அறிந்துகொள்வோம் உலகை உலுக்கிய 40 சிறுவர்களை!

நூல் அறிமுகம்:

ஒரு மனிதன் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்றால் சாதாரண மனிதனைப் போல் அல்லாமல் நாம் செய்யும் வேலையில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும். தாம் கேட்கும் கேள்விகள் கேள்வியோடு நின்று விடக்கூடாது, அதற்கான பதில் கிடைக்கும் வரை கேள்வி கேட்க வேண்டும்.

இல்லையென்றால் இந்த கேள்விக்கான பதிலை நாமே கண்டுபிடிக்க வேண்டும். அப்படித்தான் இந்த உலகை மாற்றிய 40 சிறுவர்களின் அசாத்தியமான வரலாற்றை ஆசிரியர் கூறுகிறார் இப்புத்தகத்தில்.

*ஓய்வு நேரம் அனைத்தையும் வாசிப்பில் கழித்த சிறுவன். தன் தந்தையிடம் கேள்விகளைக் கேட்டு நச்சரித்ததினால் அவரை கழிவறையில் வைத்து பூட்டுகின்றனர். அப்பொழுதும் அசராத சிறுவன் கழிவறையில் உட்கார்ந்து தான் கேட்ட கேள்விக்கு பதிலை அவனே தேடுகிறான்.

அச்சிறுவன் வேறு யாருமல்ல கற்பதில் பிடிவாதம், கடும் பயிற்சி, யாருக்கும் எதற்கும் பயப்படாத சிறுவன். பின்னாளில் சுவாமி விவேகானந்தராக நமக்கு அறிமுகமானவர்.

*படிக்கத் தெரியாத சிறுவன் தன் அண்ணனிடம் கற்ற படிப்பறிவை வைத்துக் கொண்டு தன்னுடைய 16-வது பிறந்த நாளில் தன் அண்ணனுக்கு 100 பக்கங்கள் கொண்ட ஒரு கவிதை தொகுப்பை எழுதி பரிசளித்தார். பிற்காலத்தில் தேசிய கீதத்தைப் படைத்து கீதாஞ்சலி என்ற நூலுக்கு நோபல் பரிசு வென்றவர் நம் தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர்.

*ஆத்மஸ் போன்ஷா என்று பெயர் கொண்ட அந்த சிறுமி மூன்றரை வயதிருக்கும்போது அம்மாவுடன் சர்ச்சுக்கு செல்வாள். அப்பொழுது பாதிரியார் கிழிந்த பைபிளைக் கொண்டு படிக்க முடியாமல் திணறிய போது தன்னுடைய மழலை குரலால் அந்த வாக்கியத்தை பிழையில்லாமல் சொல்லி முடித்தார் அந்த சிறுமி.

பிற்காலத்தில் அன்னை தெரேசாவாக இந்திய மண்ணில் நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் சேவைகள் செய்து தன் வாழ்வையே அர்ப்பணித்தால் ஆக்னஸ்.

*ரயில் நிலையத்தை ஆய்வுக்கூடம் ஆக்கிய தாமஸ் ஆல்வா எடிசன். தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 2000 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஒரு மனிதர்.

*வெள்ளைக்கார ஆசிரியரை எதிர்த்து கோஷம் எழுப்பிய மாணவன் பகத்சிங்.

*காடு கரையெல்லாம் சுற்றி அங்கே இருக்கின்ற மண் புழுக்கள், பொன்வண்டுகள், புறாக்கள், அணில்கள் என அனைத்தையும் தன் அறையில் வைத்து ரகசியமாக பாதுகாத்த சிறுவன் பிற்காலத்தில் பரிணாமவியல் தத்துவத்தை எடுத்துரைத்து சார்லஸ் டார்வின் ஆக உலகிற்கு அறிமுகமானவர்.

*நட்சத்திரக் கூட்டத்தில் நம் மூவர்ணக் கொடியோடு ஒரு பறக்கும் தட்டு. மூன்று வயதிலேயே நட்சத்திரங்களுக்கு நடுவே நமது மூவர்ண தேசிய கொடியின் நிறத்தில் பறக்கும் தட்டை வரைந்து அசத்தியவர்.

இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா என்ற பெயரைப் பெற்ற அவர் விண்வெளி விபத்தில் மறைந்து விட்டாலும் நம் உள்ளங்களில் இருந்து என்றும் மறைய மாட்டார்.

*சூரிய ஒளியைக் கண்ணாடிக்குள் சிதற வைத்த சிறுவன் சர் சி.வி ராமன் என 40 சிறுவர்களின் வரலாற்றைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

உண்மையில் குழந்தைகள் இந்த நூலை வாசிப்பதினால் சிறுவயதில் இவர்கள் செய்த சாகசங்கள் நம் பிள்ளைகளையும் ஆட்கொள்ளும்.

*****

நூல்: உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்
ஆசிரியர்: ஆயிஷா இரா நடராசன்
புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 112
விலை: ரூ.90/-

Ayesha Era Natarasanulagai-ulukkiya-40-siruvargal booஆயிஷா இரா நடராசன்உலகை உலுக்கிய 40 சிறுவர்கள் நூல்