திரையில் தென்படும் ஒரு நடிகர் அல்லது நடிகையை ரசிகர்கள் கொண்டாடுவதற்குப் பல திரைப்படங்கள் வேண்டும் என்றில்லை. ’ஒரே ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரேயொரு ப்ரேம் கூடப் போதும்’ என்று சொல்கிற ரசிகர்கள் பலர் எல்லா காலத்திலும் இருந்து வருகின்றனர். ஒரு படத்திற்குப் பிறகு வேறு படைப்புகளில் இடம்பெறாத கலைஞர்களையும் கூட அவர்கள் மனதில் பதித்திருப்பார்கள்.
துணை நடிகர், நடிகையராக, நாயக நாயகியரின் பின்னால் நடனம் ஆடுபவர்களாக இருப்பவர்களையும் கூட அவர்கள் உன்னிப்பாகக் கவனித்து ரசிப்பார்கள். அப்படியிருக்க, ஒரு படத்தின் நாயகனையும் நாயகியையும் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.
அந்த வகையில், ஸ்ருதி ஹாசனை ரசிகர்கள் கொண்டாட ‘புலி’ படத்தில் வரும் ’அடி ஏண்டி ஏண்டி என்ன மாத்துற’ பாடலொன்றே போதும். அப்படிச் சொல்லும் அளவுக்கு அழகுப் பதுமையாக, அதில் தோன்றியிருப்பார். அதற்காக, வெறுமனே தோற்றம் சார்ந்து மட்டுமே அவரைப் பாராட்டலாம் என்று எவரும் நினைத்துவிட முடியாது. அந்த அளவுக்குத் திரையில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் ஸ்ருதி ஹாசன்.
கமலின் மகள்!
2000களில் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பல நட்சத்திர வாரிசுகள் பலர் நாயகர்களாகவும் நாயகிகளாகவும் களமிறங்கினர். அந்த வரிசையில், நடிகர் கமல்ஹாசனின் மகள் என்ற அறிமுகமே ஸ்ருதியை நோக்கிப் பல பட வாய்ப்புகள் வரக் காரணமாக இருந்தது. வெங்கட்பிரபுவின் இரண்டாவது படமான ‘சரோஜா’ உட்படச் சில தமிழ் படங்களில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை எதுவும் அடுத்த கட்டத்தை எட்டவில்லை.
‘எவனோ ஒருவன்’ இயக்குனர் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் மாதவன் உடன் நாயகியாக ஸ்ருதி நடிப்பதாகச் சில செய்திகள் வெளியாகின. ’என்றென்றும் புன்னகை’ என்று கூட அதற்குப் பெயரிடப்பட்டது. ஆனால், அப்படம் நின்றுபோனது.
பிறகு, இந்தியில் இம்ரான் கான் உடன் ‘லக்’ படத்தில் நடித்தார் ஸ்ருதி. இந்தி திரையுலகில் அறிமுகம் ஆகும் நடிகைகள் எப்படித் திரையில் தோன்றுவார்களோ, அப்படித்தான் அதில் நடித்தார். அப்படியிருந்தும், அப்படம் வெற்றி பெறாத காரணத்தால் ஸ்ருதிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
2011-ல் சித்தார்த் ஜோடியாக ‘அனகனகா ஒ தீருடு’ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
அந்த நிலையில்தான் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சூர்யா உடன் ‘7ஆம் அறிவு’ படத்தில் தோன்றினார் ஸ்ருதி ஹாசன். அவரது குரலும் நடிப்பும் வழக்கத்திற்கு மாறாக இருந்த காரணத்தால், சிலரால் ‘ட்ரோல்’ செய்யப்பட்டது. அதையும் மீறி, அவரது நடிப்பு பெரும்பாலான ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பான பாடல்கள், காட்சிகள் வழியாகப் புகழ் வெளிச்சம் பெறத் தொடங்கினார் ஸ்ருதி.
2012-ம் ஆண்டு ஸ்ருதியின் திரை வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டது. அந்த ஆண்டு தனுஷ் ஜோடியாக ‘3’ படத்திலும், பவன் கல்யாண் உடன் ‘கப்பார் சிங்’ படத்திலும் நடித்தார். இரண்டுமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தைக் குவித்தன. அதன்பிறகு வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.
‘வாரிசு’ இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் வெளியான ‘எவடு’, சுரேந்தர் ரெட்டியின் ‘ரேஸ் குர்ரம்’ படங்கள் தெலுங்கில் முன்னணி நடிகையாக ஸ்ருதியை மாற்றியது.
தொடர்ந்து ‘ஸ்ரீமந்துடு’, ‘பிரேமம்’, ‘கட்டமராயுடு’ என்று தெலுங்கிலும், ‘கப்பார் இஸ் பேக்’, ‘வெல்கம் பேக்’, ‘ராக்கி ஹேண்ட்சம்’, ’யாரா’ என்று இந்தியிலும், ‘வேதாளம்’, ‘புலி’, ‘சிங்கம் 3’ என்று தமிழிலும் நடித்தார். இவையனைத்திலும் முன்னணி நாயகர்களே நடித்தனர் என்பது நாம் அறிந்த விஷயம்.
தைரியமான முடிவுகள்!
கோவிட் -19 கால இடைவெளிக்குப் பிறகு, 2023இல் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என்ற இரண்டு மூத்த நடிகர்களின் ஜோடியாக ‘வால்டர் வீரய்யா’, ‘வீர சிம்ஹ ரெட்டி’ படங்களில் ஸ்ருதி நடித்தது எவரும் எதிர்பாராதது. தற்போது ‘சலார் 1’ வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘டகாய்ட்’ படத்திலும், தமிழில் ரஜினியுடன் ‘கூலி’யிலும் நடிக்கிறார். ‘சென்னை ஸ்டோரி’ எனும் ஆங்கிலப் படத்திலும் நடிக்கிறார்.
திரைப்படங்களில் பின்னணி பாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள ஸ்ருதி ஹாசன், ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்திற்கான புரோமோஷன் பாடலுக்கு இசையமைத்ததும் நாம் அறிந்ததே. தனி இசை ஆல்பங்களை வெளியிடும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். திரைப்படங்களில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாவதும் கூடச் சில நாட்களில், ஆண்டுகளில் நிகழக்கூடும். யார் கண்டது?
முன்னணி நடிகையாக இருந்தபோதும், பொதுவெளியிலோ, மேடைகளிலோ, சமூகவலைதளங்களிலோ கேள்விகளை எதிர்கொள்வதில் ஸ்ருதி ஹாசன் ஒருபோதும் தயங்கியதில்லை. பதில் சொல்ல இயலா தருணங்களில் கூட, ‘நோ கமெண்ட்ஸ்’ என்று சொல்வதற்குப் பதிலாக ஏதாவது சொல்வார்.
வெளிப்படைத்தன்மையோடு பதில் சொல்லத் தயாராக இருந்தால் மட்டுமே, அப்படிப் பேச முடியும். தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களைக் கூடச் சில நேரங்களில் அவர் பொதுவெளியில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது பதில்களே, ‘சுயாதீனமான வாழ்க்கை’ குறித்த அவரது திடமான எண்ணத்தைப் புலப்படுத்தும். அதுவே, இன்றைய இளம்பெண்களில் பலர் அவரை ரசிக்கவும், சிலாகிக்கவும் காரணமாக இருக்கிறது.
ஒரு நடிகை இப்படித்தான் திரைப்படங்களில் அறிமுகம் ஆவார். இப்படித்தான் வளர்ச்சியைப் பெறுவார். ஒருகட்டத்தில் தனக்கான திருப்தியுடன் இன்னொரு திசை நோக்கி நகர்வார் என்ற பார்முலாவில் ஸ்ருதியை அடக்க முடியாது. அவரது நடிப்பும் தோற்றமும் பொதுவெளிப் பேசும் கூட அப்படித்தான் இருந்து வருகின்றன.
ஸ்ருதி ஹாசன் திரையில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் தொடர்ந்து நடிப்பிலும், இசையமைப்பிலும் அவர் கவனம் செலுத்துகிறார். எதிர்காலத்தில் திரைப்பட ஆக்கத்தில் இன்னும் பல பிரிவுகளில் அவர் கோலோச்சக் கூடும். அதனைப் பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்கும்விதமாக அவரது இருப்பு திரைத்துறையில் இருக்கிறது என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது!
– மாபா