விரைவில் திரைக்கு வர இருக்கிற ‘இந்தியன்-2’ திரைப்படத்திற்கான விழா சென்னையில் நடந்தபோது சில சுவாரஸ்யங்கள்.
முதலில் ‘இந்தியன்’ படத்தின் கதையை என்னிடம் ஷங்கர் சொன்னபோது, நான் சிவாஜியோடு இன்னொரு படம் பண்ண ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் கதையும், ஷங்கர் சொன்னக் கதையும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது.
அதைப் பற்றி சிவாஜியிடம் சொன்னேன்.
“நம்ம படத்திலே நானும் நீயும் தானே அப்பா – மகனா நடிக்கப் போறோம். ஷங்கர் படத்திலே நீயே அப்பா – மகனா நடிக்கப் போறே.. அதுனாலே இதுக்கு ஒத்துக்கோ” என்று சொன்னதும் தான் ஷங்கரிடம் ‘இந்தியன்’ படத்திற்குச் சம்மதம் சொன்னேன் என்றொரு ஃபிளாஷ்பேக் –கிற்குப் போனார்.
இது சினிமா விழாவாக இருந்தாலும், நான் அரசியல் பேசாமல் இருக்க மாட்டேன் என்றவர், “நான் தமிழன், நான் இந்தியன். நீங்களும் அப்படித்தான். அதை வைத்து முக்கியமான ஒன்றைக் கேட்கிறேன். ஏன் தமிழன் பிரதமராக வரக்கூடாது?’’ என்று கேட்டதும் பரவலான கைதட்டல்.
விழா நிகழ்வைத் தொகுத்து வழங்கிய நடிகர் மிர்ச்சி சிவா, கமலுடன் ஒரு ஷெல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பிக் கேட்டபோது “எனக்கு ஷெல்ஃபி எடுத்துக்கொள்ளப் பொதுவாகப் பிடிக்காது’’ என்று சொன்னபடியே, சிவாவுக்கு ஷெல்ஃபி எடுக்கச் சம்மதித்ததும் – சிவா புன்னகையுடன் ஒரு ‘கிளிக்’.
“சினிமாவில் பல அவதாரம் போட்டிருக்கிறீர்களே.. நேரடியாக அப்படியொரு அவதாரத்துடன் மக்களைச் சந்தித்திருக்கிறீர்களா?’’ என்று மிர்ச்சி சிவா சிரித்தபடி கேட்டதும் கமல் சொன்னார்.
“இந்தியன் படப்பிடிப்பு அண்ணாசாலைக்கு அருகில் நடந்து கொண்டிருந்தபோது, அதில் வயதான வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு முடிந்ததும், அதே மேக்கப்-புடன் நடந்தே தேனாம்பேட்டைக்கு நடந்தே கிளம்பி விட்டேன். யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. போகிற வழயில் ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டுப் போனேன்”.
பெர்சனலாக ஒரு கேள்வி என்று, மிர்ச்சி சிவா “கமலுக்கும் தாத்தா தொடர்பு பற்றி”க் கேட்டபோது, “ஸ்ருதி மனது வைத்தால் நான் தாத்தா தான்’’ என்று கமல் சிரித்தபடியே சொல்ல – பார்வையாளர் வரிசையில் முன்னால் அமர்ந்திருந்த ஸ்ருதிக்கு ஒரே சிரிப்பு மயம்!
– லியோ
#இந்தியன்_2_பட_விழா #Indian_2_Audio_Launch #ஷங்கர் #Shankar #சிவாஜி #Sivaji #இந்தியன் #Indian #மிர்ச்சி_சிவா #Mirchi_Siva #கமல்ஹாசன் #Kamalhaasan #ஸ்ருதிஹாசன் #Shrutihaasan