சூர்யாவின் படங்கள் எப்படி இருக்க வேண்டும்?!

சில நட்சத்திர நடிகர்களின் ரசிகர்கள் பொதுவெளியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அந்த நட்சத்திரத்தின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர் வாசலில் தவமாய் கிடப்பார்கள்.

சில நேரங்களில் குடும்பத்தோடு சென்று அந்தப் படத்தை ரசித்துக் கொண்டாடுவார்கள். அந்தந்த படத்தின் உள்ளடக்கத்திற்கேற்பச் சத்தமாகவோ அல்லது மௌனமாகவோ ‘ஜே’ போட்டுவிட்டுத் தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்.

கொடி கட்டி, கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்து தனது தலைவனின் படத்தைக் கொண்டாட்டத்துடன் வரவேற்பவர்களாக, அவர்கள் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நட்சத்திரங்கள் எல்லா காலத்திலும், எல்லா மொழிகளிலும் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர், நடிகர் சூர்யா.

சூர்யாவின் படங்கள் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றாலும், அதில் அவரது உழைப்பை எவரும் குறை சொல்லிவிட முடியாது. அதுவே, இன்றுவரை அவரது அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்கள் கவனம் குவிக்கக் காரணமாக உள்ளது.

ரசனைக்கு உகந்த படங்கள்!

ரசிகர்கள் இன்று டிஜிட்டல் திரையில் மோதிக் கொள்கின்றனர். முப்பதாண்டுகளுக்கு முன்னர் பொதுவெளியில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மூலமாக, பேனர்கள் மற்றும் கட்அவுட்கள் மூலமாக, புதிய படங்களின் முதல் காட்சியின்போது அவர்கள் செய்யும் அலப்பறை மூலமாகச் சாதாரண மக்களுக்குத் தங்களது நட்சத்திரத்தின் மீது கொண்டிருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்துவார்கள்.

குறிப்பிட்ட நடிகரின் பட டைட்டிலை பிரிண்ட் செய்த பனியன்களை அணிவது, ரசிகர் மன்ற பலகையைப் பலரது பார்வையில் படுமாறு வைப்பது, அடிக்கடி மன்றங்கள் மூலமாக உதவிகள் செய்வது என்றிருப்பார்கள்.

பதின்ம வயதுகளில் அல்லது இருபதுகளில் தாங்கள் பார்த்துச் சிலாகித்த படங்களின் பெயரில் அவர்களது ரசிகர் மன்றங்கள் அமைந்திருக்கும்.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்த இந்த வழக்கம் ரஜினி, கமல், விஜயகாந்த் தலைமுறையின்போது உச்சமடைந்தது என்றே சொல்லலாம்.

தொண்ணூறுகளின் பிற்பாதியில் அந்த இடத்தை இன்னொரு தலைமுறை ஆக்கிரமித்தது. அவர்களில் ஒருவராகத் தன்னை உயர்த்திக் கொண்டவர் சூர்யா.

2000ஆவது ஆண்டுக்குப் பிறகு தியேட்டருக்கு சென்று படம் பார்த்தவர்களில் சிலர், வழக்கமான கமர்ஷியல் ‘பார்முலா’ படங்களில் இருந்து விலகி நின்ற நடிகர்களை நட்சத்திரமாகக் கொண்டாடினார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் விக்ரம், இன்னொருவர் சூர்யா.

அஜித், விஜய் இருவரும் முழுக்க முழுக்க அதீத ஹீரோயிசம் கொண்ட, ஆக்‌ஷன் வகைமை படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய காலத்தில், திரையில் தன்னை வேறுமாதிரியாக அடையாளப்படுத்திக்கொண்ட சூர்யாவின் ஏறுமுகம் அமைந்தது.

முன்னணி நடிகர்களின் சில படங்கள் தோல்வியுற்றபோது, சூர்யாவின் படங்களில் இருந்த வித்தியாசமான உள்ளடக்கம் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தது.

அது மட்டுமல்லாமல் தான் நடிக்கும் பாத்திரத்தின் தோற்றம், பாவனைகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தது அவர்களை இன்னும் நெருங்கி வரச் செய்தது.

அதற்கு முதலில் விதை இட்ட படம், பாலாவின் ‘நந்தா’.

மொட்டைத் தலை போன்ற ஹேர்ஸ்டைல், முரட்டுத்தனமான உடல்மொழி, அலட்சியத்தை நிறைத்த கண்கள், மனதுக்குள் இருப்பதை வெளியே காட்டாத முக பாவனை என்று ‘நந்தா’ எனும் மனிதனாகவே அதில் தெரிந்தார் சூர்யா. அதே பாணியில் ’மௌனம் பேசியதே’ படத்தில் வந்து போனார்.

பிறகு காக்க காக்க, பிதாமகன், பேரழகன், கஜினி, சில்லுன்னு ஒரு காதல், வாரணம் ஆயிரம் என்று தான் நடித்த படங்களில் எல்லாம் தன்னை வித்தியாசமாக வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் சூர்யா.

கலைத்தன்மையையும் கவன ஈர்ப்பையும் கொண்டிருந்த அப்படங்கள், அவருக்கான சந்தை மதிப்பை எகிற வைத்தது.

அப்படி ரசனை மிகுந்த தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்திய கையோடு அவ்வப்போது முழுமையான ‘கமர்ஷியல்’ படங்களிலும் நடித்தார்.

‘நந்தா’வைத் தொடர்ந்து வெளியான ‘ஸ்ரீ’, இயக்குனர் ஹரியுடன் முதன்முறையாக இணைந்த ‘ஆறு’, ‘வேல்’, கே.வி.ஆனந்தின் ‘அயன்’, கே.எஸ்.ரவிக்குமாரின் ‘ஆதவன்’, ‘சிங்கம்’, ஏ.ஆர்.முருகதாஸின் ‘7ஆம் அறிவு’, லிங்குசாமியின் ‘அஞ்சான்’, விக்னேஷ் சிவனின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காப்பான்’ என்று அந்தப் பட்டியலும் கொஞ்சம் பெரியது தான்.

இவ்விரண்டுக்கும் இடையே விக்ரமனின் ‘உன்னை நினைத்து’, சித்திக்கின் ‘ப்ரெண்ட்ஸ்’, விக்ரம் குமாரின் ‘24’, சுதா கொங்கராவின் ‘சூரரைப் போற்று’ போன்ற படங்கள் பெண்கள், குழந்தைகள், பெரியோர்களைக் கவரும் படங்களாக அமைந்தன.

மேற்சொன்ன படங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்த்து சூர்யாவுக்கு ரசிகர்கள் ஆனவர்களே அதிகம். ஆனால், இவர்களுக்கு முந்திய கூட்டமொன்று நெடுங்காலமாகச் சூர்யாவை ஆராதித்து வருகிறது. அவர்கள், ’நேருக்கு நேர்’ அல்லது அதன்பின் வெளியான படங்களைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஆனவர்கள்.

களையான முகம்!

வசந்தின் இயக்கத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் சூர்யா நடித்தபோது, சாதாரண மக்களுக்கு அவரை நடிகர் சிவகுமாரின் மகனாக மட்டுமே தெரியும்.

இன்னாரது மகன் என்ற அந்த அடையாளம் ஒரு படத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதையும் மீறி ‘களையான முகம்’ என்ற பாராட்டுக்கு உரியவர் ஆனார் சூர்யா.

அந்தப் படத்தில் சூர்யாவின் நடனமாடும் திறன், நடிப்பு, சக நடிகர்கள் உடனான இருப்பு என்று பல விஷயங்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன.

ஆனால், அந்த படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆனவர்கள் அடுத்தடுத்து வந்த அவரது படங்களை ரசிக்கத் தயாராக இருந்தார்கள்.

‘காதலே நிம்மதி’யில் ‘விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி’ என தலைவாசல் விஜய் பாடும்போது, மிக அமைதியாகத் திரையில் தெரிவார் சூர்யா. ‘சந்திப்போமா’வில் வரும் ‘ராதா ராதா அனுராதா’ பாடலுக்குக் கூச்சத்துடன் ப்ரீதா உடன் நடனமாடுவார்.

அப்படிப்பட்ட சூர்யா ‘நான் தம்மடிக்கிற ஸ்டைலு பார்த்து’ பாடலில் துள்ளலை வெளிப்படுத்தினார். ‘சிபிஐ இங்கே தேடச் சொல்லு கொஞ்சம்’ பாடலில் ஸ்டைலாக ஆடினார். ‘ஆஹா அடுத்த ஸ்டெப்புக்கு வந்துட்டாரே’ என்று ரசித்தவர்கள் ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தார்கள்.

சூர்யாவும் விஜயலட்சுமியும் ஆடிய ‘மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்’ பாடலை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியில் பார்த்துவிட்டு, ‘ப்ரெண்ட்ஸ்’ படம் ஓடும் தியேட்டருக்கு சென்ற அனுபவம் என் நெஞ்சில் இன்னும் இருக்கிறது.

இப்படி ‘நந்தா’வுக்கு முன்பே சூர்யாவைக் கொண்டாடிய பலர், இன்றும் அவரது படங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

ரசிகர்களுக்கான படங்கள்!

சூர்யா போன்ற நடிகர்களிடம் இருக்கும் ஒரே பிரச்சனை, ஒவ்வொரு படத்திலும் நடிப்புத்திறனுக்குத் தீனி போடும் கதையை, பாத்திர வார்ப்பை எதிர்பார்ப்பது தான். கூடவே ‘கமல்ஹாசன் போல நடிக்குறீங்க’ என்பது போன்ற பாராட்டுகள், அவர்களது தேரோட்டத்தைத் திசை திருப்பிவிடுகின்றன.

அதனால் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த கதைகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன அல்லது பலவித தோற்றங்களுக்கு வாய்ப்புள்ள கதை என்று சொத்தையான கதைகளைத் தேர்வு செய்கிற நிர்ப்பந்தங்கள் உருவாகின்றன.

அது ‘அயன்’ போன்ற அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடக்கூடிய, ரசிகர்களுக்கான படங்களைத் தருகிற சாத்தியங்களை இல்லாமல் ஆக்கிவிடுகின்றன.

அதனால் ‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’ என்று சமூகப் பிரச்சனைகளை, அதற்கான தீர்வுகளை முன்வைக்கிற படங்களில் மட்டுமே அவரைத் தொடர்ந்து ரசிக்க வேண்டியிருக்கிறது.

தான் ஆற்றிவரும் சமூகப்பணிகள் காரணமாக, சூர்யாவினால் தற்போது ‘ஆறு’, ‘ஆதவன்’ போன்ற ‘ஆக்‌ஷன்’ படங்களில் நடிக்க முடியாததைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக, ‘அப்படிப்பட்ட படங்களே வேண்டாம்’ என்று ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மலையாளத்தில் மம்முட்டியும் மோகன்லாலும் தொடர்ந்து தமது இருப்பை வெளிப்படுத்துவது போல குடும்பச் சித்திரங்கள், முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட கதைகள், ட்ரெண்ட்செட்டர்கள், பரீட்சார்த்த முயற்சிகள் நிறைந்த படங்கள் என்று தமது படங்களின் உள்ளடக்கத்தைச் சூர்யா பிரித்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

அதன் மூலமாக, வெவ்வேறு தரப்பு ரசிகர்களைச் சென்றடையும்விதமாக ஆண்டுக்குக் குறைந்தபட்சம் மூன்று, நான்கு படங்களைத் தர முடியும்.

எண்பதுகள், தொண்ணூறுகளில் ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் என்று பலரும் இந்த ‘பார்முலா’விலேயே தங்களது பட வரிசைகளை அமைத்துகொண்டனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதனைச் சொல்லக் காரணம், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பிறகு சூர்யாவின் படங்கள் வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தான்.

‘கங்குவா’, கார்த்திக் சுப்புராஜின் ‘சூர்யா 44’ இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இவ்விரண்டுக்கும் முன்னால், முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படத்தைச் சூர்யாவிடம் எதிர்பார்க்கிறது ரசிக உலகம்.

சூர்யாவுக்கு இன்ற பிறந்தநாள். இதனைக் கொண்டாடும்விதமாக மறுவெளியீடு கண்டுள்ள ‘வேல்’ படத்தினைப் பார்க்கக் குடும்பத்துடன் சென்றவர்களின் அனுபவங்களும் சமூக வலைதளங்களில் காணக் கிடைக்கிறது.

அவற்றைக் கண்ட பிறகாவது, வெவ்வெறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட படங்களைத் தேர்வு செய்ய சூர்யா முன்வர வேண்டும்.

– உதய் பாடகலிங்கம்

#சூர்யா #விக்ரம் #பாலா #நந்தா #காக்க_காக்க #பிதாமகன் #பேரழகன் #கஜினி #சில்லுன்னு_ஒரு_காதல் #வாரணம்_ஆயிரம் #ஆறு #அயன் #ஆதவன் #சிங்கம் #7ஆம்_அறிவு #லிங்குசாமி  #அஞ்சான் #விக்னேஷ்_சிவன் #தானா_சேர்ந்த_கூட்டம் #காப்பான் #உன்னை_நினைத்து #சூரரைப்_போற்று #நேருக்கு_நேர் #சிவகுமார் #காதலே_நிம்மதி #ப்ரெண்ட்ஸ் #ஜெய்பீம் #வேல்