எம்.ஜி.ஆரின் திரை உலக வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்த திரைப்படம். ‘நாடோடி மன்னன்’. அதன் உருவாக்கத்தில் எம்.ஜி.ஆர். பட்ட சிரமங்கள் ஆயிரம் ஆயிரம்.
எம்.ஜி.ஆர்., நாடகக் கம்பெனி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவர் சொந்தமாக ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்‘ எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.
எம்.ஜி.சக்ரபாணி, அதன் பங்குதாரர். எம்.ஜி.ஆர்., நிர்வாகப் பங்குதாரர். அந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட முதல் படம் தான் ‘நாடோடி மன்னன்‘.
படத்தை தொடங்கிய சமயத்தில் ‘1958-ம் ஆண்டு பிப்ரவரியில் படம் வெளியாகும்‘ என எம்ஜிஆர் அறிவித்து விட்டார். ஆனால் அந்த தேதியில் பாதிபடம் தான் வளர்ந்திருந்தது.
மாதங்கள் நகர்ந்தன. படப்பிடிப்பு நடந்து கொண்டே இருந்தது. படத்தின் வெளியீட்டுத் தேதிகள் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. பிரதான காரணம் – அப்போது கச்சா ஃபிலிமுக்கு நிலவிய கடுமையான தட்டுப்பாடு.
அதன் உண்மையான விலை, அதாவது மார்க்கெட் விலை எழுபது ரூபாய். ஆனால் வெளியில் 450 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருந்தது.
அந்த நேரத்தில் வேறு சில படங்களில் நடிக்கவும் எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்திருந்தார். சில நாட்கள் அந்தp படங்களின் ஷுட்டிங் நடந்தது. நாடோடி மன்னனை உடனடியாக முடிக்க வேண்டி இருந்ததால், அந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.
ஒரு வழியாக படம் முடிந்தது. 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி வெளியானது. படம் வெள்ளி விழா கண்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ’நாடோடி மன்னன்’ வெற்றிவிழா கொண்டாட்டங்கள் நடந்தன.
மதுரையில் நடந்த விழாவில், மதுரை முத்து எம்ஜிஆருக்கு தங்கவாள் பரிசளித்தார். சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் அறிஞர் அண்ணா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் படத்தில் பங்கேற்ற 150 கலைஞர்களுக்கு மோதிரம் அளிக்கப்பட்டது.
அந்த விழாவில் பேசியபோது தான், எம்ஜிஆரை ‘என் இதயக்கனி‘ என அண்ணா, குறிப்பிட்டார்.
‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கி கொண்டிருந்தது – அது யாருடைய மடியில் விழுமோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன் – நல்ல வேளையாக அந்தக் கனி என்னுடைய மடியிலே வந்து விழுந்துவிட்டது – அந்தக் கனியை எடுத்து நான் பத்திரமாக என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்‘ என பலத்த கைத்தட்டலுக்கு மத்தியில் அறிஞர் அண்ணா தெரிவித்தார்.
அண்ணாவின் வார்த்தைகளுக்கு வடிவம் அளிக்கும் வகையில் சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த படத்துக்கு ‘இதயக்கனி’ என பெயர் வைக்கப்பட்டது.
படம் ஆரம்பிக்கும்போது, அண்ணாவின் உருவத்தையும், அவர் இதயத்தில் எம்.ஜி.ஆர். இருப்பது போன்றும் காட்டி, அதன் மீது படத்தின் டைட்டிலான ’இதயக்கனி’ போடப்பட்டது.
சத்யா மூவீசுக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்த கடைசி படம் ‘இதயக்கனி‘.
– பாப்பாங்குளம் பாரதி.