பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை மனு பாகர் தொடங்கியுள்ளார்.
இதன்மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்களின் நம்பிக்கையையும், பாராட்டுகளையும் பெற்று இந்திய தேசியக் கொடியை பாரிஸில் பறக்கவிட்டுள்ளார் மனு பாகர்.
இவர் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக்கு வந்ததே சுவாரஸ்யமான கதைதான். இவரது தந்தை ராம்கிஷண் பாகர், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்திலுள்ள கோரியா கிராமத்தைச் சேர்ந்தவர்.
மெர்ச்சண்ட் நேவி பிரிவில் தலைமை இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். 14 வயது வரை மனு பாகருக்கு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் எந்த ஆர்வமும் இல்லை. மாறாக அவருக்கு இருந்த ஆர்வம் எல்லாம் தற்காப்புக் கலையின் மீதுதான்.
மணிப்பூர் மாநிலத்தில் கற்றுத் தரப்படும் ஹுயன் லாங்லான் என்ற தற்காப்புக் கலை என்றால் அவருக்கு உயிர். அதைத்தான் அவர் கற்றுத் தேர்ந்து வந்தார்.
அது சம்பந்தமான போட்டிகளிலும் அவர் பங்கேற்று வந்தார். அதைப் போலவே குத்துச்சண்டை, டென்னிஸ், ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வெல்ல ஆரம்பித்தார்.
அதன் பின்னர் 2017-ல் அவருக்கு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து மகளின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய ரூ.1.5 லட்சம் செலவு செய்து துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்கு அனுப்பினார் அவரது தந்தை.
இதற்கு நல்ல பலனும் இருந்தது. 2017-ல் நடைபெற்ற ஆசிய ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளியும், அதே ஆண்டில் கேரளாவில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதலில் 9 தங்கப் பதக்கங்களையும் மனு பாகர் அள்ளினார். 15 வயதிலேயே சாதனைகள் பல செய்தார்.
இதைத் தொடர்ந்து மெக்ஸிகோவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார். இதன்மூலம் இளம் வயதில், உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இதுவரை ஆசிய விளையாட்டில் ஒரு தங்கம், உலகக் கோப்பை போட்டிகளில் 9 தங்கம், 2 வெள்ளி, இளையோர் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் 4 தங்கம், ஒரு வெண்கலம், காமன்வெல்த் விளையாட்டில் ஒரு தங்கம் என சர்வதேச பதக்கங்களைக் குவித்துள்ளார்.
ஆனால். இவருக்கு சறுக்கல் ஏற்பட்டது 2021-ல் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போதுதான்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 12-வது இடத்தையும், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 15-வது இடத்தையும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவில் 7-வது இடத்தையும் பிடித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின்போது அவரது துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டது. துப்பாக்கியை மாற்றுவதற்கு, போட்டி நிர்வாகிகளிடம் அனுமதி கோரினார் மனு பாகர்.
ஆனால் நிர்வாகிகள் துப்பாக்கியை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவரால் அந்த ஒலிம்பிக்கில் பிரகாசிக்க முடியாமல் போனது.
இதனால் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டே தனக்கு வேண்டாம் என்று சில காலம் ஒதுங்கிவிட்டார் மனு பாகர். மன உளைச்சலில் இருந்த மனு பாகரை மீட்டெடுத்து வந்தது அவரது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாதான்.
அவரை மீண்டும் பயிற்சிக்கு அழைத்து வந்து தற்போது பதக்கம் வெல்ல வைத்து சாதனை நாயகியாக மாற்றிய பெருமை அவரது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவைத்தான் சேரும்.
இந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு மட்டுமல்லாமல், 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவிலும் மனு பாகர் பங்கேற்க உள்ளார்.
இதனால் இந்தியாவுக்கு மேலும் சில பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று விளையாட்டு விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
வெற்றி குறித்து மனு பாகர் கூறும்போது, “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வி கண்டபோது மனம் உடைந்தேன். எனது பயிற்சியாளர் என்னைத் தேற்றி பயிற்சியில் ஈடுபட வைத்தார். இந்த ஒலிம்பிக் போட்டியின்போது எனது மனம் சொல்வதைக் கேட்டேன்.
உனக்கு இதுதான் இலக்கு. எனவே, செய்ய வேண்டிய செயலைச் செய்து விடு என்று மனம் கூறியது. அதைத்தான் செய்தேன். குறி தப்பாமல் இலக்கைத் துளைத்தது. வெற்றிக்கனி கிட்டிவிட்டது” என்கிறார் பெருமையாக. வாழ்த்துகள் மனு பாகர்.
இதனிடையே பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற மனு பாகருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
– வா.சங்கர்
நன்றி: தி இந்து தமிழ்