இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியின் வெற்றிக் கணக்கு!

கடந்த மக்களவைத் தேர்தலின் போது ‘400 + இடங்கள் பெறுவோம்‘ என சபதம் செய்து பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனால் 240 இடங்களோடு அதன் ஆட்டம் அடங்கிப்போனது.

தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் துணையோடு கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது, பாஜக.

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து ஐந்தே மாதங்களில், மேலும் ஒரு பின்னடைவை அந்தக் கட்சி சந்தித்துள்ளது.

கடந்த 10-ம் தேதி ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது.

‘இந்தியா‘ கூட்டணி 10 தொகுதிகளில் வாகைசூட, பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.

‘இந்தியா ’ கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸ் 4, காங்கிரஸ் 4, திமுக 1, ஆம் ஆத்மி 1 என 10 தொகுதிகளைப் பிடித்துள்ளது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வென்றுள்ளார்.

திரிணாமூல் சாதனை வெற்றி

மே.வங்க மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகள் இடைத்தேர்தலை சந்தித்தன. அத்தனை இடத்திலும் திரிணாமூல் காங்கிரஸ் வென்றுள்ளது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜக வசம் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்றுள்ளதால், அந்தக் கட்சியின் தலைவர்கள் துவண்டுள்ளனர்.

அதிக பட்சமாக கொல்கத்தா நகரில் உள்ள மானிக்தலா சட்டசபைத் தொகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுப்தி பாண்டே, பாஜக வேட்பாளர் கல்யாண் சுபேயை 62,312 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சலபிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வென்றது. இந்த நிலையில் அங்குள்ள 3 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டும் பாஜக வென்றது.

அயோத்தியை அடுத்து பத்ரிநாத்..

கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் அந்தக் கட்சிக்கு அந்த மாநில மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

அங்கு தேர்தல் நடைபெற்ற பத்ரிநாத், மங்களூர் ஆகிய இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.

இந்துக்களின் புனித தலமான பத்ரிநாத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லகாபத் சிங் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜேந்திர சிங் பண்டாரி காங்கிரஸ் சார்பாகக் களம் கண்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

சில மாதங்களுக்கு முன், பாஜகவில் இணைந்தார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனால், இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தமுறை பாஜக வேட்பாளராகக் களமிறங்கிய ராஜேந்திர சிங் பண்டாரி தோல்வியைத் தழுவியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொகுதியைத் தக்கவைத்துள்ளது

’மக்களவைத் தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத்தில் வென்றோம் – இப்போது பத்ரிநாத்திலும் வெற்றிக்கொடி நாட்டி உள்ளோம்’ என காங்கிரஸ் எம்.பி.மாணிக் தாகூர், தனது ‘எக்ஸ்‘ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கில் ஆம் ஆத்மியும், பீகார் மாநிலம் ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

மத்தியபிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதியில் பாஜக வாகை சூடியுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் ‘இந்தியா‘ கூட்டணி தலைவர்களுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

– மு.மாடக்கண்ணு

bjpby electioncongressindia allianceஇந்தியா கூட்டணிகாங்கிரஸ்திமுகபாஜக
Comments (0)
Add Comment