எளிய மக்களுக்கு மலிவான உணவு வழங்கிட, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ‘அம்மா உணவகம்’ துவங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த உணவகங்கள் மூலம் குறைவான விலையில் உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை – 19) திடீரென ஆய்வு மேற்கொண்டு, சாப்பிடுபவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அம்மா உணவகத்தின் சமையலறை, உணவுக் கூடத்தைத் தூய்மையாகப் பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், உணவகங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள், கருவிகளை மாற்றவும், சுவையான, தரமான உணவைத் தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார். அப்போது அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதில், புதிய பாத்திரங்கள், கருவிகள் வாங்க ரூ.7 கோடி; புனரமைப்பு பணிகளுக்காக ரூ.14 கோடி ஒதுக்கப்படுகிறது.
அம்மா உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர் வலியுறுத்தினார்.