தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. நாள்தோறும் குழந்தைகளுக்குத் தேவையான சத்துடன் கூடிய பொங்கல், உப்புமா, கிச்சடி, சாம்பார் போன்றவை வழங்கப்படுகின்றன.
அண்ணாமலை சொல்கின்ற தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பா.ஜ. க. ஆளும் மாநிலங்களில் எந்த மாநிலத்தில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது?
பா.ஜ.க.வின் ‘டபுள் என்ஜின் சர்க்கார்’ எனப்படும் உத்தரப் பிரதேச மாநிலப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவாக ரொட்டிக்கு உப்பைத் தொட்டுக்கொள்ளும் பரிதாப நிலையில்தான் குழந்தைகள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் காலையில் ஆரோக்கியமான உணவு, மதியம் முட்டையுடன் சத்துணவு வழங்கப்படுகிறது.
அதனால்தான் இங்கிலாந்து, கனடா, போன்ற நாடுகளிலும் திராவிட மாடல் அரசின் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இங்கிலாந்து தேர்தலில், வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, நம் திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்டம் என்பதை, ‘அவர்களுக்கு’ யாராவது எடுத்துச் சொல்லட்டும்.
முரசொலியில் கோ.வி.லெனின் எழுதியதில் ஒரு பகுதி
– நன்றி: முரசொலி