மிகச்சில பாத்திரங்கள், அவற்றின் தனித்துவமான அம்சங்கள், அவற்றை ஒன்றோடொன்று பிணைக்கும் திரைக்கதை, காட்சியாக்கத்தில் நிறைந்து வழியும் சுவாரஸ்யம் ஆகியவற்றின் வழியே நம்மில் உற்சாகத்தை விதைக்கும் சில திரைப்படங்கள். அதன் காரணமாக, அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்.
இந்த ‘பார்முலா’வை கனகச்சிதமாகச் செயற்படுத்தி ‘கல்லா’ கட்டுவதில் அனிமேஷன் படத் தயாரிப்பாளர்களுக்கு ஈடிணையில்லை. அந்த வகையில், பல அனிமேஷன் படங்கள் உலகம் முழுக்க வரவேற்பைக் குவித்து வருகின்றன.
அவற்றில் ஒன்றாக விளங்குகிறது ‘Despicable Me’. இந்தப் படத்தின் நான்காம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.
சிறு வயது அவமானம்!
இந்த தம்பதியர் தங்களது மூன்று மகள்கள், ஒரு வயதே ஆன மகன் உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஒருநாள் தான் படித்த பள்ளியில் நடக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்குச் செல்கிறார் க்ரூ. அங்கு பள்ளிப்பருவத்து எதிரியான மேக்ஸிமைச் சந்திக்கிறார். அவரும் க்ரூவை எதிரியாகவே பாவிக்கிறார்.
விழா முடிவடைவதற்கு முன்னதாக, மேடையில் தனது ‘சுயரூபத்தை’ வெளிப்படுத்துகிறார் மேக்ஸிம். சிறு வயதில் தன்னைச் சக மாணவர்கள் ‘கரப்பான் பூச்சி’ என்று கிண்டல் செய்ததாகக் கூறும் அவர், தற்போது அது போலவே தன்னுடலை மாற்றியிருப்பதாகவும் சொல்கிறார்.
பலவிதமான சக்திகளைத் தான் பெற்றிருப்பதாகத் தம்பட்டம் அடிக்கிறார். அதனைச் செய்து காட்ட, அந்த அரங்கில் இருப்பவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.
உடனே, தான் சார்ந்த ஏவிஎல் சார்பாக அவரைக் கைது செய்கிறார் க்ரூ. அப்போது, உன்னையும் உன் குடும்பத்தையும் பழி வாங்காமல் விடமாட்டேன் என்று கருவுகிறார் மேக்ஸிம். பிறகு, அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
சிறையில் அடைக்கப்பட்ட மேக்ஸிம் தப்பித்துப் போக, உடனே க்ரூவுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேஃப்ளவர் எனுமிடத்துக்கு தனது குடும்பத்துடன் க்ரூ செல்ல வேண்டுமென்று கூறுகிறார் ஏவிஎல் உயரதிகாரி.
சில நாட்களுக்குத் தலைமறைவு வாழ்க்கை வாழுமாறும், மேக்ஸிம் பிடிபட்டவுடன் மீண்டும் பழைய மாதிரி இருக்கலாம் என்றும் சொல்கிறார். க்ரூவும் அதன்படியே செய்கிறார்.
மேஃப்ளவரில் ஒரு பியூட்டி பார்லரில் வேலைக்குச் சேர்கிறார் லூசி வைல்டு. மகள்கள் மூவரும் அங்கிருக்கும் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
கைகுழந்தையாக இருக்கும் மகனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு க்ரூவை வந்து சேர்கிறது. எந்நேரமும் தந்தையை அலறவிடுவதையே நோக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது அக்குழந்தை.
அதனால், சதா அதனைக் கண்காணிப்பதிலேயே க்ரூவின் பொழுது கழிகிறது.
இதற்கிடையே, பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி ஒருத்தி க்ரூ மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒரிஜினல் அடையாளத்தை அறிகிறார். அதனை வைத்துக்கொண்டு அவரை மிரட்டுகிறார்.
க்ரூ படித்த பள்ளியின் பிரின்சிபல் அறையில் இருக்கும் விலங்கொன்றைத் திருடி வர வேண்டும் என்கிறார். வேறு வழியிலாமல் அதனைச் செய்ய ஒப்புக்கொள்கிறார் க்ரூ.
நள்ளிரவில் மூன்று மினியன்களுடனும் அந்தச் சிறுமியுடனும் இணைந்து க்ரூ அந்த விலங்கைத் திருடும்போது, பிரின்சிபல் பார்த்துவிடுகிறார். அவரது பிடியில் இருந்து க்ரூ குழுவினர் தப்பியோடுகின்றனர்.
உடனே மேக்ஸிமுக்கு அவர் இருக்குமிடத்தைச் சொல்லிவிடுகிறார் பிரின்சிபல். அதன்பிறகு என்னவானது? க்ரூவின் குடும்பத்தினரை மேக்ஸிம் சுற்றி வளைத்தாரா என்று சொல்கிறது மீதமுள்ள திரைப்படம்.
இந்தக் கதையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் தன்னை க்ரூ ஏமாற்றிவிட்டதாக எண்ணுகிறார் மேக்ஸிம். அந்த அவமானத்திற்கு அவர் பழி வாங்கத் துடிப்பதுதான், இத்திரைக்கதையின் ஆதாரமாக விளங்குகிறது.
சிறப்பான ஆக்கம்!
ஒரு அனிமேஷன் படம் சிறப்பாக இருப்பதை எவ்வாறு அறியலாம்?
அதன் கதை எளிதாகச் சொல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும். ஒளிப்பதிவுக் கோணங்களும் பாத்திரங்களின் செயல்பாடுகளும் காட்சியாக்கமும் பிரமிக்க வைக்க வேண்டும். இதுவரை நாம் பார்த்தறியாத ஒன்றைத் திரையில் காணச் செய்ய வேண்டும்.
பிறகு, மேற்சொன்ன எதுவுமே நினைவுக்கு வராமல் திரையோடு நாம் ஒன்றிவிடுவோம். இவையே அடிப்படைத் தகுதிகளோடு சிறப்பான ஆக்கத்தையும் கைக்கொண்டுள்ளது ‘Despicable Me 4’.
இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களான க்ரூ, லூசி வைல்டு, மேக்ஸிம், வெலண்டினா, மார்கோ ஆகியோருக்கு முறையே ஸ்டீவ் கரேல், கிறிஸ்டின் விக், வில் ஃபெரெல், சோபியா வெர்கரா, மிராண்டா காஸ்க்ரோவ் குரல் இரவல் தந்துள்ளனர்.
இருக்கையில் இருந்து எழுந்து சிரித்து மகிழும் அளவுக்குச் சேட்டைகளை அவிழ்த்துவிடும் மினியன்களுக்கு பீயே காபின் என்பவர் குரல் தந்திருக்கிறார். மினியன்கள் உதிர்க்கும் அந்த மொழியைக் கேட்டவுடனே நம்மையும் அறியாமல் சிரிப்பது உறுதி.
எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் மைக் ஒயிட், கென் டாரியோ இணை, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து இழைத்திருக்கிறது.
பேருந்து ஓட்டுநரை மினியன்கள் லிஃப்டுக்குள் இழுத்துச் செல்வது, பள்ளி பிரின்சிபல் தான் வளர்க்கும் விலங்கு திருடு போவதைக் கண்டு கொதிப்படைந்து தாக்குவது, லூசி வைல்டால் பார்லரில் தனது முடியைப் பறிகொடுத்த பெண்மணி அவரை விரட்டுவது போன்ற காட்சிகளைப் பார்க்கையில் குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோரும் பெரியோரும் கூடச் சிரித்து மகிழலாம்.
ஹெய்ட்டர் பெரைராவின் பின்னணி இசை நம்மைக் குதூகலம் கொள்ளச் செய்கிறது. சில முக்கியமான காட்சிகளில் பழைய ஆங்கிலப் படங்களின் தீம் மியூசிக் ஒலிப்பது சிரிப்பை மேலும் அதிகப்படுத்துகிறது.
படத்தொகுப்பாளர் டிஃபனி ஹில்ஹர்ட்ஸ் அளவெடுத்துத் தைத்த சட்டை போல, ஒவ்வொரு காட்சியையும் இறுக்கமாக ‘கட்’ செய்திருக்கிறார். அதனால், முதல் முக்கால்மணி நேரம் கழித்து இடைவேளை விடப்படும்போது, சில பார்வையாளர்கள் ‘ச்சேய்..’ என்று சொல்வதும் கூட நிகழ்கிறது.
முதல் மூன்று பாகங்களின் தொடர்ச்சி என்ற காரணத்தால், மையப்பாத்திரங்களின் வயதையும் வாழ்க்கை முறையையும் சற்றே இதில் மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குனர் கிறிஸ் ரெனாட்.
எந்தவொரு இடத்திலும் சுவாரஸ்யம் குன்றிவிடக் கூடாது என்று அவர் மெனக்கெட்டிருப்பதே இப்படத்தை வெற்றி பெறச் செய்கிறது.
முதல் மூன்று படங்களிலும் மினியன்கள் என்னென்ன செய்தனவோ, அதற்குக் கொஞ்சமும் குறைவின்றி இப்படத்திலும் அவை திரையை நிறைக்கின்றன.
முப்பரிமாணத்தில் நம் கண்களுக்கே அருகே அட்டகாசங்களை அள்ளியிறைக்கின்றன. அதனைக் கண்டு குதூகலிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, திருப்தியான விருந்துண்ட மகிழ்ச்சியை இந்த ‘Despicable Me 4’ நிச்சயம் வழங்கும்.
– உதயசங்கரன் பாடகலிங்கம்