புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் ஸ்தாபிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காப்பாற்றப்பட்ட அதிமுக எனும் மக்கள் இயக்கம், இன்று நான்கு துண்டுகளாக உடைந்துள்ளது.
பெரும் துண்டு எடப்பாடி பழனிசாமி கையிலும், சிறு சிறு துண்டுகள் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கைகளிலும் உள்ளதால், கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்திலும் அதிமுகவால் வெல்ல முடியவில்லை.
அதிமுக சரித்திரத்தில் இல்லாத வகையில் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக ‘டெபாசிட்‘ இழந்திருப்பது, கட்சியினரை நிலை குலையச் செய்துள்ளது.
அவர்களை சமாதானம் செய்யும் நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ’’கடந்த தேர்தலைக் காட்டிலும் ஒரு சதவீதம் வாக்குகள் அதிமுக அதிகம் வாங்கியுள்ளது” என ஒரு சால்ஜாப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் சொன்ன சதவீத கணக்கு சரிதான். ஆனால் வாக்குகள் கணிசமாக குறைந்துவிட்டது என்பதே யதார்த்தம்.
ஒரு ஒப்பீடு
இந்த முறை அதிமுக சராசரியாக ஒரு தொகுதியில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 878 ஓட்டுகள் பெற்றுள்ளது. ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் பெற்ற சராசரி வாக்குகள் 3 லட்சத்து 77 ஆயிரத்து 607 ஆகும்.
அதாவது 18% வாக்குகளை இந்த முறை அதிமுக இழந்துவிட்டது.
பிரதான காரணம்- தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகள் பெரிய அளவில் சரிந்திருப்பது தான்.
கொங்கு மண்டலமான மேற்கு பகுதியில் அதிமுகவுக்கு சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 3 லட்சத்து 25 ஆயிரத்து 924 வாக்குகள் கிடைத்துள்ளன.
ஆனால் மதுரை, நெல்லை போன்ற மாவட்டங்கள் அடங்கிய தென் மண்டலத்தில் சராசரியாக ஒரு தொகுதியில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இங்கு மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக ‘டெபாசிட்’ இழந்துள்ளது.
எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு போட்டியிட்டு ஜெயித்த அருப்புக்கோட்டை, எம்.ஜி,ஆர். பெருவாரியான வித்தியாசத்தில் வென்ற ஆண்டிபட்டி, ஜெயலலிதா வாகை சூடிய போடி ஆகிய சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் தான், இத்தகைய பரிதாப நிலை.
தென் மண்டலத்தில் அதிமுகவின் வாக்குகளை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையிலான இயக்கங்கள் சாப்பிட்டு விட்டதே, இங்கு அதிமுகவுக்கு ஏற்பட்ட சரிவுக்கு ஒரே காரணம். சட்டசபை, உள்ளாட்சி இப்போது மக்களவை என தொடர்ச்சியாக அதிமுக தோல்வியைச் சந்தித்து வருவதால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கட்சிக்குள், ஓங்கி ஒலிக்கின்றன, குரல்கள்.
ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இதனை செவி மடுத்து கேட்பதாக இல்லை.
ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இப்போது, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகளுடன் சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜூலை 10-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. சட்டசபைத் தொகுதி வாரியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 6 சட்டசபைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார், பழனிசாமி.
கூட்டத்தில் பேசிய பழனிசாமி, “இந்தத் தேர்தலில் நமது வாக்கு சதவீதம் குறையவில்லை – திமுகவின் வாக்குகள் தான் குறைந்துள்ளது” என பழைய பல்லவியையே பாடியுள்ளார்.
கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களை இணைப்பது குறித்து எதுவும் பேசவில்லை. இது, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
“எடப்பாடி பழனிசாமி, தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ள வேண்டும் – ஓபிஎஸ், தினகரன், சசிகலாவுடன் சமரசமாக போக வேண்டும் – அவர்கள் கட்சியில் எந்த பதவியும் கேட்கும் மனநிலையில் இப்போது இல்லை – எனவே அவர்களை ஒருங்கிணைத்தால் வரும் தேர்தல்களில் அதிமுக மாபெறும் வெற்றி பெரும்” என்பது பெரும்பான்மை தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்தை கைவிடுவாரா? பொருத்திருந்து பார்ப்போம்.
– மு.மாடக்கண்ணு