ரேவதி தமிழ் சினிமா நடிகைகளின் வரையறை வார்ப்புகளுக்குள் சிக்காமல் தனக்கென பிரத்யேகங்களை வடிவமைத்துக் கொண்டு வளர்ந்த நாயகி.
எண்பதுகளில் இருந்த அனைத்து முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து, தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை ரேவதி, இந்தி, மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
கேரளாவின் கொச்சியில் பிறந்த ஆஷா கெலுன்னி (ரேவதி), தந்தையின் ராணுவப் பணியால் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வளரும் சூழல் ஏற்பட்டது. அந்த வகையில், ஏழாம் வகுப்பு படித்தபோது, சென்னையில் குடியேறினார்.
தந்தையின் பணிச் சூழல் காரணமாக, அம்மாவே தனி ஆளாக ரேவதியையும், அவரது தங்கையையும் வளர்த்திருக்கிறார். ஏதேனும் ஒரு கலையில் தேர்ச்சியடைந்தால், ஒழுக்கமும் உடன் வரும் என்ற அம்மாவின் போதனையே, நடனத்தின் மீதான ஈர்ப்பை ரேவதிக்கு ஏற்படுத்தியுள்ளது.
அதனால், டான்சராகவும், டாக்டராகவும் வேண்டும் என்கிற இரட்டைக் கனவுகளுடனேயே பயணப்பட்டு இருக்கிறார் ரேவதி. முதல் படம் தொடங்கி கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரங்களிலேயே அதிகமாக நடித்து வந்த ரேவதியின் நகைச்சுவை நடிப்புக்கு தீனி போடும் விதமாக அமைந்த படம் `அரங்கேற்ற வேளை’.
அரங்கேற்ற வேளை படத்தில் அவரது ‘மாஷா’ கதாபாத்திரம் காமெடியில் கலக்க, தன்னால் எல்லாவித பாத்திரங்களையும் ஏற்று சிறப்பாக நடிக்க முடியும் என பார்வையாளர்கள் மத்தியில் ரேவதி பெயரெடுத்தார்.
அதைப் போலவே, மாடர்ன் பெண்ணாக நடித்த ‘மகளிர் மட்டும்’, அம்மன் போன்ற தோற்றத்தில் நடித்த ‘கிழக்கு வாசல்’ எனப் பெரும் புகழுடன் வலம் வரத் தொடங்கினார் ரேவதி. அவரது, திரை வாழ்க்கையில், ‘அஞ்சலி’ படமும் மைல்கல்லாக அமைந்தது.
தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும் ஒருநாளைக்கு ஒரு கால்ஷீட், ஒரு ஷெட்யூல் முடிந்ததும் இரண்டு நாட்கள் பிரேக், பயணம், உடல்நலம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது எனச் சில விதிகளைத் தனது தாயாரின் விருப்பப்படி தொடர்ந்து கடைபிடித்து வந்தார் ரேவதி.
அதேபோல், கதை, கதாபாத்திரம், நடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘நோ கிளாமர்’ என்ற கொள்கையிலும் உறுதியாக இருந்தார்.
வெற்றி, தோல்விகள் குறித்து அலட்டிக் கொள்ளாத ரேவதி, தனது நடிப்பில் வெளியாகும் படங்களை, தானே திரையரங்கில் பார்த்து மதிப்பீடு செய்து, அடுத்தடுத்த படங்களில் தன் முந்தைய தவறுகளைச் சரிசெய்து கொள்வார்.
இதனால்தான், ‘உதய கீதம்’, ‘இதய தாமரை’, ‘மறுபடியும்’, ‘தேவர் மகன்’, ‘பிரியங்கா’ என ஏராளமான வெற்றிப் படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்பட்டன.
அழுத்தமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதைத் தனது பாணியாகக் கொண்டிருந்த ரேவதி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், 4 படங்களை இயக்கியும் இருக்கிறார்.
இப்போதும் இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரேவதி சினிமாவில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒருபோதும் முற்படாமல் இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரணுடன் நடித்த ப. பாண்டி, ஜோதிகாவுடன் நடித்த ஜேக்பாட் போன்ற படங்கள் ரேவதியின் வெரைட்டி நடிப்புத் திறன் குறையவில்லை என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.
இப்போதும், திரைப்படத் துறையை நோக்கி நகர்பவர்களுக்கு ரேவதி ரோல் மாடலாகவே திகழ்கிறார்.
– நன்றி: பிபிசி தமிழ்