ராயன் – எதிர்பார்ப்புகளுக்கு மாறானதொரு திரைக்கதை!

கமர்ஷியல் படங்களை ரசிகர்கள் எதற்காகப் பார்க்கின்றனர்? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் பல்வேறுபட்ட பதில்கள் கிடைக்கும்.

அவற்றை வடிகட்டி ஒன்றுசேர்த்தால், சிறந்த பொழுதுபோக்காக அந்த அனுபவம் இருக்க வேண்டும் என்பதே இறுதியாக மிஞ்சும்.

அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் ‘நாலு பைட்டு, அஞ்சு பாட்டு, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமெண்ட்’ என்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சீரியசாக கதை சொல்லும் படங்களின் வழியாகவும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தலாம். அவற்றில் ஒன்றாக இடம்பெற முயற்சித்திருக்கிறது தனுஷின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ராயன்’.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கும் இப்படம், நமக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?

உயிரைக் காப்பாற்றும் பயம்!

நெல்லை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறது ஒரு குடும்பம்.

தாய், தந்தை, மூன்று சிறுவர்கள், பால் குடி மாறாப் பச்சிளம் பெண் குழந்தை என்று ஆறு பேரைக் கொண்டிருக்கிறது.

ஒருநாள் அந்தப் பெற்றோர் வெளியூர் செல்வதாகக் கூறிக் கிளம்புகின்றனர். அன்றிரவு அவர்கள் வீடு திரும்பவில்லை.

மூத்த மகன் இரு சகோதரர்களையும் சகோதரியையும் கவனித்துக் கொள்கிறார். இரண்டு நாளாகியும் பெற்றோர் வராதபோது, தங்களுக்குத் தெரிந்த ஊர் பூசாரியை அவர் நாடுகிறார்.

‘எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஆறுதல் சொல்கிறார் அந்த நபர். நால்வரையும் தன் வீட்டிலேயே தங்க வைக்கிறார். நள்ளிரவில் பெண் குழந்தையை மட்டும் விலைக்குத் தருவதாகக் கூறி, சிலரை அழைத்து வருகிறார்.

அவர்களது பேச்சைக் கேட்கும் அந்தச் சிறுவன் அதிர்ந்து போகிறார். தங்கையைத் தோளில் தூக்கிக்கொண்டு, சகோதரர்கள் இருவரையும் கிளப்பிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பத் தயாராகிறார்.

அப்போது, வீட்டுக்குள் பூசாரி நுழைகிறார். அவர்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர் என்று தெரிந்ததும், பெண் குழந்தையைப் பிடுங்குகிறார்.

குழந்தையைக் கொடுத்துவிடுமாறு அவரிடம் கூறுகிறார் அந்தச் சிறுவன். அவர் மறுக்க, அரிவாளால் வெட்டிக் கொலை செய்கிறார்.

அந்த இடத்தை விட்டு அகலும் அவர்கள், ஒரு லாரியில் ஏறி சென்னைக்கு வருகின்றனர். மெல்லத் தனக்கென்று ஒரு வேலையைத் தேடிக் கொள்கிறார் அந்தச் சிறுவன்.

சகோதரர்களையும் சகோதரியையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பைச் சுமக்கத் தொடங்குகிறார். நால்வரும் ஒரு குடும்பமாக வளர்கின்றனர்.

காத்தவராயன் (தனுஷ்), முத்துவேல்ராயன் (சந்தீப் கிஷன்), மாணிக்கராயன் (காளிதாஸ் ஜெயராம்), துர்கா (துஷாரா விஜயன்) ஆகியன அவர்களது பெயர்கள்.

தங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மார்க்கெட்டில் ஒரு வாகனத்தில் துரித உணவு விற்பனையகத்தை நடத்தி வருகிறார் காத்தவராயன்.

சகோதரர்கள் இருவரும் அதனை நடத்த உதவிகரமாக இருக்கின்றனர். துர்கா வீட்டில் இருந்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்கின்றனர் சகோதரர்கள்.

மேகலா (அபர்ணா பாலமுரளி) என்ற பெண்ணைக் காதலிக்கிறார் முத்துவேல். அவர்களது காதல் தெரிந்தும், சகோதரன் ஒரு வேலையில் சேர்ந்தபிறகே இருவருக்கும் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் காத்தவராயன்.

உதார் பேச்சு, மது போதை, அடிதடி என்றிருக்கிறார் முத்துவேல். அது காத்தவராயனுக்குக் கொஞ்சம் கூடப் பிடித்தமானதாக இல்லை.

கல்லூரியொன்றில் படிக்கும் மாணிக்கம், அங்கு நடக்கும் தேர்தலில் எதிர்தரப்பு தொந்தரவு செய்வதாகக் கூறுகிறார். அதற்கு, ‘தேர்தலில் இருந்து விலகிவிடு’ என்கிறார் காத்தவராயன்.

எந்த வம்புதும்புக்கும் போகாமல் அமைதியாக வாழ வேண்டும் என்பது காத்தவராயனின் கொள்கை. அதேநேரத்தில், தனக்கோ அல்லது தனது சகோதரர்கள், சகோதரி உயிருக்கோ ஆபத்து எனும்போது எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பது அவரது இயல்பாக உள்ளது.

ஒருமுறை சில நபர்களை முத்துவேல் அடித்துவிட, அந்த பகுதியில் தாதாவாக இருக்கும் துரையைச் (சரவணன்) சந்தித்து மன்னிப்பு கேட்கிறார் காத்தவராயன். ஆனால், விதி அவருடனேயே மோதும் சந்தர்ப்பத்தை உருவாக்குகிறது.

துரையோடு மோதி, அவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புபவர் சேதுராமன் (எஸ்.ஜே.சூர்யா). தனது தந்தையைக் கொன்ற துரையைப் பழி வாங்கப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார். ஆனால், சில ஆண்டுகளாகவே இரு தரப்புக்கும் இடையே எந்தச் சண்டையும் இல்லை.

அதனை மீறி, இரண்டு பேருக்கும் இடையே மோதலை உருவாக்கி, இரு தரப்பையும் சின்னாபின்னமாக்க முயற்சிக்கிறார் புதிதாக வந்திருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி (பிரகாஷ் ராஜ்).

நேர்மையான இன்ஸ்பெக்டர் என்று பெயர் வாங்கிய அவரது தந்தை, அந்தப் பகுதியில் நிகழ்ந்த ஒரு மோதலில் உயிரிழந்ததே அதற்குக் காரணம்.

அந்த போலீஸ் அதிகாரி சில ரௌடிகளைக் கொண்டு சேதுராமனைத் தாக்குகிறார். உயிர் பிழைக்கும் சேது, கொல்ல வந்தது துரையின் ஆட்கள் என்று எண்ணுகிறார். அவரது மகனைக் கொல்ல ‘ஸ்கெட்ச்’ போடுகிறார்.

ஒரு பாரில் துரையின் மகன் நண்பர்களோடு மது அருந்துவதை அறிந்து, அங்கு தனது ஆட்களை அனுப்புகிறார்.

அன்றைய தினம், அதே பாரில் முத்துவேலும் மது அருந்துகிறார். அப்போது, ‘எனது தந்தையை ஏன் அடித்தாய்’ என்று கேட்டு, அவரிடம் சண்டையிடுகிறார் மேகலா. அவர் திட்டிவிட்டு, அடித்துவிட்டுப் போக, அங்கு மது அருந்தும் துரையின் மகன் அதனைக் கண்டு சிரிக்கிறார்.

அதனைப் பார்த்துக் கோபமுறும் முத்துவேல், அவர்களைத் தாக்குகிறார். அப்போது, சேதுராமனின் ஆட்களும் களத்தில் இறங்குகின்றனர்.

ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்க, இறுதியில் துரையின் மகனைக் கொல்கிறார் முத்துவேல்.

இந்த விஷயம் துரைக்குத் தெரிய வருகிறது? அதேநேரத்தில், தனது ஆட்கள் துரையின் மகனைக் கொல்லவில்லை என்பது சேதுராமனுக்குத் தெரிகிறது.

அதன்பிறகு என்னவானது? ‘குடும்பத்தோடு அமைதியாக வாழ வேண்டும்’ என்ற காத்தவராயனின் எண்ணம் நிறைவேறியதா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.

‘உயிரைக் காப்பாற்றும் பயம்’ மட்டுமே, சகோதரர்களையும் சகோதரியையும் இழுத்துக் கொண்டு கிராமத்தில் இருந்து நகரத்திற்குக் காத்தவராயன் இடம்பெயரக் காரணமாகிறது.

சில ஆண்டுகள் கழித்து, அங்கும் அந்த பயம் முளைக்கும்போது என்னவாகிறது என்பதே ‘ராயன்’ கதையின் மையம்.

ஆனால், திரைக்கதை அதனைச் சரிவரத் தெளிவாகச் சொல்லியிருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.

அபாரமான உழைப்பு!

முதல் பாதி முழுக்க தனுஷ் தனது இருப்பை வெளிக்காட்டவே இல்லை. கிட்டத்தட்ட ‘அசுரன்’ படத்தில் வருவது போன்றே இதிலும் அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவர் வரும் காட்சிகளில் ‘அதீதமாக’ ஹீரோயிசம் வெளிப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. ‘பில்டப்’ ஏதுமின்றி அக்காட்சிகள் இருக்கின்றன என்பதால் அது சட்டென்று பிடிபடுவதில்லை.

சந்தீப் கிஷன், அபர்ணா ஜோடிக்கு அதிகக் காட்சிகள் தரப்பட்டிருக்கின்றன. அதற்கேற்ப அவர்கள் இருவரும் நன்றாக நடித்துள்ளனர். காளிதாஸ் ஜெயராமுக்கு அதே அளவுக்குக் காட்சிகள் இல்லை என்றபோதும், அவரது இருப்பு குறை சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

படத்தின் பின்பாதியில் துஷாரா விஜயனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அவரும் அதனைச் சரிவரப் பயன்படுத்தியிருக்கிறார்.

செல்வராகவனுக்கும் இதில் நிறைய காட்சிகள் உண்டு. அவரும் தன் பங்குக்கு நடிப்பை வழங்கியிருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா இதில் வில்லனாக வருகிறார். ஆனால் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘மார்க் ஆண்டனி’ போல இதில் அவரது இருப்பு கொண்டாடத்தக்க வகையில் அமையவில்லை.

போலவே சரவணன், பிரகாஷ்ராஜ், இளவரசு, வரலட்சுமி சரத்குமார், திலீபன் என்று இதில் பலர் வந்து போயிருக்கின்றனர்.

ஒரு பாத்திரமாக அவர்கள் வந்து போயிருப்பது பாராட்டுக்குரியது என்றபோதும், திரைக்கதையில் அவர்களது இடம் முழுமையற்று இருப்பது ஒரு குறையாகத் தென்படுகிறது.

ஓம் பிரகாஷ் இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு ஷாட்டும் செறிவான உள்ளடக்கத்துடன் இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.

அதற்கேற்ப, கலை இயக்குனர் ஜாக்கியின் குழு பிரேம்களை வார்க்க உதவியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. காட்சிகளை ‘நறுக்’கென்று கட் செய்திருக்கிறார். சில இடங்களில் நமக்குள் கேள்விகள் முளைப்பதற்கும் பதில்களற்று போவதற்கும் அதுவே வழி வகுக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களை தியேட்டரில் கேட்கையில் ‘இனிமையாக’த் தோன்றுகிறது.

பிரபுதேவாவின் நடன அமைப்பில் ’அடங்காத அசுரன் தான்’ பாடலின் உருவாக்கம் பிரமிக்க வைக்கிறது. ஆனால், அது ஈர்ப்பின் உச்சத்தில் நம்மை ஆழ்த்தவில்லை.

பின்னணி இசை முன்பாதியில் படத்தோடு ஒன்ற வைக்கிறது. பின்பாதியில் அப்படிப்பட்ட உணர்வு நமக்குள் எழுவதில்லை.

தனுஷ் எழுத்தாக்கம் செய்து இதனை இயக்கியிருக்கிறார். பல பாத்திரங்கள். அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள். உணர்வுகளின் வழியே நகரும் கதை.

முரண்களால் விளையும் பிரச்சனை. அதற்கான தீர்வினை அதுவரை சொல்லப்பட்ட கதையின் போக்கிலேயே அமைத்தல் என்று இந்தப் படத்தை ஆக்கியிருக்கிறார். உண்மையில், இதில் அவரது குழுவினரின் உழைப்பு அபாரம்.

ஒரு ‘கேங்க்ஸ்டர் ட்ராமா’ வகைமையில் அமைந்த படத்தைப் பார்க்கிறோம் என்கிற உணர்வு எங்குமே நழுவவில்லை. அதேநேரத்தில், இப்படம் நமக்கு முழு திருப்தி தருவதாகவும் இல்லை.

காரணம், இடைவேளை வரை ஒரு இலக்கு நோக்கிப் பயணிக்கும் திரைக்கதை அதன் பின் வேறு திசையில் சென்றதே. அந்த விலகல் சரிவரச் சொல்லப்படவில்லை என்பதால், படம் முடிவடைந்தபிறகு அதிருப்தியே மிஞ்சுகிறது.

பழைய பாணியில்..!

‘ராயன்’ கதை ரொம்பச் சாதாரணமானது. வழக்கத்திற்கு மாறான பாத்திர வார்ப்பு வழியே அதனைச் சொல்ல முனைந்தாலும், திரைக்கதையில் ‘க்ளிஷேக்கள்’ கொட்டிக் கிடப்பது இன்னொரு குறை.

போலவே, ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் படம் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்போடு வந்தவர்களை ஏமாற்றுகிறது இப்படம். ’பழைய பாணியில்’ இத்திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

ராயனில் தனுஷ் கையாண்டிருக்கும் கதை சொல்லல் போலவே இதர மொழிகளில் பல கேங்க்ஸ்டர் படங்கள் வந்திருக்கின்றன.

ஆனால், அவை போன்றில்லாமல் இதன் திரைக்கதை பல குழப்பங்களைக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, ஒரு காட்சியில் ‘பத்து வருஷத்துக்கு முன்ன ஒரு ஏழரையை இழுத்து விட்ட, நான் தான் அதை தீர்த்து வச்சேன்’ என்று தனுஷிடம் சரவணன் சொல்வார். அது என்ன சம்பவம் என்பது திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்காது.

இது போலப் பல கேள்விகளுக்கு இதில் பதில்கள் இல்லை. படத்தை ‘ட்ரிம்’ செய்யும்போது அக்காட்சிகள் விடுபட்டிருக்கலாம்.

ஆனால், அதுவே இந்தப் படத்தின் உள்ளடக்கம் செறிவற்று இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனைச் சரி செய்திருக்கலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் படம் பார்க்க வருபவர்கள் அதனை ரசிக்கும்பட்சத்தில் இதன் வெற்றி வேறுமாதிரியாக அமையலாம்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

DhanushPrakash RajRaayan Movie Reviewஎஸ்.ஜே.சூர்யாதனுஷ்ராயன் விமர்சனம்
Comments (0)
Add Comment