத்திலும் நேர்த்தி குறையாத ‘மைண்ட் கேம்’ ஆக இதனைத் தந்திருக்கலாம். அந்த வாய்ப்பை ‘மிஸ்’ செய்திருக்கிறது ‘லெவல் கிராஸ்’.
– உதயசங்கரன் பாடகலிங்கம்