நூல் அறிமுகம்:
ரஷ்ய இலக்கிய உலகின் மாபெரும் நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய் (1828-1910) அந்நாட்டின் பிரபலமான மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே தம்முடைய பெற்றோரை இழந்த அவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார்.
1844ல் சட்டப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு சில காலம் ராணுவத்தில் பணியாற்றினார். 1862ல் சோபியா எனும் பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு 13 குழந்தைகள். ஆனாலும் அவரது திருமண வாழ்க்கை நிம்மதியாக அமையவில்லை. ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்தார்.
பாரிஸ் நகரத்தில் டால்ஸ்டாய் பார்த்த ஒரு மரண தண்டனை அவரை மிகவும் பாதித்தது. போர்களின் அநியாயங்களை நேரில் கண்ட அவர், பின்னாளில் தனது எழுத்துகளில் அவற்றைப் பிரதிபலித்தார்.
டால்ஸ்டாய் நிறைய எழுதி இருந்தாலும், அவரின் மிகச் சிறந்தது ‘போரும் அமைதியும்’ நாவல்தான். அவரது காலத்தில் பிரபுக்களின் சமுதாயத்தில் இருந்த நன்மைகளையும், தீமைகளையும் அருமையாக இதில் சித்திரித்திருக்கிறார்.
வாழ்க்கையில் குறிக்கோள்களுடன் இருப்பவர்களும், அவற்றை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மனப்பான்மை உடையவர்களும் கதை மாந்தர்களாக வருகிறார்கள்.
இந்நாவலில் வரும் சக்கரவர்த்திகள் ஜாரும், நெப்போலியனும், ராணுவ அதிகாரிகளும் உண்மையான கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவர்கள்.
சமுதாயத்தின் உயர்மட்டத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையை அவர்களது உரையாடல்கள் மூலம் டால்ஸ்டாய் அற்புதமாகச் சித்திரிக்கிறார். அதே சமயம் அவர்களது மௌனத்தின் அர்த்தத்தையும் சில வரிகளில் குறிப்பிடுகிறார்.
முக்கியமாகப் போர்க்களங்களில் ஏற்படும் நிகழ்வுகளை இயல்பாக எழுத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் மூன்று பாகங்களாக விரியும் இந்த நாவலின் சுருக்கம் இந்த நூல்.
*****
நூல்: லியோ டால்ஸ்டாயின் – போரும் அமைதியும் நாவல் சுருக்கம்
ஆசிரியர்: அனந்தசாய்ராம் ரங்கராஜன்
கிண்டில் பதிப்பகம்
பக்கங்கள்: 231