ஒரு பாடலுக்குள் பல புதுமைகள் செய்த இளையராஜா!

பழைய படங்களைப் பார்க்கும்போது, “அந்தக் காலத்துல இந்த இடமெல்லாம் எப்படி இருந்திருக்கு!” என்று ஒவ்வொன்றையும் ஆச்சர்யமாகப் பார்க்கத் தோணும்! அது ஒரு சுகமான அனுபவம்!

அதேபோல 1978-ம் ஆண்டில் வெளியான ‘சிட்டுக்குருவி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என் கண்மணி.. உன் காதலி… இள மாங்கனி… எனைப் பார்த்ததும்..” பாடலை விஷூவலோடு பார்க்கும்போதெல்லாம் அந்தக் காலத்தில் ஓடிய பேருந்தின் வடிவமைப்பும், சென்னை நகரின் அமைப்பும் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.

இந்தப் பாடலை, எஸ்.பி.பியும், பி.சுசீலாவும் இணைந்து பாடியிருப்பார்கள். இளையராஜா இசையமைத்திருப்பார். பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. இப்பாடலின் இடையே வரும் கண்டக்டரின் குரல், இளையராஜாவின் உடன்பிறந்த சகோதரர் பாஸ்கரின் குரல் தான்! 

இப்பாடலுக்கும் முன்பே, 1977-ம் ஆண்டில் வெளிவந்த ’16 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா’ பாடலிலேயே பி.சுசீலாவுடன் எஸ்.பி.பி இணைந்து பாடக்கூடிய வாய்ப்பு வந்திருந்தது.

ஆனால் பாடல் பதிவு நாளில் எஸ்.பி.பிக்கு தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டதால், அந்த வாய்ப்பு மலேசியா வாசுதேவனுக்குச் சென்றது! 

இந்த ‘என் கண்மணி.. உன் காதலி…’ பாடலின் விஷூவலில் அக்காலத்துக்கேற்ப சில புதுமைகள் செய்திருப்பார்கள்.

நடிகர் சிவகுமாரும், நடிகை மீராவும் பேருந்தில் பயணித்தபடியே பாடக்கூடிய பாடலில், இரண்டு சிவகுமார்கள், இரண்டு மீராக்கள் ஒருவரையொருவர் பார்த்து பாடலைப் பாடுவதாக சிறப்பாகச் செய்திருப்பார்கள்.

அதேபோல், இடையிடையே பேருந்தில் பயணிக்கும் கேரக்டர்களும் குரல் கொடுப்பார்கள்! 

விஷூவலில் இவ்வளவு புதுமை செய்யும்போது அதற்கேற்ப தானும் புதுமை செய்வதாக இளையராஜாவும் ஒரு புதுமுயற்சியில் இறங்கியிருப்பார். அதனை ‘கவுண்டர் மெலோடி’ என்று சொல்வார்கள்.

‘என் கண்மணி உன் காதலி
இள மாங்கனி
உனை பார்த்ததும்
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீயும் நகைச்சுவை மன்னனில்லையோ’

– என்ற வரிகளை எஸ்.பி.பி தொடர்ச்சியாகப் பாடியிருப்பார்.

அதேபோல,

‘என் மன்னவன்.. உன் காதலன்
எனைப் பார்த்ததும்.. ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா.. இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ’

– இந்த வரிகள் முழுவதையும் பி.சுசீலா தொடர்ச்சியாகப் பாடுவார்.

இதைக் கேட்கும்போது இரண்டு பாடகர்கள், பாடகிகள் பாடுவதுபோல கேட்கும். படத்திலும் இரண்டு சிவகுமார், இரண்டு மீரா பாடுவதாகக் காட்டுவார்கள். ஆடியோ பதிவில், இந்த வரிகள் ஒன்றின்மீது ஒன்று ஓவர்லேப் ஆவதாக இருக்கும்.

டிஜிட்டல் இசைப்பயன்பாடு, கணினிப்பயன்பாடு வராத காலத்தில் இப்படி இசையமைத்திருப்பது சாமர்த்தியமான, சவாலான முயற்சி.

பாடலின் இடையே வரும் ‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு’ என்ற குரல் வரும்போது பேருந்து நிற்குமிடத்தில் ஒரு கடையைக் காட்டுவார்கள்.

அந்த கடையின் பெயர்ப் பலகையில் மிகப்பெரிதாக ‘டி.யூ.சி.எஸ்’ என்று எழுதியிருக்கும். அதென்ன டி.யூ.சி.எஸ்? தற்போது டி.யூ.சி.எஸ் காமதேனு சூப்பர் மார்க்கெட் என்று இருக்கிறது!

இந்த டி.யூ.சி.எஸ் தான் தமிழ்நாட்டின் முதல் நுகர்வோர் கூட்டுறவு சங்கமாகும். இது 1904-ம் ஆண்டு, திருவல்லிக்கேணியில் தொடங்கப்பட்டது.

பலசரக்குப் பொருட்களை, மற்ற கடைகளைவிடச் சற்று குறைவான விலையில் விற்பனை செய்வதற்காகத் தொடங்கப்பட்டதாகும். இதன் தேனாம்பேட்டை கிளை அமைந்துள்ள இடம்தான் ‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட்’ ஆனது.

– நன்றி: வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் முகநூல் பதிவு.

actor sivakumaren kanmani un kathali songilyarajaஇளையராஜாஎன் கண்மணி.. உன் காதலி பாடல்நடிகர் சிவகுமார்நடிகை மீரா
Comments (0)
Add Comment