வெப்சீரிஸ் என்றாலே பரபரப்பு இருந்தாக வேண்டியது கட்டாயம். அதிலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்களைக் கொண்ட காட்சிகள் இருக்கின்றன என்றால் திரைக்கதையில் த்ரில்லையும் ஆக்ஷனையும் நிறைத்தே தீர வேண்டும்.
நிலைமை இப்படியிருக்க, அரசியலை மட்டுமே அப்படியொரு படைப்பில் பரப்பி வைத்தால் என்னவாகும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. அப்படியொன்றாக நமக்கு காணக் கிடைக்கிறது ‘தலைமை செயலகம்’.
வசந்தபாலன் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜீ5 தளத்தில் இது வெளியாகியுள்ளது.
சரி, ‘தலைமைச் செயலகம்’ நமக்கு எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது?
குடும்ப அரசியல்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து வருகிறார் அருணாச்சலம் (கிஷோர்). அ.இ.எ.மு.க எனும் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அக்கட்சியின் செயலாளராக செல்வ புவியரசன் (சந்தான பாரதி) இருந்து வருகிறார்.
மனைவி, மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகள் என்று அருணாசலத்தின் குடும்பமே புகழ் வெளிச்சத்தில் இருக்கிறது.
அருணாச்சலத்தின் மூத்த மகள் அமுதவல்லி (ரம்யா நம்பீசன்), மாநில அரசில் முக்கியத்துவமிக்க அமைச்சராக இருந்து வருகிறார். தந்தைக்கு அடுத்த நிலையில் கட்சியிலும் ஆட்சியிலும் இருப்பது நான் தான் என்பது அவரது எண்ணம்.
அமுதவல்லியின் கணவர் பிரகதீஷ் (சித்தார்த் விபின்) நேரடி அரசியலில் ஈடுபடாதபோதும், அரசு சார்ந்த விஷயங்களோடு தொடர்புடையவராக இருக்கிறார்.
அதேநேரத்தில் அருணாசலத்தின் இரண்டாவது மகளின் கணவர் ஹரி, அரசில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
அருணாசலத்திற்கு அரசியல்ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் பல ஆலோசனைகளை வழங்குபவராகத் திகழ்கிறார் கொற்றவை (ஸ்ரேயா ரெட்டி). டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், ஒரு பிரபல பத்திரிகையாளராகவும் விளங்குகிறார்.
கொற்றவைக்கும் அருணாசலத்திற்கும் இடையே தவறான உறவு இருப்பதாக்க் கிசுகிசுக்கின்றன ஊடகங்கள். அதனால், கொற்றவையின் மகள் மாயாவுக்கு (சாரா பிளாக்) தாயைக் கண்டாலே பிடிப்பதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்னர் அருணாசலத்தின் மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில், அவருக்கு எதிராகத் தீர்ப்பு தரும் நிலை உருவாகிறது.
அந்த ஆபத்தில் இருந்து அவர் தப்புவாரா இல்லையா என்பது கட்சியைச் சேர்ந்தவர்கள், அரசில் அங்கம் வகிப்பவர்கள் போலவே அவரது குடும்பத்தினருக்கும் பெரும் கவலையைத் தருகிறது.
ஒருவேளை அருணாச்சலம் சிறை சென்றால், அவருக்கு அடுத்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவது யார் என்ற கேள்வியும் எழுகிறது.
ஒரு பக்கம் நீதிமன்ற விசாரணை ஆந்திராவிலுள்ள நீதிமன்றமொன்றில் நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் அருணாச்சலத்தின் அரசியல் நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் தரகர் கிருஷ்ணமூர்த்தியும் (ஷாஜி) வழக்கறிஞர் ரங்கராஜனும் (ஒய்.ஜி.மகேந்திரன்) இணைந்து மத்தியில் இருக்கும் ஆளும் கட்சிக்குச் சாதகமான சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்கத் துடிக்கின்றனர்.
அதற்காக அருணாச்சலத்தில் கட்சியில் இருப்பவர்கள், அவரது குடும்பத்தினர் என்று பலரையும் வளைக்க முயற்சிக்கின்றனர்.
இந்த நிலையில், கொற்றவையின் தோழி என்ற பெயரில் துர்கா (கனி குஸ்ருதி) என்ற பெண் அவரைச் சந்திக்கிறார். அப்போது, அவருடன் ஒரு ஆணும் இருக்கிறார். அடுத்த நாள் காலையில், அந்த ஆணின் கை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கிறது.
அதனைக் கொண்டு விசாரணை செய்யும் போலீசார், அது காவல் துறையின் உளவுப்பிரிவில் பணியாற்றிய ஒரு அதிகாரியினுடையது என்று கண்டுபிடிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, அந்த நபரும் ஒரு பெண்ணும் கொற்றவையைச் சந்திக்கச் சென்றது தெரிய வருகிறது.
டெபுடி கமிஷனர் மணிகண்டன் (பரத்) அந்த நபர் குறித்து கொற்றவையை விசாரிக்கச் செல்கிறார்.
அதேநேரத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
அதன் காரணமாக, அந்தக் கொலை குறித்து விசாரிக்கும் சிபிஐ அதிகாரி நவாஸ் கான் (ஆதித்ய மேனன்), துர்கா என்றொரு பெண் பத்துக்கும் மேற்பட்டோரைப் படுகொலை செய்துவிட்டு, அவர்களது பிடியில் இருந்து தப்பியதை அறிகிறார்.
அந்த எம்.எல்.ஏ. போலவே அங்கிருக்கும் எம்பி ஒருவரையும் அவர் கொன்றதை விசாரணையில் கண்டுபிடிக்கிறார்.
அவர் யார் என்று தெரியாவிட்டாலும், அவரது தோற்றத்தைவெளிப்படுத்தும் ஓவியமொன்று நவாஸ் கானுக்கு கிடைக்கிறது. துர்காவைத் தேடி அவர் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணிக்கிறார்.
பல்வேறு கிளைகளாக விரியும் இக்கதைகளின் ஊடே சில பாத்திரங்கள், சில விஷயங்கள் அவற்றை இணைக்கும் பாலங்களாக விளங்குகின்றன.
நவாஸ் கான் தேடும் துர்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? கொற்றவை ஏன் அருணாசலத்தோடு நெருங்கிப் பழகுகிறார்? அருணாசலம் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு என்னவாக அமைந்தது?
நிகழும் அரசியல் மாற்றங்களை அருணாசலம் குடும்பத்தினரும் அவரது கட்சியைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களும் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லியவாறே நகர்கிறது இந்த ‘தலைமைச் செயலகம்’.
இக்கதையின் மையமாகக் குடும்ப அரசியல் காட்டப்படுகிறது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெரிய கட்சிகள், இரண்டு தேசியக் கட்சிகளை நேரடியாகக் கைகாட்ட முடியாதவாறு கதாபாத்திர வார்ப்பை ‘கலந்து கட்டி’ வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
அதனால், இந்தக் கதையில் உண்மையின் சதவிகிதத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரத்தில், சமீபத்தில் ஊடகங்களில் நாம் கண்டும் கேட்டும் கேள்விப்பட்டும் வரும் விஷயங்கள் பலவற்றை இது பிரதிபலிக்கிறது. அதுவே இந்த வெப்சீரிஸின் யுஎஸ்பி.
‘பவுடர்’ வாசம் அதிகம்!
முதலமைச்சர் அருணாச்சலமாகத் தோன்றும் கிஷோர் தனது ஒப்பனை, குரல் தொனி போன்றவற்றை மாற்றி நடித்திருப்பது, அவரை வேறொரு நபராக உணர வைத்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்தவொரு அரசியல் தலைவரையும் ‘இமிடேட்’ செய்யாமல் தவிர்த்திருப்பது வெறும் கதையாக ‘தலைமைச் செயலகத்தை’ அணுக வழி வகை செய்கிறது.
ஸ்ரேயா ரெட்டிக்கு இதில் கொற்றவை பாத்திரம் தரப்பட்டுள்ளது. ‘ரொம்பவே மாடர்ன் கேர்ள்’ என்று சொல்லக்கூடிய இயல்புள்ளவரை இப்படியொரு பாத்திரத்தில் காட்டியிருப்பது ஆச்சர்யமான விஷயம்.
தனது பார்வை, கூர்மையான உடல்மொழி மூலமாகப் பல காட்சிகளில் அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
பரத், ஆதித்ய மேனனுக்கு இதில் மிகப்பெரிய பாத்திரம் தரப்படவில்லை. ஆனால், இக்கதையில் ‘ஆக்ஷன்’ பரபரப்புக்கு அவர்களே பொறுப்பேற்றிருக்கின்றனர்.
ஒய்.ஜி.மகேந்திரன், ஷாஜி, நமோ நாராயணா சம்பந்தப்பட்ட காட்சிகள் நாம் கேள்விப்பட்ட சில அரசியல் கிசுகிசுக்களை கண் முன்னே காட்டி நகைக்க வைக்கின்றன.
ரம்யா நம்பீசன் இதில் அமுதவல்லியாக வருகிறார். அவரது இருப்பு இத்திரைக்கதையில் கணிக்க முடியாததாக உள்ளது. அதேநேரத்தில், அவரது நடிப்பு ‘க்ளிஷே’வாக தென்படுகிறது.
ஹரி எனும் பாத்திரத்தில் நிரூப் நந்தகுமார் நடித்துள்ளார். அழகான வில்லனாகத் திரையில் தோன்றுவதற்கான தகுதிகள் தனக்குள்ளதாகக் காட்டியிருக்கிறார்.
மாயா எனும் பதின்ம வயதுப் பெண்ணாக வரும் சாரா பிளாக் நடிப்பு கனகச்சிதமாக இருந்தபோதும், ஏனோ அவரது தோற்றம் இதர பாத்திரங்களுடன் பொருந்தாமல் ‘தனித்தீவாக’ தெரிகிறது.
சித்தார்த் விபின், கவிதா பாரதி, தர்ஷா குப்தா, சந்தான பாரதி போன்றவர்களுக்குத் திரையில் இன்னும் கொஞ்சம் ‘ஸ்பேஸ்’ தந்திருக்கலாம்.
‘பிரியாணி’ எனும் மலையாளப் படத்தின் வழியே கவனம் ஈர்த்த கனி குஸ்ருதி இதில் துர்காவாக வருகிறார். அவரது இருப்புக்கு நியாயம் சேர்க்கும் நடிப்பை வெளிப்படுத்த இதில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
இந்த சீரிஸில் பாத்திரங்கள் நிறைய இருக்கின்றன. இன்னும் நிறைய பாத்திரங்களைப் புகுத்துவதற்கான வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது இக்கதை. அதுவே இதன் பலம்.
வைட் ஆங்கிள் ரவிசங்கரன் இதில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் கொலைவெறியோடு தன்னைத் தாக்கியவர்களைக் கொன்று குவிக்கும் தொடக்கக் காட்சியில் அவரது உழைப்பு அபாரம். போலவே டிஐ, விஎஃப்எக்ஸ் நேர்த்தியும் ஒருங்கிணைந்த விதம் நம்மை ‘மெஸ்மரிசம்’ செய்வதாக இருக்கும்.
ஆனால் அதேவிதமான பிரமிப்பைப் பின்வரும் காட்சிகளில் பெற முடியாதது ஏனோ?!
படத்தொகுப்பாளர் ரவிகுமார், வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு காலகட்டத்தில் நிகழும் கதைகளை ஒரே வரிசையில் அடுக்க மெனக்கெட்டிருக்கிறார். பெரிதாகக் குழப்பமின்றிக் கதை சொல்ல முயன்றிருக்கிறார்.
வெவ்வேறு மாநிலங்கள், மக்கள், அவர்களது கலாசார மற்றும் பொருளாதார வேறுபாடுகளைத் திரையில் சுருங்கச் சொல்கிறது வி.சசிகுமாரின் கலை வடிவமைப்பு.
ஜிப்ரான் இசையானது பல காட்சிகளில் பரபரப்பையும் கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும் நமக்குக் கடத்த உதவுகின்றன. பாடல்கள் சட்டென்று கவரும் வகையில் அமையவில்லை.
சைமன் கிங்கும் இதில் பின்னணி இசையில் கூடுதலாகப் பங்காற்றியிருக்கிறார். தொடர்ந்து நான்கரை மணி நேரம் இப்படைப்பைப் பார்ப்பதில் அவரது பங்களிப்பும் கணிசமாக இருக்கும் என்று நம்பலாம்.
இன்னும் டான் அசோக்கின் ஆக்ஷன் கொரியோகிராஃபி, ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை என்று பல கலைஞர்களின் உழைப்பு இதில் நிறைந்திருக்கிறது.
‘தலைமை செயலகம்’ கதையை ஜெயமோகனும் இயக்குனர் வசந்தபாலனும் இணைந்து எழுதியிருக்கின்றனர்.
வசனங்களில் எஸ்.கே.ஜீவா, பரணி கிரி, புதிய பரிதியின் பங்களிப்பு இயல்பான உரையாடல்களைக் கேட்க வகை செய்திருக்கிறது. ஆரம்பத்தில் கொற்றவை – அருணாச்சலம் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் செயற்கையாகத் தெரிந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளின் நகர்வு அதனை மறக்கடிக்கிறது.
வெயில், அங்காடித் தெரு, அரவான் படங்களில் நம்மை அசரடித்த ஜி.வசந்தபாலன், இதனை இயக்கியிருக்கிறார்.
அவரது முந்தைய படங்களின் கதைகளில் இருந்த இயல்புத் தன்மையை ஒப்பிடுகையில் இதில் ‘பவுடர்’ வாசம் அதிகம்.
அதேநேரத்தில், ஒரு கமர்ஷியல் படம் பார்ப்பது போன்ற உணர்வை இதில் அவர் உருவாக்கியிருப்பதை மறுக்க முடியாது.
ஆதித்ய மேனன், பரத் சம்பந்தப்பட்ட காட்சிகளில் துப்பு துலக்கும் இடங்கள் சட்டென்று நமக்குப் பிடிபடுவதில்லை.
அவற்றை இன்னும் கொஞ்சம் ‘புடம்’ போட்டு விளக்கியிருக்கலாம். சாதாரண ரசிகனாகத் திரையை நோக்குவதில் இது போன்ற சில சிக்கல்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது ‘தலைமைச் செயலகம்’.
விடுபட்டவை சில..!
‘தலைமைச் செயலகம்’ தமிழ்நாட்டு அரசியலைப் பேசுகிறதா என்று கேட்டால் ‘ஆம்’, ‘இல்லை’ என்ற இரண்டு பதில்களையும் சொல்லியாக வேண்டும்.
ஏனென்றால் இதில் நிலப்பரப்பு, கலாசார அடையாளங்களைத் தவிர்த்துப் பார்த்தால் எந்தவொரு மாநிலத்தின் அரசியல் நிலையோடும் இக்கதையைப் பொருத்திப் பார்க்க முடியும்.
அதற்காகவே தமிழ்நாட்டு கட்சிகளைக் கைநீட்டிச் சுட்டிக்காட்ட முடியாதவாறு இதில் பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெப்சீரிஸ்களில் வெவ்வேறு கிளைக்கதைகள் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து சொல்லப்படுவது இயல்பு.
இதில் அப்படிப்பட்ட காட்சிகள் அமைந்திருப்பது ஈர்ப்பைத் தூண்டுகிறது. ஆனால், அந்த காட்சிகளின் அடுத்த நிலை என்ன என்று கேள்வி எழாதவாறு இதர கதைகள் திரையில் சொல்லப்பட வேண்டும்.
‘அட ஆமால்ல, இந்த கதை என்னாச்சு’ என்று எண்ணும்படியாக. அவற்றின் தொடர்ச்சி வெளிப்பட வேண்டும்.
கோபுரம் போன்று அடுக்கப்பட்ட சீட்டுக்கட்டில் எந்தவொன்றை உருவினாலும், மொத்த வடிவமும் சிதறக்கூடும் என்பதாகவே மொத்த திரைக்கதையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரேமிலும் பிரமாண்டமான உள்ளடக்கத்தைக் காணும் மாயையை ஏற்படுத்த வேண்டும்.
‘தலைமைச் செயலகம்’ சீரிஸில் மேற்சொன்னவை ஆங்காங்கே இருக்கின்றனவே தவிர, முழுப் படைப்பும் அப்படியொரு நிறைவைத் தரவில்லை. அதனால் நிறைய விஷயங்கள் விடுபட்டிருக்கின்றன என்ற எண்ணம் உடனடியாக நம்மைத் தொற்றுகிறது. இன்னும் பல திருப்பங்களைப் புகுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கத்தைத் தூண்டுகிறது.
அதற்கான அனேக வாய்ப்புகளை இக்கதை கொண்டிருக்கிறது என்பதனாலேயே தனியே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.
‘கிளைமேக்ஸ் திருப்பம் எதிர்பார்த்த ஒன்று’ என்றபோதும், அதனை அவ்வாறு கருதிவிடாதவாறு இன்னும் சில காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.
மத்திய, மாநில அரசுகள், ஊழல் வழக்குகள், திட்டங்களில் கைகோர்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள், கைமாறும் கமிஷன் போன்றவற்றைப் பட்டவர்த்தனமாகக் காட்டுவதில் பல முரண்கள் இக்குழுவினரிடையே நிச்சயம் எழுந்திருக்கும்.
முடிவில், அக்குழு எட்டிய சமரசங்களின் அடிப்படையில் தற்போதைய ‘வெர்ஷன்’ நமக்கு காணக் கிடைத்துள்ளதாகக் கருதலாம். அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்துவதே ‘தலைமை செயலக’த்தின் பலவீனம்.
வழக்கமான தனது பாணியைத் துறந்துவிட்டு, வெப்சீரிஸ் ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் இப்படைப்பைத் தர முயற்சித்ததற்காக வசந்தபாலனுக்குத் தனிப்பட்ட முறையில் பாராட்டுகள்!
மற்றபடி விறுவிறுப்பாக நகரும் ஒரு வெப்சீரிஸை எதிர்நோக்குபவர்களுக்கு ‘தலைமை செயலகம்’ பல வகையில் திருப்தி தரும். இதில் இருக்கும் குறைகளைக் கேட்டறிந்து படைப்புக்குழுவினர் சரி செய்தால், இதன் அடுத்த பாகங்கள் நிச்சயம் ‘செழுமையானதாக’ இருக்கும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்