பன்னீர் புஷ்பங்கள், வைகாசி பொறந்தாச்சு, துள்ளுவதோ இளமை, பாய்ஸ் என்று பதின்ம வயது காதலைச் சொல்லும் படங்கள் தமிழில் கணிசமாக வெளியாகியிருக்கின்றன.
96, காதல், 3, ஆதலினால் காதல் செய்வீர், வழக்கு எண் 18/9 உட்பட மிகச்சில தமிழ் படங்களில் அந்த பருவத்தினரின் இயல்பு காட்டப்பட்டிருக்கிறது. அவற்றில் இருந்து விலகி நின்று, சாகசங்களைச் செய்யத் துடிக்கும் பதின்ம வயதினர் அமானுஷ்யமான அனுபவங்களுக்கு ஆட்படுவதை லேசுபாசாகச் சொன்னது ‘டீன்ஸ்’ பட ட்ரெய்லர்.
இதன் இயக்குனர் பார்த்திபன் என்றறிந்ததும் மனம் துள்ளல் ஆட்டம் போட்டது. சாதாரண கதைகளையே வித்தியாசமான கோணத்தில் சொல்பவர் ஆயிற்றே!
அந்த நம்பிக்கையே ‘டீன்ஸ்’ படம் ஓடும் தியேட்டரை நோக்கி நம்மை ஓட வைத்தது. ’மூளை சில்லிடுகிற அளவுக்கு ஒரு ஹாரர் படம் பார்க்கப் போகிறோம்’ என்று ‘டீன்ஸ்’ பார்க்க அமர்ந்தால், எத்தகைய அனுபவத்தைத் தந்தது இப்படம்?!
சாகசத்தைத் தேடி..!
அடுத்த நாள், அந்த சிறுவர்கள், சிறுமிகள் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆசிரியைக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு, கழிவறை சென்று சீருடைகளைக் களைந்துவிட்டு, புதிய தோற்றத்தில் ‘காம்பவுண்ட்’ தாண்டுகின்றனர். அப்போது, பள்ளிக்கு வெளியே இருக்கும் சக மாணவன் ஒருவன் அவர்களைப் பார்க்க, அந்தச் சிறுவனையும் தங்களோடு அழைத்துப் போகின்றனர்.
பேருந்து ஓரிடத்தில் நிற்கிறது. சாலையில் சிலர் மறியல் செய்ய, அங்கிருந்து நடந்தே செல்வதென அவர்கள் முடிவெடுக்கின்றனர்.
செல்லும் வழியில் பல அமானுஷ்யங்கள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. காதைப் பிளக்கும் ஒலியொன்று கேட்கிறது. திடீரென்று ஆடுகளும் மாடுகளும் ஓரிடத்தை வலம் வருகின்றன. அந்த பதின்ம வயதினரில் சிலர் காணாமல் போகின்றனர்.
தங்களை ஏதோ ஒரு மர்மம் சூழ்ந்திருக்கிறது என்பதை மிகத்தாமதமாகப் புரிந்துகொள்ளும் அந்த பதின்ம வயதுக் கூட்டம், தங்களோடு வந்த தோழர், தோழியரைக் காணாமல் அல்லாடுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுகிறது.
அந்த நேரத்தில், அந்த இடத்திற்கு ஒரு மனிதர் வருகிறார். அவரால், அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு தர முடிந்ததா என்பதோடு ‘டீன்ஸ்’ முடிவடைகிறது.
பதின்ம வயதில் சாகசங்களைச் செய்யத் துடிக்கும் பதிமூன்று பேரின் பயணத்தையே ‘டீன்ஸ்’ மையப்படுத்துகிறது. ஆனால், அதற்கான காரண காரியங்கள் அனைத்தும் முதல் காட்சியில் வெறும் வசனங்களால் மட்டுமே வெளிப்படுத்தப்படுவது ஏமாற்றம் தருகிறது. அந்த ஏமாற்றம் தொடர்கதை ஆவதுதான் ‘டீன்ஸ்’ படத்தின் மைனஸ்.
பார்த்திபன் ஏமாற்றினாரா?
‘டீன்ஸ்’ படத்தின் தொடக்கத்திலேயே ஒரு பாடலை வைத்து, மையப்பாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன்.
அதனால் அப்பாத்திரங்களில் நடித்த கிருத்திகா, விஷ்ருதா, அம்ருதா, பிராங்கின்ஸ்டீன், அஸ்மிதா, ஜான் பாஸ்கோ, சில்வென்ஸ்டீன், பிரசிதா, தீபேஸ்வரன், உதய்பிரியன், கே.எஸ்.தீபன், ரோஷன், ரிஷி ரத்னவேல், அஸ்மிதா மகாதேவன் ஆகிய பதிமூன்று சிறுவர்,
சிறுமியரின் முகங்கள் எளிதாக நம் மனதில் பதிகின்றன. அதற்கு நியாயம் சேர்க்கும் அளவுக்கு, அனைவருமே நல்லதொரு நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
இயக்குனர் பார்த்திபனும் இதில் நடித்திருக்கிறார். உண்மையைச் சொன்னால், அவரது இருப்பு இப்படம் நம்மிடத்தில் அதுவரை ஏற்படுத்திய தாக்கத்தில் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.
இவர்கள் தவிர்த்து சுமார் இரண்டு டஜன் பேராவது இப்படத்தில் தலைகாட்டியிருப்பார்கள். புதுமையான கோணங்கள், வழக்கத்திற்கு மாறான கேமிரா நகர்வுகள், ஈர்ப்பூட்டும் ஆக்கம் என்று நம்மை அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி.
படத்தொகுப்பாளர் ஆர்.சுதர்சன் சரியான கோணத்தில் எடுக்கப்பட்ட ஷாட்களை தேடிப் பிடித்து கோர்த்திருக்கிறார்.
இமான் இசையில் பாடல்கள் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடுகின்றன. இடைவேளை வரை நம்மை மிரட்சிக்கு உள்ளாக்குவதில், அவரது பின்னணி இசைக்கு முக்கியப் பங்குண்டு.
வித்தியாசமான கதை சொல்லலே இயக்குனர் பார்த்திபனின் பலம். அதுவே, அவர் நாயகனாக நடிக்கும் படங்களை நோக்கியும் ரசிகர்களைத் திரள வைத்தது. அந்த எதிர்பார்ப்பைத் தக்கவைப்பதில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி கண்டு வருகிறார் பார்த்திபன்.
பதின்ம வயதினர் குறித்து அவரது படைப்புகள் பேசவில்லை என்பதால், ‘டீன்ஸ்’ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் பார்க்கும்போதே ’பார்த்திபன் நம்மை ஏமாற்றிவிட்டாரா’ என்ற எண்ணம் மேலெழத் தொடங்கிவிட்டது.
பார்த்திபனின் ‘தனித்துவம்’!
குறிப்பிட்ட வகைமையில் கதையை அமைத்துவிட்டு, திரைக்கதையில் இன்னொன்றாக உணர வைப்பது மிகச்சிறப்பான ஏமாற்று வேலை. அவ்வாறு அமைந்த படங்கள் சில வெற்றிமுகம் கண்டிருக்கின்றன. அதன் வழியே ரசிகர்களின் அதிர்ச்சியை அதிகப்படுத்தி, காட்சியாக்கத்தை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றலாம் என்பதே அதற்கான காரணம்.
அப்படி எண்ணித்தான், ‘டீன்ஸ்’ படத்தை ஒரு ‘ஹாரர்’ போல சித்தரிக்க முயன்றிருக்கிறார் பார்த்திபன். ஆனால், இப்படம் அந்த வகைமையில் அமையவில்லை என்று தெரிய வந்ததுமே அந்த ‘த்ரில்’ முற்றிலுமாக வடிந்து போகிறது. அதன்பிறகு, எந்த திசையில் நகர்வதென்று தெரியாமல் திரைக்கதை ட்ரீட்மெண்டில் இயக்குனர் குழம்பித் தவித்திருப்பது பின்பாதியை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது.
சில படங்களில் நகைச்சுவையை ஊட்டும் வகையில் ‘சிலேடை’ பாணியில் வசனங்கள் பேசுவது பார்த்திபனின் வழக்கம். இதில், தனது பாணியிலான வசனங்களை முதன்மை பாத்திரங்களாக வரும் சிறுவர், சிறுமிகள் பேசுவது போன்று அமைத்திருக்கிறார். அது, மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ படத்துக் குழந்தைகளை விட ‘முந்திரிக்கொட்டைகளாக’ அவர்களைக் காட்டுகிறது.
சில பாடல்கள் படமாக்கப்பட்ட விதம், ஆங்காங்கே சில வசனங்கள் போன்றவை இளையோரை ஈர்க்கும்விதமாக இருந்தாலும், படத்தின் உள்ளடக்கத்தை மேலோட்டமாகக் கண்டாலே அதிலிருக்கும் ‘கிரிஞ்’தனத்தை நம்மால் உணர்ந்துவிட முடியும். இப்படத்தின் கிளைமேக்ஸ் அதனை அப்பட்டமாகக் காட்டுகிறது.
பார்த்திபன் படம் என்றாலும், மேடைப்பேச்சு என்றாலும், பொதுவெளிச் சந்திப்பு என்றாலும் கூட, அவரிடத்தில் ‘சில வித்தியாசங்களை’ எதிர்பார்க்க முடியும். ஒருகட்டத்தில் அதுவே ‘சுகமான சுமை’யாகிப் போனதாக, அவரே சில மேடைகளில் கூறியிருக்கிறார். ‘டீன்ஸ்’ படத்திலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது.
இந்தப் படத்தில் பல இடங்களில் தனது ‘தனித்துவத்தை’ அவர் வெளிக்காட்ட முனைந்திருக்கிறார். அவற்றைத் தவிர்த்திருந்தால் இப்படம் வேறு மாதிரியாக வெளிப்பட்டிருக்கலாம். என்றென்றைக்கும் ரசிகர்கள் ஆராதிக்க, அப்படிப்பட்ட படைப்புகளே வேண்டும். அடுத்த படத்திலாவது பார்த்திபன் அதனை நிகழ்த்துவார் என்று நம்புவோம்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்