சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஆக இருந்த அருண் சென்னையின் புதிய மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல சென்னை காவல் தலைமையகக் கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி மைய டிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், பதவி உயர்வு பெற்று டிஜிபியான பின்னர், சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் சந்தீப் ராய் ரத்தோர்.

கடந்த ஓராண்டாக சென்னை ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் செயல்பட்டு வந்த நிலையில், சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

1998 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அருண், பொறியியல் பட்டதாரி ஆவார்.  கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் எஸ்.பியாகவும் சென்னையில் துணை ஆணையராகவும் பணியாற்றி இருக்கிறார்.

2012-ம் ஆண்டு டிஐஜியாகவும், 2016-ம் ஆண்டு ஐஜியாகவும் பதவி உயர்வு பெற்ற அருண், முன்னதாக திருச்சி நகர காவல் ஆணையராக இரண்டு முறை பணியாற்றியிருக்கிறார்.

2022-ம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றிந்த நிலையில் தற்போது சென்னை மாநகரின் 110-வது காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுள்ளார்.

அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பணியிட மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

arun-appointed-as-new-commissionerபுதிய காவல் ஆணையர் ஏ.அருண் ஐபிஎஸ்
Comments (0)
Add Comment