சென்னையில் மாடுகள் மற்றும் தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் சாலைகளில் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, வண்ணாரப்பேட்டை, மந்தைவெளி, போரூர், கோயம்பேடு, அய்யப்பன்தாங்கல், சைதாப்பேட்டை, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சாலைகளில் மாடுகளை சுற்றித்திரிய விடும் மாட்டின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.5 ஆயிரமாக சென்னை மாநகராட்சி அதிகரித்தது.
இதேபோல, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 5 பணியாளர்களை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.
மேலும், சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 1,469 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
இதில், ஜனவரி மாதம் 234 மாடுகளும், பிப்ரவரி மாதம் 285 மாடுகள், மார்ச் மாதம் 208 மாடுகள். ஏப்ரல் மாதம் 94 மாடுகள், மே மாதம் 215 மாடுகள், ஜூன் மாதம் 215 மாடுகள், ஜூலை மாதம் இதுவரை 218 மாடுகளும் பிடிக்கப்பட்டுள்ளது.
மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 60 லட்சத்து 29 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#சென்னை_மாநகராட்சி #மாடுகள் #தெரு_நாய்கள் #மாடு_உரிமையாளர்கள் சாலைகளில்_சுற்றித்திரியும்_மாடுகள் #chennai_corporation #cow #dogs #road_side_cows #road_dog