பாரீஸ் ஒலிம்பிக்: 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்பு!

206 நாடுகள் பங்கேற்கும் 33-வது ஒலிம்பிக் போட்டி பாரீசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது. 3-வது முறையாக பாரீசில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதில், இந்திய அணி சார்பில் 117 பேர் பங்கேற்கிறார்கள். இப்போட்டியில், முதல் முறையாக வீரர்கள், வீராங்கனைகள் சம அளவில் கலந்து கொள்கிறார்கள். இன்று துவங்கும் ஒலிம்பிக் போட்டியில், 32 விளையாட்டில் 46 பந்தயத்தில் 324 வகை பிரிவில் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஒலிம்பிக் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தொடக்க விழாவை மைதானத்தில் இல்லாமல், பாரீசின் புகழ்பெற்ற சென் நதிக் கரையில் நடத்துகிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல்முறை குறிப்பிடத்தக்கது.

பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

33 rd paris-olympicsolympic_gamesஒலிம்பிக்_போட்டி