பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்! தினமும் பல கனவுகளோடு சென்னைக்கு வருவோருக்கு – கை கொடுக்கவும், வேறு இடங்களுக்கு பயணிப்போருக்கு – கை காட்டவும் காத்திருந்தது!
1977ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி. அந்த பரப்பரப்பான சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சந்தோஷமும் கலக்கமுமாக கையில் புதிதாக வாங்கிய பெட்டியுடன் இனம் தெரியாத உணர்வுடன் உள்ளே நுழைந்தேன்!
எனக்கு மத்திய பொதுப்பணித்துறையில் (CPWD) இளநிலைப் பொறியாளர் பணி கிடைத்திருந்தது. நான் இந்தியத் தலைநகரம் புது தில்லிக்கு பயணம் செய்ய இருப்பதால், சந்தோஷமும் புரியாத புதிய இடத்திற்கு பணியில் சேர செல்லுகிறோமே என்ற கலக்கமும் கொண்டிருந்தேன்!
இந்தியாவின் பழமையான ரயில் தான் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (Grand Trunk Exp). ஜி.டி எக்ஸ்பிரஸ் என்பார்கள். 1930லிருந்து சென்னைக்கும் புது தில்லிக்குமாக (2190 கி.மீ) இரண்டு மார்க்கத்திலும் தினமும் நீட்டி நெளிந்து சென்றது ஜி.டி எக்ஸ்பிரஸ்!
சென்னையில் மாலை 4.00 மணிக்கு கிளம்பி மூன்றாம் நாள் காலை 7.50க்கு புது தில்லியை அடையும். ஏறத்தாழ 40 மணிநேர ரயில் பயணம்! தென்னிந்தியர்களின் அடையாளமாக, வேட்டி அணிந்தவர்களின் வாகனமாக ஜி.டி. எக்ஸ்பிரஸ் இருந்தது ஜி.டி. எக்ஸ்பிரசில் எனக்கு இரண்டாம் வகுப்பில் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது.
என்னை வழியனுப்ப சென்னை நண்பர்கள் இருவர் வந்திருந்தனர். ஒருவர் முரசொலி பத்திரிக்கையில் பணியாற்றிய கவிஞர் அறிவுமணி. மற்றொருவர் எனது அண்ணனின் நண்பர் ஓவியர் கணேசன்!
ஜி.டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டு ஊர்ந்தது. இருவரிடமிருந்தும் விடை பெற்றேன். எனக்கு ஜன்னல் ஓரத்து சீட் கிடைத்ததால் – பதவியை விட்டு விலக மறுக்கும் பொலிடிஸன் போல இடத்தை விட்டு நகராமலே பயணம் செய்தேன். இரவில் கடைசியாக படுக்கச் சென்றதும் காலையில் முதலாளாக எழுந்ததும் நான் தான்!
ரயில் ஆந்திராவைக் கடந்து மத்திய பிரதேசத்தில் நுழைந்ததிலிருந்து உள்ளேயும் வெளியேயும் மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. இந்தி மொழி எங்கும் நிரம்பிப் போனது.
புதிய அனுபவமாக டீயை குல்ஹட் (Kulhad) என்ற சிறிய மண் குடுவையில் பரிமாறியதை பார்த்தேன். மண்ணோடு தேநீரின் சுவையும் கலந்த ஒரு புதுவித பானம்.
உணவில் அரிசிச் சோற்றுடன் சப்பாத்தியும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. பம்பாய் தாலி (Bombay Thali) என்ற உணவு வண்டியிலேயே கிடைத்தது.
தமிழிலே ‘தாலி’ கழுத்திலே அணிவதும், அதுவே இந்தியிலே ‘தாலி’ உணவு தட்டாக காட்சி தருவதையும் முதன் முறையாக கண்டு வியந்தேன்!
பயணத்தில் கண் அசரும்போது கடந்த கால காட்சிகள் நிழலாக வந்தன. மத்திய பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளர் பணிக்கு 1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தேர்வு நடந்தது.
நானும் எனது கல்லூரித் தோழர்களும் தேர்வை எழுதினோம். ஏழு எட்டு மாதங்களாக எந்த ரிசல்ட்டும் தெரியவில்லை!
1977ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில் எனக்கு CPWD யிலிருந்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தபாலில் வந்தது (அப்போது எனக்கு 21 வயது). தலை கால் புரியாத மகிழ்ச்சி. போஸ்டிங் இடம் ஃபரிதாபாத் (Faridabad) என்று எழுதியிருந்தது. மாநிலம் குறிப்பிடப்படவில்லை!
அன்றைய காலகட்டத்தில் அது பிரபலமடையாத ஊர். யாருக்கும் அந்த ஊர் எங்கிருக்கென்றே தெரியவில்லை.
கல்லூரிப் பருவம் வரை நாங்கள் ரயில்வே காலனியில் குடியிருந்ததால் மதுரை ரயில் நிலையம் எனக்கு அத்துப்படி. நேராக மதுரை ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்ட்டரிடம் சென்றேன். எனது அப்பாயிண்ட்மெண்ட் கடிதத்தை அவரிடம் தந்தேன்.
ஃபரிதாபாத் எங்கே இருக்கிறது? என பரிதாபமாகக் கேட்டேன்!
மதுரை ஸ்டேசன் மாஸ்டர் தனது இருக்கையை விட்டு எழுந்து, இருக்கைக்கு பின்னால் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஆறடி நீள ரயில்வே மேப்பைப் பார்க்கச் சொல்லி, பெரிய ஸ்டூலையும் ஏற்பாடு செய்தார்.
“கட்டாயம் டெல்லிக்கு அருகே தான் இருக்கும்” என ஒரு யூகத்தில் அவர் சொன்னார்!
அதன்படி நேராக ஆக்ரா ஸ்டேசனில் கைவைத்து அப்படியே டெல்லி வழித் தடத்தில் மெதுவாக விரலை மேலே கொண்டு சென்றேன்.
புது தில்லிக்கு வெகு அருகாமையில் ஃபரிதாபாத் இருப்பதை முதல் முறையாகப் பார்த்தேன். அப்போது தான் எனக்கு வேலை டெல்லியில் கிடைத்திருக்கிறது என்ற உண்மையே விளங்கியது.
ஸ்டேசன் மாஸ்டர் அறிவுரைப்படியே இந்த ஜி.டி எக்ஸ்பிரஸ் வண்டியில் ரிசர்வ் செய்து பயணம். கண் விழித்துப் பார்த்தேன். ரயிலில் எல்லோரும் தூங்கிப் போனார்கள்!
ஜூன் மாதம் 28ம் தேதி அதிகாலை. ஏறத்தாழ 38 மணி நேரம் பயணித்தாகி விட்டது. ஜன்னலுக்கு வெளியே கண்ட காட்சிகள் புதுமையாக இருந்தன. அப்போது வண்டி ஹரியானாவில் பயணம் செய்தது. எந்தக் கட்டிடமும் வெளியே பூச்சு செய்யப்படாமல் செங்கல்கள் தெரியும்படியே இருந்தன!
ஜி.டி.எக்பிரஸ் புது தில்லியை நெருங்கியது. மாநகருக்குள் நுழைந்து விட்டோம் என்பதை திலக் பிரிட்ஜ் ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோதே உணர முடிந்தது.
வண்டியின் இடதுபக்கம் உச்சநீதிமன்றத்தின் மீது பறந்த தேசியக் கொடி சுப்ரீம் கோர்ட்டின் இருப்பிடத்தைக் காட்டியது.
அடுத்து வந்த மிண்டோ ரயில் நிலையம் டெல்லியின் பிரபலமான கன்னாட் பிளேசை (Connaught Place) அதன் பிரமாண்டத்தை தெரியச் செய்தது! அங்கு பிளாட்பாரம் கிடைப்பதற்காக வண்டி காத்திருந்தது!
ஜி.டி.எக்ஸ்பிரஸ் 40 மணி நேரப் பயணத்திற்குப் பின் ஜூன் 28ம் தேதி காலை 8.30க்கு புது தில்லி ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது! வாழ்நாளில் அவ்வளவு பெரிய ஸ்டேசனையும் அவ்வளவு பெரிய கூட்டத்தையும் முதல் முறைப் பார்த்தேன்!
எனது மூத்த அண்ணனின் நண்பரும் டெல்லியில் தமிழாசிரியராக பணியாற்றும் திரு. ராஜமாணிக்கம், எனது சட்டைப் பையில் சிவப்பு ரிப்பன் ஒன்றை அடையாளமாக மாட்டி வைத்திருந்ததால், என்னை கண்டுபிடித்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்!
திரு. ராஜமாணிக்கம் டெல்லியில் இருக்கும் ஆரம்பத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகவும் அவரது துணைவியார் திருமதி. மணியம்மை அவரும் அதே பள்ளியில் ஆசிரியையாகவும் இருந்தார்கள். இரண்டு சிறு குழந்தைகள். கரோல் பாக் (Karol Bagh) பகுதியில் ரெகார்புராவில் மாடியில் ஒரு சிறிய வீடு!
திரு. ராஜமாணிக்கமும் நானும் அன்று மாலையே ஃபரிதாபாத்துக்கு சென்று CPWD அலுவலக இடத்தைப் பார்த்து வர முடிவு செய்து, கிளம்பினோம்.
டெல்லியில் முதல் முறையாக மாநகரப் பஸ்ஸில் பயணம். ஏறுவதற்கு முன்பே ச்சலோ.. ச்சலோ.. எனக் கூட்டம் நெருக்கி உள்ளே தள்ளியது. நடத்துனர் உட்கார்ந்த இடத்திலிருந்தே தலைக்கு மேலேயிருந்த கயிறை இழுத்து மணி அடித்து பஸ்ஸை நடத்தினார்!
கரோல் பாக் பஸ் ஸ்டாப்பில் ஏறி – ஆரிய சமாஜ் ரோடு – பகார்டு கஞ்ஜ் – ஷீலா தியேட்டர் – புது தில்லி ரயில் நிலையம் – அஜ்மீரி கேட் – டெல்லி கேட் – ஃபெரோஷா கோட்லா – ஐடிஓ – டிடிஏ ரிங் ரோடு வரை பயணித்து கீழே இறங்கினோம். ஏறத்தாழ ஒரு மணிநேரப் பயணம்.
ஃபரிதாபாத் டெல்லியிலிருந்து 28 கி.மீ தூரத்தில் இருந்தாலும் அது ஹரியானா மாநிலத்தில் உள்ளதால், வெளியூர் செல்லும் ஹரியானா மாநிலப் பேருந்துக்காக காத்திருந்தோம்!
பழைய வண்டியாகவும், மிக வேகமாக பறந்து வந்த வண்டியாகவும், கட்டுக்கடங்காத கூட்டத்துடன் வந்த ஃபரிதாபாத் வண்டியில் அடித்துப் பிடித்து ஏறி விட்டோம் இருவரும்.
டெல்லி வந்திறங்கிய முதல் நாளே இந்த பஸ் அனுபவத்தில் கசங்கிப் போனேன்! கலங்கிப் போனேன்!
ஓல்டு ஃபரிதாபாத் (Old Faridabad) வந்திறங்கினோம். அலுவலக இடத்தைக் கண்டுபிடித்தோம்.
அந்த CPWD அலுவலகம் ஒரு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் (Superintending Engineer office) தனியான பங்களா ஒன்றில் இருந்தது. அருகிலேயே நிர்வாகப் பொறியாளர் (Executive Engineer) அலுவலகம் அமைந்துள்ள பங்களா.
அப்போது இரவு துவங்கி விட்டது. இனி நாளை இங்கு வந்து பணியில் சேர வேண்டும்! இருவரும் புது தில்லிக்கு திரும்பினோம்!
மறுநாள் ஜூன் 29ம் தேதி காலை, எனது அலுவலக வாழ்க்கையின் முதல் நாள் என்பதால், சீக்கிரமாக எழுந்து தயாராகி, சாப்பிட்டு, ஃபைலில் சர்ட்டிபிகேட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கரோல் பாக் பஸ் நிறுத்தத்திற்கு 9.00 மணிக்கு சென்றேன். ஆபீஸ் நேரம் என்பதால் பஸ்களில் பயங்கரமான கூட்டம்!
டெல்லி மாநகர பஸ்ஸில் முன்பகுதியில் இந்தியில் போர்டும் பின்பகுதியில் ஆங்கில போர்டும் வைத்திருந்தார்கள். பஸ் வந்து நின்ற பின்னர் ஓடிப்போய் பின்னால் பார்த்தால்தான் எங்கே பஸ் போகிறது எனத் தெரியும்!
பஸ்ஸின் அபரிதமான கூட்டத்தின் காரணமாக என்னால் எந்த பஸ்ஸிலும் ஏற முடியவில்லை. மணியோ 10க்கும் மேலாகி விட்டது. என்ன செய்வது என்று யோசித்தேன். முதல் நாள் பயணம் செய்த வழித்தடம் மனதில் பதிந்திருந்தது!
உடனே சரி என்று தீர்மானித்து, நடக்க ஆரம்பித்தேன்! இது நடக்குமா என்று கூட எண்ணாமல் பஸ் பயணித்த பாதையிலேயே நடக்க ஆரம்பித்தேன். பகார் கஞ்ஜ், புது தில்லி ரயில் நிலைய மேம்பாலம், டெல்லி கேட் அப்படியே தொடர்ந்து ஐடிஓ அலுவலக வளாகம் கடந்து, வெளியூருக்குச் செல்லும் பஸ் நிறுத்தத்திற்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தேன்! அப்போது மணி மதியம் 1.00 ஆகிவிட்டது!
ஹரியானா மாநில போக்குவரத்து பஸ் சிறிது நேரத்தில் கிடைத்தது. வழியெங்கும் வேறு எந்த பசியும், வலியும், சோர்வும் தெரியவில்லை. முதல் நாள் அலுவலக அனுபவம் எப்படி இருக்குமோ என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. பஸ் நான் இறங்க வேண்டிய ஓல்டு ஃபரிதாபாத் நிலையத்தில் வந்து நின்றது!
நேற்றே அலுவலகம் இருந்த இடத்தைப் பார்த்து வந்ததால் சரியாக அலுவலகத்தை அடைந்தேன். உள்ளே நுழையும் போது மதியம் மணி 2.30 ஆகிவிட்டது! முதல் நாளிலேயே லேட் ஆகிவிட்டதே என்ற தயக்கம் கூடியது!
அலுவலகம் ஒரு பங்களாவுக்குள் இருந்ததால் பல அறைகளை கொண்டதாகவும் ஊழியர்கள் தனித்தனி ரூமில் இருப்பதாகவும் அமைந்திருந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் நான் புதிதாக வேலையில் சேர வந்துள்ளதை சொன்னேன். அவரோ ஆபிஸ் சூப்பிரண்டெண்ட்டை சந்திக்கச் சொன்னார்!
ஆபிஸ் சூப்பிரண்டெண்ட் ஒரு தமிழர்! கே.முருகேசன் – என அவர் முன்னதாக வைத்துள்ள பெயர் பலகையில் அறிந்தேன். அவரோ தன்னை ஒரு தமிழனாக காட்டிக்கொள்ளக் கூடாது என வைராக்கியமாக ஆங்கிலத்திலேயே என்னோடு உரையாடினார். எனது சர்ட்டிபிகேட்களை வாங்கிப் பார்த்தார். எல்லாம் திருப்தியாக இருந்ததால் என்னை கண்காணிப்பு பொறியாளர் அறைக்கு கூட்டிச் சென்றார்!
கண்காணிப்பு பொறியாளர் (Superintending Engineer) Er. J.S. Bawa. புன்னகையோடு வரவேற்றார். அரைக்கைச் சட்டை அணிந்த, அன்பான முகத்தோடு பேசிய ஒரு நல்ல சர்தார்ஜியைப் பார்த்த பின்புதான் எனது மனக் கலவரம் அடங்கியது.
மிகப் பொறுமையாக என்னைப் பற்றி விசாரித்தார். எங்கள் குடும்பத்தைப் பற்றி, எனது பயணத்தைப் பற்றி இப்படி மறக்க முடியாத உரையாடல்களுடன் இருந்தது எனது முதல் சந்திப்பு.
நான் வட இந்தியாவுக்கே புதிது என்பதாலும், இந்தி மொழியை அறியாதாலும் என்னை வேறு மாநிலத்திற்கு மாற்றாமல் அங்கேயே பக்கத்திலிருந்த நிர்வாகப் பொறியாளர் (Executive Engineer) அலுவலகத்திலேயே பிளானிங் (Planning section) பிரிவில் நியமித்து ஆர்டர் தந்தார்! முதல் முறையாக நிம்மதி மூச்சு விட்டேன்!
பக்கத்து பங்களாவில் ஒரு நிர்வாகப் பொறியாளர்; நான்கு உதவிப் பொறியாளர்கள்; 15 இளநிலைப் பொறியாளர்கள்; 8 வரைவாளர்கள் என அது ஒரு பெரிய அலுவலகம். EE ஒரு சாதுவான சர்தார் Er.ஜஸ்வந்த் சிங். மிக குறைவாகவே பேசினார். கனிவாகப் பேசினார்.
பின்பு அவர் என்னை உதவிப் பொறியாளர் எஸ்.கே.கோயலிடம் இளநிலைப் பொறியாளராக பணியாற்ற உத்தரவிட்டார்.
Er. கோயலுக்கோ ஆங்கிலம் பேச வராது. எனக்கோ தோடா.. தோடா.. இந்தி மாலும் ரகம்! நல்ல காம்பினேஷன். அவரையும் சந்தித்து விட்டு என் இனத்தைச் சேர்ந்த 15 இளநிலைப் பொறியாளர்கள் கூடும் கூடத்திற்கு ஆர்வத்தோடு சென்றேன்!
அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளர்கள் (Junior Engineer) 12 ஆண்டுகள் முதல் ஓர் ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் வேலை பார்த்து வந்தார்கள். கூடத்தில் நான் நடுவில் உட்கார வைக்கப்பட்டேன்! சுற்றியும் அவர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விக்கு மேலே கேள்வியாக துளைத்தார்கள்.
“உனக்கு இந்தி தெரியுமா?, இந்தி தெரியாமல் ஏன் இங்கு வந்தாய்?, ஏன் நீங்கள் இந்தியை வெறுக்குகிறீர்கள்?, நீ இனி இந்தி கற்றுக் கொள்வாயா? எத்தனை மாதங்களில்?” – இப்படியெல்லாம் ஆளுக்கொரு கேள்விக் கணைகள்!
எனது கல்லூரி நாட்களில் கூட நான் இப்படி ஒரு ‘ராகிங்’யை அனுபவித்தது கிடையாது.
எனது பொறுமையை சோதித்த தருணம். “உங்களை மதராஸி என்று சொன்னால் கோபம் ஏன் வருகிறது?” என்ற கேள்விக்கு நிஜமான கோபம் என்னிடமிருந்து வெடித்தது! அது அவர்களை அமைதிப்படுத்தியது! என்னை அழ வைத்தது! அத்தோடு ராகிங் நின்று விட்டது.
அந்த அமைதிக்குப் பின்னே எல்லோரும் என்னை அணைத்து வரவேற்றார்கள்.
குர்மீத் சிங்; ஹர்பஜன் சிங் அரோரா; எஸ்.கே. பாட்டியா; கே.கே. குமார்; அசோக் பஜாஜ்; ரமேஷ் சைனி; ரவிகுமார் சர்மா இவர்களோடு தமிழகத்தை சேர்ந்த ஆர்.எஸ்.பானுகுமார் மற்றும் முரளிதரன் என பலர்!
இவர்களில் இன்றும் என்னோடு தொடர்பில் இருக்கிறார் டெல்லியில் வசிக்கும் ஹர்பஜன் சிங் அரோரா (Harbhajan Singh Arora). அன்று எனது முதல் நாள் அலுவலக வேலை முடிந்து, நண்பர்களுடனே மாலையில் டெல்லிக்கு திரும்பினேன்!
இன்னும் எத்தனை மாதங்களில் இந்தியை கற்றுக் கொள்வாய்? என்ற கேள்விக்கு செயலால் செய்து காட்ட வேண்டும் என்று – டெல்லியில் உள்ள இந்தி அமைப்பின் தபால் மூலம் கற்பிக்கும் உதவியோடு, ஓராண்டிலேயே இந்தியை எழுதப் படிக்க பேசக் கற்றுக் கொண்டேன்.
பின்னர், அலுவலக நிகழ்ச்சிகளில் மேடையேறி இந்தியிலேயே பேசுகின்ற அளவுக்கு ஆற்றல் பெற்றேன்!
என்னை ராகிங் செய்த வட இந்திய நண்பர்களே அன்பாக ‘நேதாஜி’ என அழைக்க ஆரம்பித்தார்கள்! அவர்களோடு நெருக்கமாகப் பழகினேன்! அந்த அலுவலகத்திலேயே ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன்!
47 ஆண்டுகள் ஆன பின்னும் எனது முதல் நாள் அனுபவத்தை எப்போது அசைபோடும் போதும், ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வுகளை நினைவுகளாக இங்கே பதிவிட்டேன்!
ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்திலும் இதுபோன்ற பல முக்கிய தருணங்கள் வந்து சென்றிருக்கும்!
நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு இது தானே சாதனை?
இந்த சாதனை சாமான்யமானதா? என்ற கேள்விகள் அடிக்கடி எழுந்தாலும் அதைக் கடந்து – பயணிப்பதே வாழ்க்கை என தொடர்ந்து பயணிக்கிறேன்!
Miles to go before I sleep.
– Robert Frost
– தோழமையுடன் பொ. நாகராஜன்.