திருவாரூரில் ஒட்டகம் வளர்க்கும் துபாய் தொழிலதிபர்!

சக்சஸ் ஸ்டோரி

திருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் அருகே நீர்மங்கலம் கிராமத்தில் இருக்கிறது ஏஎம்இசட் ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை. அதன் உரிமையாளர் ஜியாவுதீன். 1974 முதல் துபாய் மண்ணில் தொழில் செய்துவரும் தொழிலதிபர்.

தன் பூர்வீக கிராமத்திற்கு அருகிலேயே 25 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணையை அமைத்துள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்துபோகும் ஜியாவுதீனுக்கு தன் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவேண்டிய கடமை. சொந்த ஊரில் நிலம் வாங்கி பண்ணை தொடங்கினார்.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் மீன், கோழி, வாத்து, ஆடு, மாடு மற்றும் ஒட்டகங்கள் வரை வளர்க்கப்படுகின்றன. ஒருபகுதி நிலத்தில் பாரம்பரியமான கறுப்புக் கவனி நெல் ரகமும் பயிரிடப்படுகிறது.

நம்மிடம் பேசிய ஜியாவுதீன், “1976 முதல் துபாயில் தொழில் தொடங்கி நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனத்தில் 40 பேர் வேலை செய்கிறார்கள்.

தொடக்க நாட்களில் எங்களிடம் அதிக நிலம் இருக்கவில்லை. நம்முடைய பூர்வீக நிலத்தை எப்போதும் கைவிட்டுவிடாதே என்று ஒருமுறை என்னிடம் அப்பா கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, நண்பரின் உதவியுடன் விவசாயம் செய்துவந்தேன். பிறகு மெல்ல ஓர் ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்க நினைத்தேன்.

2005-ம் ஆண்டில் பண்ணையைத் தொடங்கினேன். எங்களுக்கு அருகில் உள்ளவர்களும் அவர்களது நிலத்தை, படிப்படியாக குத்தகைக்குக் கொடுத்தார்கள். இப்படியாக அதிக அளவில் நிலம் கிடைத்தது.

முதலில் சாலை வசதி வேண்டும் என்பதற்காகக் குளங்கள் வெட்டினோம். எல்லா நிலங்களுக்கும் டிராக்டர் செல்வது மாதிரி சாலையை அமைத்தோம்.

ஏழு ஏக்கர் பரப்பில் உள்ள குளங்களில் கட்லா, மிர்கால், ரோகு போன்ற மீன்களை வளர்க்கிறோம்.

அடுத்தகட்டமாக கோழிகள், மாடுகள், வாத்து, மணிலா வாத்து வாங்கி வளர்த்துவந்தோம். கிர், காங்கிரஜ், ஷாகிவால் போன்ற வடமாநில மாடுகளை வாங்கி வளர்த்ததில் பெரும் நஷ்டம்.

நல்ல பாலை வாங்கும் அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை. பண்ணையில் சிறிய அளவில் கறுப்புக் கவுனி நெல் ரகத்தைப் பயிரிட ஆரம்பித்தோம்.

தற்போது 140 ஏக்கர் பரப்பில் பயிரிட்டுவருகிறோம். 200 டன் வரை நெல்லை சேமித்துவைத்திருக்கிறோம். நாங்கள் நஷ்டத்திலிருந்து மீள கறுப்பு கவுனிதான் கைகொடுக்கிறது.

எங்கள் பண்ணையைப் பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் வருகிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அழிந்துவரும் நாட்டுக் கழுதைகள், ஃபோனிக்ஸ் குதிரைகளை வாங்கினேன். அடுத்து ஆண் ஒட்டகம் ஒன்றைக் கொண்டுவந்தேன்.

சிலர் புற்றுநோய்க்கு ஒட்டகப் பால் நல்லது என்று கேட்கத் தொடங்கினார்கள். குட்டி ஈன்ற ஓர் ஒட்டகம் வாங்கினேன். தற்போது மூன்று ஒட்டகங்கள் உள்ளன.

மாடு வளர்ப்பில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக, மெல்ல மெல்ல ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டுவருகிறேன்” என்று பொறுமையாகப் பேசுகிறார்.

இவரது பண்ணையில் ஒட்டகப் பால் லிட்டர் ரூ. 450. தினசரி 6 லிட்டர் வரை ஒட்டகங்கள் பால் தருகின்றன. அதற்கு வேப்பிலை அதிகமாகப் பிடிக்கும். பசும்புல் இருப்பதால் அறுத்துப்போடுகிறார்கள். சில நேரங்களில் வயலில் மேய்ந்துவிட்டு திரும்பும்.

“நெல்லுக்கு அடுத்து எங்களுக்கு அதிக வருமானம் மீன் வளர்ப்பில்தான் கிடைக்கிறது. கடந்த பொங்கலின்போது 3 லட்சம் ரூபாய் வரை மீன்களை விற்றோம். மீன்பிடி தடைக்காலங்களில் மீன் விற்பனை அதிகரிக்கும்.

எனக்கு ஆயிரம் வேலைகள் இருந்தாலும், பண்ணைக்கு வந்தால் மனம் அமைதியாகிவிடும். இப்போதுகூட உங்களிடம் இங்கே ஒரு மூலையில் நின்றுகொண்டு பேசுகிறேன்.

அரபுநாட்டிலிருந்து டிசம்பரில் அறுவடைக்காக ஊருக்கு வந்தேன். சில நாட்களில் சென்றுவிடுவேன்” என்று மனநிறைவுடன் பேச்சை முடித்தார் ஜியாவுதீன்.

  • எஸ். சாந்தி

#மீன் #கோழி #வாத்து #ஆடு #மாடு #ஒட்டகம்_வளர்ப்பு #கறுப்புக்_கவனி #நெல் #விவசாயப்_பண்ணை #natural_farming #fish #chicken #duck #goat #cow #camel_breeding

camel breeding
Comments (0)
Add Comment