’ஒரு கரகாட்டக்காரன் தான். அதுக்கு ரெண்டாம் பாகம் எடுக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல’ என்று ‘சாமானியன்’ பட வெளியீட்டின்போது கருத்து தெரிவித்திருந்தார் நடிகர் ராமராஜன்.
கமல்ஹாசன் நடித்த படத்தை விமர்சிப்பதற்கும் இந்தக் கருத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?
‘இந்தியன் 2’ படத்தைப் பார்க்கத் தொடங்கியபோது ராமராஜன் விஷயம் மனதுக்குள் நிழலாடியது.
படம் நிறைவுற்றபோது அந்த எண்ணம் என்னவாக இருந்தது?
தன்னளவில் திருந்துங்கள்!
தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற வார்த்தையைத் திரையில் அர்த்தப்படுத்தியவர்களில் ஒருவர் இயக்குநர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’ தொடங்கி ’எந்திரன் 2’ வரை அவரது ஒவ்வொரு படத்திலும் அதனை நாம் காண முடியும்.
அந்த அடையாளத்தோடு, ஒவ்வொரு பிரேமிலும் அழகியல் ரசனையை வாரியிறைத்து கமர்ஷியல் படம் தருவதில் அவர் கில்லாடி. அப்படி அவர் தந்த படைப்புகளில் ஈடிணையற்றதாக விளங்குவது ‘இந்தியன்’.
மகன் சந்திரசேகரனைக் (கமல்ஹாசன்) கொன்றுவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு அவர் தப்பிச் செல்வதாக, அதன் கிளைமேக்ஸ் அமைந்திருந்தது.
அந்த சேனாபதி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியா திரும்புவதையும், இங்கிருக்கும் ஊழல் பேர்வழிகளை ஒழித்துக் கட்டுவதையும் சொல்கிறது இந்தியன் 2.
அரசு அலுவலகத்தில் பணியில் சேரச் சென்ற ஒரு பெண்ணை போலிச்சான்றிதழ்கள் தந்ததாகக் கூறி கைது செய்ய முயல்கிறது காவல் துறை. ‘தான் அவ்வாறு செய்யவில்லை’ என்று அலறும் அந்தப் பெண், அவமானம் தாங்காமல் அக்கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்.
இது போல மேலும் பல அப்பாவிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆனால், அந்த பாதிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் சுகமாக வாழ்கின்றனர்.
யூடியூப் சேனலில் இது போன்ற மோசடிகளைத் தோலுரித்துக் காட்ட முயல்கின்றனர் சித்ரா அரவிந்தன் (சித்தார்த்) மற்றும் அவர்களது நண்பர்கள்.
அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர். அதனைத் தடுக்க முயலும் காவல் துறையால் தாக்கப்படுகின்றனர். அதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அந்தச் சூழலில், ‘இந்தியன் தாத்தா இப்போது இங்கு வந்தால் எப்படியிருக்கும்’ என்கிறார் சித்ரா அரவிந்தன். ‘இந்தியன் மீண்டும் வரவேண்டும்’ என்ற ஹேஷ்டேக்கை அவரது நண்பர்கள் சமூகவலைதளத்தில் ‘ட்ரெண்டிங்’ ஆக்குகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தைஃபேவில் சேனாபதி உயிரோடு இருப்பது தெரிய வருகிறது.
இளைய தலைமுறையினர் ஊழலுக்கு எதிராகப் போராட முன்வருவதைக் காணும் அவர், மீண்டும் தான் அங்கு வரப்போவதாகச் சமூகவலைதளத்தில் அறிவிக்கிறார்.
தைஃபேவில் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ஒரு தொழிலதிபரைக் கொடூரமாகக் கொலை செய்யும் சேனாபதி, பிறகு குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உலவும் ஊழல்வாதிகளைக் கொல்கிறார்.
அதேநேரத்தில், இளைய தலைமுறையினரும் தங்களது குடும்பத்தில் ஊழல் செய்பவர்களைக் கண்டித்து நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
சித்ரா அரவிந்தனின் தந்தை ஊழல் தடுப்பு பிரிவில் அதிகாரியாக இருக்கிறார். அதேபோல அவரது தோழி, நண்பர்களின் உறவினர்களும் அரசுப் பதவிகளில், பொதுமக்கள் நலன் சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொருவரும் அவரவர் உறவினர்களின் நடவடிக்கைகளைக் கண்டறிந்து ஊழல் புகார் பதிவு செய்கின்றனர். அதனால், அந்த உறவினர்களின் வெறுப்புக்கும் ஆளாகின்றனர்.
அதன் உச்சபட்சமாக, தனது தாயை இழக்கிறார் சித்ரா அரவிந்தன். அந்த நேரத்தில் சேனாபதியை அவர் நேரில் சந்திக்கிறார். தன் மனதிலுள்ள வெறுப்பை உமிழ்கிறார். அந்த நேரத்தில், அவரைச் சுற்றி வளைத்துக் கொல்ல முயல்கிறது ஒரு கும்பல். காவல் துறையும் அவர் பின்னே வருகிறது.
அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘இந்தியன் 2’.
’தன்னளவில் திருந்துங்கள்’ என்ற முழக்கத்தை இந்தியன்-2 இதில் முன்வைக்கிறது. அதன் காரணமாகத் திரையில் இருந்து கொஞ்சம் கூடக் கவனம் விலகாதவாறு மிகச்சீரிய முறையில் இக்கதையைச் சொல்லியிருக்க வேண்டும். எதிர்பாராத பல திருப்பங்களைப் புகுத்தியிருக்க வேண்டும். அது இப்படத்தில் நிகழவில்லை.
உண்மையைச் சொன்னால், முழுக்கதையையும் ‘இஞ்ச் பை இஞ்ச்’ விவரித்தாலும் திரையில் மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் வகையில் ஷங்கரின் படங்கள் இருக்கும். இதில் அந்த மாயாஜாலம் கொஞ்சம் கூட நிகழவில்லை.
எதுக்கு இவ்ளோ உழைப்பு?
மிகக்கடினமாகப் படித்து பரீட்சையில் ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்களைப் பெற்றவரைப் பார்த்தால், ‘எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்குறீங்க’ என்று கேட்கத் தோன்றும். அது போன்ற கேள்வியை எழுப்புகிறது ‘இந்தியன் 2’ திரைக்கதை.
ஒவ்வொரு பிரேமிலும் பிரமாண்டத்தை இழைப்பதிலும், ஷாட் உருவாக்கத்தில் நுணுக்கங்களைப் புகுத்துவதிலும் உழைப்பைக் கொட்டியிருக்கிறது ‘இந்தியன் 2’ படக்குழு.
இயக்குனர் ஷங்கர் அப்படி வேலை வாங்குவதில் ஜித்தன் என்பதும் நாமறிந்த விஷயம் தான். ஆனால், அதற்கான திருப்தி திரையில் காணக் கிடைப்பதில்லை என்பதே இப்படத்தின் மைனஸ்.
ஷங்கர் படங்களில் பொழுதுபோக்கு அம்சம் உச்சம் தொடும் வகையில் நகைச்சுவை, காதல், சென்டிமெண்ட் காட்சிகள் இருப்பது வழக்கம். அவற்றின் ஊடே சமூகப் பிரச்சனையைச் சொல்லும் காட்சிகளும் இணைகோடாகத் திரைக்கதையில் இடம்பெறும். அடுத்தடுத்து அக்காட்சிகள் வந்தாலும், அவை நம் மனதை உறுத்தாது.
ஷங்கரின் ‘ஐ’, ‘எந்திரன் 2’ படங்களிலேயே அந்த பார்முலா நீர்த்துப் போயிருந்தது. ‘இந்தியன் 2’வில் அது ‘ட்ரோல்’ செய்யப்படும் அளவுக்கு மோசமான நிலையை எட்டியிருக்கிறது.
அதன் உச்சமாக, ’இந்தியன் 2’ திரைக்கதையில் சில பகுதிகள் ‘ஸ்ஃபூப்’ படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன. ‘தாத்தா வர்றானே கதறவிடப் போறானே’ என்பது போன்ற பாடல் வரிகள் அதனை முன்னுணர்த்தின என்பது படம் பார்த்தபிறகே நமக்குப் பிடிபடுகிறது.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு, முத்துராஜின் தயாரிப்பு வடிவமைப்பு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு மற்றும் சண்டைக்காட்சிகள் வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, நடன அமைப்பு என்று அனைத்து பிரிவுகளிலும் ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர்.
ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லஷ்மி சரவணகுமார் இதில் வசனம் எழுதியுள்ளனர்.
‘அக்கா நீ சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகலை. மாமா லஞ்சம் வாங்குனதால, சில பேரோட சாபத்தால நீ குண்டாகியிருக்க’ என்பது போன்ற வசனங்கள் சாதாரண மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக உள்ளன.
சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த் நால்வரும் இதில் ‘ஃபார்கிங் டாக்ஸ்’ எனும் யூடியூப் சேனல் குழுவாகத் தோன்றியிருக்கின்றனர். அவர்களது பெற்றோர்கள், உறவினர்களாக சமுத்திரக்கனி, ரேணுகா, தம்பி ராமையா, மனோபாலா, தீபா, இமான் அண்ணாச்சி வந்து போயிருக்கின்றனர்.
வில்லன்களாக குல்ஷன் குரோவர், ஜாகீர் கான், எஸ்.ஜே.சூர்யா உட்பட அரை டஜன் பேர் திரையில் தோன்றியிருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து துணை பாத்திரங்கள், பின்னணியில் தோன்றுவோர் என்று சில ஆயிரம் பேராவது இப்படத்தில் இடம்பெற்றிருப்பது நிச்சயம்.
இவர்களுக்கு நடுவே சேனாபதியாகத் தோன்றியிருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் அவரது தோற்றம், ‘தசாவதாரம்’ படத்தில் வந்த சீனக் கலைஞர் பாத்திரத்தையே நினைவூட்டுகிறது.
’இந்தியன்’ படத்தில் ‘பச்சைக்கிளிகள்’ பாடல், சந்துரு பாத்திரத்தோடு முரண்படும் காட்சிகளில் வயதான தோற்றத்தையும் மீறி கமலின் முக பாவனைகள் தெளிவாகத் தெரியும். ஆனாலும், அந்த ஒப்பனை அவரது நடிப்பாற்றலின் முழுப்பரிமாணத்தை மறைத்துவிட்டதாகச் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
அவர்கள் ‘இந்தியன் 2’ படத்தைப் பார்த்தால், நெருப்புக்கோழி போல மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு இந்தியன் பாத்திர ஒப்பனை ‘பிளாஸ்டிக்’தனத்துடன் திரையில் தெரிகிறது.
வழக்கமாக, ஷங்கர் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ‘தலைவாழை இலை முழுவதும் விதவிதமான உணவுகளைப் பரப்பி உண்டது’ போன்ற திருப்தி உருவாகும்.
படத்தின் உள்ளடக்கம் அசீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தாலும் கூட, அந்த திருப்தியே பெரிதாகத் தோன்றும். ‘இந்தியன்-2’வைப் பொறுத்தவரை நம்மில் பலருக்கு அதிருப்தியே மிகுகிறது.
நீர்த்துப்போன பார்முலா!
சிறு வயதில் எதுவெல்லாம் பிரமிக்க வைத்ததோ, அதிர்ச்சிப்படுத்தியதோ, மகிழ்ச்சியில் தள்ளியதோ, வளர்ந்தபின்னர் அவையனைத்தும் மிகச்சாதாரணமாகத் தெரியும். அதேநேரத்தில், சமகாலத்தில் டவுசர் சட்டை அணிந்து பள்ளிக்கூடம் செல்ல நாம் தயாராக இருக்க மாட்டோம் என்பதையும் மறுக்க முடியாது.
அது தெரிந்தும், தனது முந்தைய படங்களின் ப்ளஸ் பாயிண்ட்களை எல்லாம் ‘இந்தியன் 2’வில் அள்ளித் தெளித்திருக்கிறார் ஷங்கர்.
இந்தியனையும் அந்நியனையும் ஒன்றாகத் தைத்து, நம்மைத் தலைவலிக்கு ஆளாக்கியிருக்கிறார். ’இது என்ன வர்மம் தெரியுமா’, ‘இதனைப் பிரயோகிச்சா என்னவா ஆகுவாங்கன்னு தெரியுமா’ என்று ’கிளாஸ்’ எடுத்திருக்கிறார்.
தனது படத்தின் அனைத்து காட்சிகளையும் மிகச்செறிவாக, இறுக்கமாக ஒரு ‘பேக்கேஜு’க்குள் அடைப்பது ஷங்கரின் வழக்கம். அது திரைக்கதையில் இருக்கும் பலவீனங்களை நம் கண்ணில் படாமல் மறைத்துவிடும்.
இந்த முறை, எடுத்ததையெல்லாம் சேர்த்து இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று ஷங்கர் முடிவு செய்திருக்கிறார் போலும்! அது அவரது பார்முலாவை இன்னும் நீர்த்துப் போகச் செய்திருக்கிறது.
அதன் வழியே, தன்னையும் அறியாமல் தனது ப்ளஸ் பாயிண்ட்களை எல்லாம் துறந்திருக்கிறார் ஷங்கர்.
பிரமாண்டமாகத் தயாராகி, பெருமளவில் விளம்பரத்தப்பட்டு, வெளியீட்டில் மாபெரும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன சில திரைப்படங்கள்.
அப்போதெல்லாம், ‘புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல ஷங்கர் படம் மாதிரி எடுக்க நினைத்தால் மட்டும் போதுமா, அதற்கேற்ற உள்ளடக்கத்தைத் தர வேண்டாமா’ என்று விமர்சனம் செய்யப்படும்.
‘இந்தியன் 2’வில் அப்படியொரு சூட்டை தனக்குத்தானே வைத்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.
’கிளாசிக்’ படங்களை ரீமேக் செய்வதைப் போல, சில படங்களின் அடுத்தடுத்த பாகங்களும் கூட ரசிகர்களைச் சோதனைக்குள்ளாக்கியிருக்கின்றன. அதில் மேலுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘இந்தியன் 2’.
அதோடு நின்று கொள்ளாமல், ‘இந்தியன்’ படத்தின் ’ஸ்ஃபூப்’ ஆகவும் மாறி நிற்கிறது. இந்தியத் திரையுலகில் ‘கிளாசிக்’ படம் தந்த இயக்குனர் ஒருவர், அதன் அடுத்த பாகத்தை ‘ஸ்பூஃப்’ ஆகத் தருவது வெகு அரிதாகத்தான் நிகழும். வேறென்ன சொல்வது?