சுள்ளான் – தனுஷின் முதல் ‘ஆக்‌ஷன்’ படம்!

ஆக்‌ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே நட்சத்திர அந்தஸ்தை நோக்கிப் பயணிக்கும் நாயக நடிகர்களின் லட்சியமாக இருக்கும். அதனைச் சாதித்துவிட்டால் சுமாரான படங்களும் ‘சூப்பர்’ வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை திரையுலகில் நிலவுவதே அதற்குக் காரணம்.

அதனால், எல்லா நடிகர்களும் அப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் நடித்து தங்களது சந்தை மதிப்பினை உயர்த்த விரும்புவார்கள். வெற்றி கிட்டாத பட்சத்தில் பழைய பாதைக்குத் திரும்பி விடுவார்கள். அப்படியொரு வாய்ப்பைத் தொடக்க காலத்திலேயே பெறுவதென்பது மிக அரிது.

அந்த வகையில், தனுஷ் நடித்த முதல் ஆக்‌ஷன் படமாக உள்ளது ‘சுள்ளான்’. விஜய்க்கு ‘திருமலை’ எனும் திருப்புமுனை தந்த கையோடு, இயக்குநர் ரமணா ஆக்கிய படம் இது.

‘சுள்ளான்’ கதை!

ஒல்லியான உருவம். துறுதுறுப்பான பேச்சு மற்றும் உடல்மொழி. மிகச்சாதாரணமாக நாம் எதிரில் பார்க்கும் சக இளைஞனின் தோற்றம்.

இப்படித்தான் ‘காதல் கொண்டேன்’, ‘திருடா திருடி’ படங்களில் திரையில் தோன்றியிருந்தார் தனுஷ். ஆனால், அந்தப் படங்களின் அபார வெற்றி அவர் மீது புகழ் வெளிச்சம் சுமையாகப் பரவ வித்திட்டது.

அந்த காலகட்டத்தில், தனுஷின் தோற்றம் வெகுவாகக் கிண்டலடிக்கப்பட்டது. அதற்காக ‘சுள்ளான்’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது.

நான்கைந்து இளைஞர்கள் இருக்குமிடத்தில், ஒருவர் மட்டும் ரொம்பவே ஒல்லியாகவோ, குள்ளமாகவோ அல்லது பலவீனமாகவோ தோற்றம் தருவதோடு, எதற்கெடுத்தாலும் கோபப்படுகிற குணத்தை வெளிப்படுத்தினால் இந்தப் பெயர் சூட்டப்படும். தனுஷும் அப்படித்தான் ‘சுள்ளான்’ என்றழைக்கப்பட்டார். இயக்குனர் ரமணா அதையே ‘டைட்டில்’ ஆக்கி, இந்தப் படத்தை முடித்துவிட்டார்.

தாய், தந்தை, மூத்த சகோதரி என்றிருக்கும் வீட்டில் கல்லூரிக்குச் சென்று கலாட்டாக்களில் ஈடுபடுகிற ஒரு சராசரி இளைஞன். சக மனிதர்கள் பாதிக்கப்படுகிறபோது, அவர்களுக்காகக் குரலெழுப்பிப் போராடுவது அவரது இயல்பு.

அந்த இளைஞனுக்கு ஒரு பெண் மீது காதல் முளைக்கிறது. அந்தக் காதல் வளர்கிறது.

போலவே, இளைஞனின் சகோதரியை மணம் முடிக்க ஒருவர் விரும்புகிறார். தனது குடும்பத்தோடு வந்து பெண் கேட்கிறார்.

எல்லாமே சுபமாக போய்க் கொண்டிருக்க, திடீரென்று ஒரு நபருடன் அந்த இளைஞனுக்கு மோதல் ஏற்படுகிறது. அந்த நபர், அந்த வட்டாரத்தில் ரவுடித்தனம், கட்டப் பஞ்சாயத்து, அத்துமீறி வட்டி வசூலித்தல், சொத்துக்களை ஏய்த்துப் பறித்தல் போன்றவற்றுக்காகக் காவல் நிலையங்களில் புகார்களுக்கு உள்ளானவர்.

தன்னுடன் மோதிய இளைஞனின் குடும்பத்தினரை, நண்பர்களை வதைக்க முடிவு செய்கிறார் அந்த நபர். அந்த இளைஞன் அதற்கு என்ன பதிலடி தந்தார் என்பதே ‘சுள்ளான்’ படத்தின் கதை.

ரொம்பப் புதுமையான கதை என்று இதனைச் சொல்ல முடியாது தான். ஆனால், நாயகனின் குடும்பப் பின்னணியை இதில் கொஞ்சம் வித்தியாசமாகக் காட்டியிருப்பார் இயக்குனர்.

அதேநேரத்தில், வில்லன் பாத்திரத்தை ரொம்பவே வழக்கமானதாகக் காட்டியிருப்பார். அது, ‘நம்பியார் காலத்துலயே இதையெல்லாம் பார்த்துட்டோம்’ என்று சொல்லும்விதமாக இருந்ததே இப்படத்தின் மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது.

எப்படியிருந்த நான்..!

ஒரு படத்தில் ‘எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்று விவேக் வசனம் பேசியிருப்பார். நகைச்சுவையான வசனம் என்றாலும், நம் வாழ்வில் பல நிலைகளில் அதனைப் பலவிதமாகப் பயன்படுத்த முடியும். தனுஷ் பற்றி மீம்கள் உருவாக்கவும், அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

2004வாக்கில் ‘சுள்ளான்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷை நேரில் கண்டேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் அந்த நிகழ்ச்சி நடந்தது.

வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்த கையோடு, அந்த நிகழ்வுக்கு தனுஷ் வந்திருந்தார். அந்த நேரத்தில், அவருக்கு காய்ச்சல் ‘ஹெவி’யாக இருப்பதாக மேடையில் சொன்னார்கள் படக்குழுவினர். தனுஷின் கையில் கட்டு போடப்பட்டிருந்ததாக நினைவு. அந்த நிகழ்ச்சிக்கு அவரது பெற்றோரும் வந்திருந்தனர்.

மேடையில் தனுஷைப் பற்றிப் பலரும் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்க, அவர் மட்டும் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தார். அவரது கண்கள் இடமும் வலமுமாக நகர்ந்துகொண்டே இருந்தன.

‘ஒரு நடிகருக்குப் பார்வை தீர்க்கமாக ஓரிடத்தில் நிலைக்க வேண்டும் என்பார்களே’ என்று அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. ஆனால், அந்தப் படத்தில் ஓரிடத்தில் கூட தனுஷ் அவ்வாறு முழிக்கவில்லை. அப்போதே, அவர் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பது தெரிந்துவிட்டது.

‘சுள்ளான்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால், விஜய், த்ரிஷாவை வைத்து ‘ஆதி’யை இயக்கினார் ரமணா. பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திரையுலகில் இருந்து சில காலம் விலகியிருந்தார்.

‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘ட்ரீம்ஸ்’ படங்கள் சுமாராகப் போக, ‘தேவதையைக் கண்டேன்’ சொல்லத்தக்க கவனிப்பைப் பெற்றது. ‘அது ஒரு கனாக்காலம்’, ‘புதுப்பேட்டை’ படங்கள் அந்த காலகட்டத்தில் உரிய கவனிப்பைப் பெறவில்லை.

பிறகு ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘பொல்லாதவன்’ என்று தனக்கான இடத்தைத் தமிழ் திரையுலகில் உருவாக்கினார் தனுஷ். இன்று வரை அவரது படங்கள் பரவலான வரவேற்பைப் பெறுவதோடு, அவரது நடிப்பும் ரசிகர்களால் தொடர்ந்து சிலாகிக்கப்படுகிறது.

இது மிகச்சில நட்சத்திர நடிகர்களுக்கு மட்டுமே வாய்க்கிற வரம். விரைவில் வெளியாகவிருக்கிற ‘ராயன்’ வரை, அப்படிப்பட்ட வரவேற்பைப் பெறத் தன்னைத் தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறார்.

தவறிப்போன வெற்றி!

விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்கள் மட்டுமே சண்டைக்காட்சிகளில் அடியாட்களை அந்தரத்தில் பறக்கவிட்ட காலகட்டத்தில், அதே பாணியில் தனுஷுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்த விதமே ‘சுள்ளான்’ படத்தின் எதிர்மறை அம்சமாகப் பார்க்கப்பட்டது. நிறைய கிண்டல் கேலிகளையும் அப்படம் சம்பாதித்தது.

போலவே பசுபதியின் வில்லன் பாத்திரம் அப்படியே ‘தூள்’, ‘விருமாண்டி’ படங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது. வழக்கமானதாக இருந்ததோடு, அப்பாத்திர வார்ப்பு திரையில் ‘பழசாகவும்’ தெரிந்தது.

அதைத் தவிர்த்துவிட்டால், ‘சுள்ளான்’ படத்தில் ரசிக்கத்தக்க வகையில் பல அம்சங்கள் உண்டு. மணிவண்ணன், கீதா ரவிஷங்கர், ஈஸ்வரி ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘இயல்பானவையாக’ திரையில் தெரியும்.

சிந்து தொலானி – தனுஷ் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் சட்டென்று ஈர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும், அப்போதைய கமர்ஷியல் திரைப்படங்களை ஒப்பிடுகையில் அபத்தமாகத் தென்படாது. ஆனால், சிந்துவின் அறிமுகக் காட்சி அபத்தத்தின் உச்சமாக அமைக்கப்பட்டிருக்கும்.

இப்படிச் சில ப்ளஸ், மைனஸ்களை கொண்டது ‘சுள்ளான்’ திரைப்படம்.

என்.ராகவ்வின் ஒளிப்பதிவு அழகியல் அம்சங்களைத் திரையில் நிறைத்தது. அப்போதைய படங்களில் இருந்த கலை வடிவமைப்பை இதிலும் தந்திருந்தார் கே.கதிர்.

அடுத்தடுத்த காட்சிகள் பரபரவென்று நகரும் வண்ணம், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு அமைந்தது.

முக்கியமாக, வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ‘பட்டாசுகளாக’ இருந்தன.

‘சண்டைக்கோழி கீறும்’ பாடலுக்குச் சங்கவியுடன் நடனமாடியிருந்தார் தனுஷ். அதில் இடம்பெற்ற சில ‘டான்ஸ் ஸ்டெப்கள்’ பிரத்யேகமாக தனுஷுக்கென்று வடிவமைத்ததாகத் தெரியும்.

இந்தப் பாடலில் இயக்குனர் ரமணாவும் நடன வடிவமைப்பாளர் அசோக் ராஜாவும் கூடத் தோன்றியிருப்பார்கள். அதுவே, இப்படம் நிச்சயம் வெற்றிதான் என்ற அவர்களது எண்ணவோட்டத்தைக் காட்டும்.

‘அதோ வர்றான்.. இதோ வர்றான்..’, ‘கிளுகிளுப்பான காதலியே’ பாடல்கள் இன்றைய ‘இன்ஸ்டாரீல்ஸ்’க்கு ஏற்ற குத்துப்பாடல்களாக இருக்கின்றன.

‘கவிதை இரவு இரவுக் கவிதை’, ‘யாரோ நீ’, இன்றும் ரசித்துக் கேட்கிற மெலடி மெட்டுகளில் ஒன்றாக இடம்பெறுகின்றன.

ஒட்டுமொத்தமாக நோக்கினால், அன்றைய காலகட்டத்தில் தனுஷுக்கு இருந்த சந்தை மதிப்பு, ரசிகர்களின் வரவேற்புக்கு ஏற்பச் சரியானதொரு படமாகவே ‘சுள்ளான்’னை தந்திருந்தார் ரமணா.

ஆனால், அதிக எதிர்பார்ப்பே ஆபத்தாகப் போகப் படம் தோல்வியடைந்தது.

வில்லன் பாத்திரத்தை வலுவாக வடிவமைக்காமல் விட்டது, நகைச்சுவைக் காட்சிகள் இல்லாதது, சிறைக்குள் முடிவதாக அமைக்கப்பட்ட கிளைமேக்ஸ் போன்றவை ‘சுள்ளான்’ படத்தின் தோல்விக்கான காரணங்களாக அமைந்தன.

இந்தப் படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன. அதையும் மீறி தனுஷ் உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்களின் உழைப்பும், வித்யாசாகரின் பாடல்களும் இதனை ரசிக்கும்படியாக உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.

– மாபா

DhanushDirector RamanamanivannanPasupathySindhu Tholanisullan movieஇயக்குனர் ரமணாசிந்து துலானிசுள்ளான் திரைப்படம்தனுஷ்பசுபதிமணிவண்ணன்வித்யாசாகர்
Comments (0)
Add Comment