படிக்காத மேதை, கல்வியின் தந்தை, கல்விக் கண் திறந்தவர் என அழைக்கப்பட்ட காமராசர் சாமானியர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.
இவர் பிறந்த ஜுலை 15-ம் நாளினையே இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகின்றனர். ஏனெனில் இவர் அனைவரும் ஆச்சரியத்துக்குள்ளாகும் வகையில் பல கல்வி நலத்திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளார்.
காமராசரின் பிறந்த நாளான அன்றே கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதற்கான காரணம், தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த காமராசர் 1953-ம் ஆண்டு தொடக்கக் கல்வி திட்டத்தினை அறிமுகப்படுத்தி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
அரசினால் மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்களின் கற்றல் திறைனைத் துரிதப்படுத்தினார். ஏழை, கிராமப்புறத்தில் வாழ்கின்ற மாணவர்கள் கல்வியினைத் தொடர்வதற்காக சிறந்த வசதிகளை மேற்கொண்டார்.
அதாவது பதினோராம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தி எழுத்தறிவின்மையை ஒழித்தார். இதன் காரணமாக 7 சதவிகிதமாக இருந்த கல்வி விகிதமானது 37 சதவிகிதத்தை எட்டியது.
ஏழைப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது உணவு வழங்கும் திட்டமான மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
பள்ளிகளின் எண்ணிக்கையை மேம்படுத்துவது மட்டுமன்றி கல்வித்தரத்தை உயர்த்தவும் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் காமராஜர். பாடசாலைகளில் தேவையற்ற விடுமுறைகளைக் குறைத்தார்.
பள்ளிகள் கட்டுவது, உணவு வழங்குவது, ஆசிரியரை நியமிப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த கல்வித் திட்டத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சியினை காமராசர் ஏற்படுத்தினார் என்பது மிகையில்லாத உண்மை.
ஒவ்வொரு தனிமனிதனும் கல்வியை தன் பொறுப்பு என நினைத்து செயற்பட வேண்டும் என்ற நோக்கில் கல்வி வளர்ச்சிக்கான திட்டத்தினை மேற்கொண்டார்.
இதற்காக பொது மக்களிடம் இருந்து நன்கொடை வசூலித்தனர். நன்கொடையினூடாக சுமார் 4 கோடி ரூபாய் பொது மக்கள் வழங்கினர். இதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
இதனால் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகள் நீங்கி அனைவரும் சமமானவர்கள் என்ற நிலை மேலோங்கி காணப்பட்டது.
கல்வியறிவின்மையை தவிர்ப்பதற்காக கட்டாய ஆரம்ப கல்வியை உருவாக்கினார். தனது மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகள் இல்லாத இடமே இல்லை என கூறுமளவிற்குப் பள்ளிகளை நிறுவி கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
முதன்முதலாக ஆசிரியர்களுக்கு குடும்ப ஓய்வூதியத் திட்டம் ஒன்றை காமராசர் அவர்களே வழங்கினார்.
மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவசாயக் கல்லூரி என கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்தார்.
இவ்வாறாக கல்விக்காகவே அரும்பாடுபட்டு கல்வி நடவடிக்கையில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியவரான காமராசரின் பிறந்த நாள் தினத்தையே அரசானது கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகின்றது.
– நன்றி: தமிழ்ச் சுடர் இதழ்