கில் – ‘ரத்தக்களரி’யான ஒரு படம்!

ஆக்ஷன் படங்களில் பல வகை உண்டு. அவற்றில் கோரமான, கொடூரமான தாக்குதல்களைக் கொண்ட படங்கள் தனி வகைமையில் வரும். அக்காட்சிகள் வழக்கமான ஹாரர், சைக்கோ த்ரில்லர் படங்களைக் காட்டிலும் பயங்கரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களுக்கென்று தனி ரசிக ‘வட்டம்’ உண்டு. அவர்களைத் திருப்திப்படுத்தும்விதமாக, இந்தியில் தற்போது வெளியாகியிருக்கிறது ‘கில்’. ’ரத்தக்களரியா ஒரு படம்’ எனும்படியாக இதன் உள்ளடக்கம் அமைந்துள்ளதைக் காட்டியது இதன் ட்ரெய்லர்.

நிகில் நாகேஷ் பட் இயக்கியுள்ள இந்தப் படத்தில் லக்ஷ்யா, தான்யா மாணிக்தலா, ஹர்ஷ் சாயா, அபிஷேக் சௌகான் உள்ளிட்டவர்களோடு ஆசிஷ் வித்யார்த்தி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?

‘கொலவெறி’ ஊட்டும் காட்சிகள்!

அம்ரித் ரத்தோட் (லக்ஷ்யா), துலிகா சிங் (தான்யா மாணிக்தலா) இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிக்கின்றனர். பல்தேவ் சிங் தாக்கூர் (ஹர்ஷ் சாயா) எனும் செல்வாக்குமிக்க ஒரு பணக்காரரின் மகள் துலிகா. தேசிய பாதுகாப்புப் படையில் கமாண்டோ ஆக இருக்கிறார் அம்ரித்.

தந்தை தனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் அம்ரித்திடம் சொல்கிறார் துலிகா. அதனால், எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் அவர் நிச்சயதார்த்த விழா நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார்.

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, துலிகாவின் தந்தை உற்சாகத்தில் இருக்கிறார். அப்போது துலிகாவைச் சந்திக்கிறார் அம்ரித். தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறார். ஆனால், இப்போது கிளம்பினால் தந்தை மற்றும் உறவினர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று கூறி மறுக்கிறார் துலிகா. அது மட்டுமல்லாமல், ’நமது காதல் வாழ்வதற்காகவே, சாவதற்கு அல்ல’ என்கிறார்.

அதற்கடுத்த நாள் டெல்லி செல்லும் ரயிலில் குடும்பத்தினரோடு பயணிக்கிறார் துலிகா. அந்த ரயிலில், அவர்கள் இருக்கும் ஏசி பெட்டிக்கு அடுத்த பெட்டியில் அம்ரித் தனது நண்பர் விராத் சத்வால் (அபிஷேக் சௌகான்) உடன் இருக்கிறார்.

வழியில் ஒரு கொள்ளை கும்பல் அந்த ரயிலில் ஏறுகிறது. ஏசி பெட்டியில் இருக்கும் பயணிகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி, அவர்களைத் தாக்கி நகை, பணத்தைப் பிடுங்குகிறது. அந்த நிலையில் துலிகாவைப் பார்க்கச் செல்கிறார் அம்ரித்.

அப்போது துலிகாவின் தந்தை கொள்ளையர்களில் ஒருவரைக் கொன்றுவிடுகிறார். அதற்குப் பழிவாங்கும்விதமாக, அவரது குடும்பத்தினரைப் பணயக்கைதிகளாகப் பிடிக்கிறார் அக்கும்பலின் தலைவன் ஃபனி (ராகவ் ஜுயால்). பல்தேவை மிரட்டிப் பெருமளவில் பணம் கறக்கலாம் என்பது அவரது திட்டம். ஆனால், அவர் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை.

ஒருபக்கம் துலிகா தனது தந்தை பல்தேவோடு வேறொரு பெட்டியில் இருக்கிறார். கழிவறைக்குச் சென்ற அவரது தங்கை அஹானா, இரண்டு பெட்டிகள் தள்ளி இன்னொரு இடத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் கொள்ளையர்களைத் தேடிச் சென்று விராத்தும் அம்ரித்தும் தாக்குகின்றனர்.

ஒருகட்டத்தில் நிலைமை கைமீறீப் போவதை எண்ணி கடுப்பாகிறார் ஃபனி. அந்த நேரத்தில் அவரது கண்ணில் படுகிறார் துலிகா. அவரை இழுத்துச் செல்ல முற்படுகிறார். பதிலுக்குத் தன் கையில் இருக்கும் கத்தியால் துலிகா ஃபனியைத் தாக்குகிறார். உடனே, அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்துகிறார் ஃபனி. அந்தக் கணமே நிலை குலைந்து சரிகிறார் துலிகா. அதனைக் காணும் அம்ரித், எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறார். கொள்ளையர்கள் தாக்கியதில் அவர் உருக்குலைந்திருக்கிறார்.

அம்ரித்தின் கண் முன்னே துலிகாவின் உயிரற்ற உடலை ரயிலில் இருந்து கீழே தள்ளுகிறார் ஃபனி. எதிரே வரும் ரயில் மோதியதில் அந்த உடல் சுக்குநூறாகிறது.

அவ்வளவுதான். அந்தக் கணத்தில் இருந்து அம்ரித்தின் மூளையில் ‘கொலைவெறி’ பீறிடத் தொடங்குகிறது. அது அடங்கி முடிவதற்குள் அந்த ரயிலில் ஏறிய அத்தனை கொள்ளையர்களும் கொடூரமாகச் சாகின்றனர்.

இதுவே இப்படத்தின் கதை. முழுதாகக் கதையைச் சொன்னால் கூட, இந்தப் படத்தை ரசிகர்களால் கண்டு களிக்க முடியும். காரணம், படத்தின் காட்சியாக்கம் அப்படியொரு ‘லெவலில்’ இருக்கிறது.

உடலின் பல்வேறு பாகங்களைச் சிதைத்து, அந்த நபர்களை வதைத்து, நாயகன் அவர்களைக் கொலை செய்யும் காட்சிகளே இப்படத்தின் பின்பாதியில் நிறைந்திருக்கின்றன. அதனால், அப்பாத்திரம் கொலைவெறி கொள்ளும் வகையில் முன்பாதிக் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் நிகில் நாகேஷ் பட்.

என்னவொரு காட்சியாக்கம்!

ஒரு ‘பீல்குட்’ ரொமான்ஸ் படத்தில் அறிமுகமாவதற்குத் தேவையான அத்தனை லட்சணங்களோடும் தென்படுகிறார் நாயகன் லக்ஷ்யா. படத்தில் நாயக பாத்திரத்தின் காதலே ஆதாரம் என்றபோதும், அதனை மறைத்திடும் அளவுக்கு ’ஆக்ஷன் காட்சிகள்’ நிறைய இருக்கின்றன. அவற்றில் மிகப்பாந்தமாக பொருந்தி நிற்கிறார் லக்ஷ்யா.

நாயகி தான்யா மாணிக்தலா அழகும் நடிப்புத்திறமையும் மிக்கவராகத் திரையில் மிளிர்கிறார். ‘அவ்வளவுதானா இவருக்கான இடம்’ என்று ரசிகர்கள் வருந்தும் அளவுக்கு அமைந்திருக்கிறது அவரது திரை இருப்பு.

இந்தப் படத்தில் வில்லனாக ராகவ் ஜுயால் வருகிறார். அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்புமே இப்படத்தின் ப்ளஸ். ரசிகர்களைத் திரையோடு ஒன்றச் செய்வதில் அவரது பாத்திரம் முக்கியப் பங்காற்றுகிறது.

இதில் அவரது தந்தையாக நடித்துள்ளார் ஆசிஷ் வித்யார்த்தி. அவர் வசனம் பேசுமிடங்களே நம்மைச் சண்டைக்காட்சிகள் மூட்டிய சூட்டில் இருந்து நம்மைச் சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்துகின்றன.

இவர்கள் தவிர்த்து நாயகனின் நண்பராக வரும் அபிஷேக் சௌகான் உட்படத் திரையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து போகின்றனர். நாயகன் ரயிலில் சந்திக்கும் இளைஞர்கள், அவர்களது உறவினர்கள், இதர பயணிகள், கொள்ளையர்கள், ரயில்வே அதிகாரிகள், போலீசார் என்று பலரும் இதில் அடக்கம்.

இயக்குனர் நிகில் நாகேஷ் பட், ஒரு வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி சண்டைக்காட்சிகளால் நிறைந்துள்ளது.

தொடக்கத்தில் வரும் நான்கைந்து காட்சிகள் தவிர்த்து, திரைக்கதையின் பெரும்பகுதி ரயில் பயணத்தையே மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தேவையற்ற விவரிப்புகள், கதையோடு ஒன்றுவதற்கான கால அவகாசம் என்று துருத்தல்கள் ஏதும் இப்படத்தில் இல்லை. அதேநேரத்தில் கதாபாத்திரங்களை அடுத்தடுத்து திரையில் காட்டுவதிலும், திரைக்கதை முடிச்சுக்கான இடத்தைச் சரியாக வடிமைப்பதிலும் இயக்குனர் காட்டிய நேர்த்தி நம்மை வியக்க வைக்கிறது.

போலவே, ஒரு திரைக்கதையில் இவர் சாக மாட்டார், அவர் பிழைத்துக் கொள்வார் என்று நாம் சில ‘க்ளிஷே’க்களை எதிர்பார்ப்போம். பல படங்களின் திரைக்கதைகளில் அது அச்சுப்பிசகாமல் பின்பற்றப்படுவதையும் கண்டிருப்போம். ஆனால், ‘கில்’ நமக்கு அப்படியொரு அனுபவத்தைத் தருவதில்லை.

வழக்கமாக, இப்படிப்பட்ட கதைகளில் நாயகனின் மனோபாவம் நம்மையும் தொற்றுவதாகத் திரைக்கதை இருக்க வேண்டும். இதில் முன்பாதி காட்சிகள் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன. அதனால், சண்டைக்காட்சிகளில் இருக்கும் வன்முறை அந்நியமாகப் படுவதில்லை. அது நிகழாதபோது, மொத்தப்படமுமே அபத்தமாகவும், அருவெருப்பானதாகவும் தென்படும். இயக்குனரின் திரைக்கதைக்கு ஆயிஷா சையத் வசனம் எழுதியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரஃபி மெஹ்மூத், படம் முழுக்க ஓடும் ரயிலுக்கும் நிகழும் சண்டைக்காட்சிகள் என்பதை உணரும் வகையிலான உழைப்பைத் திரையில் கொட்டியிருக்கிறார்.

அதற்கேற்ற உள்ளடக்கத்தை பிரேம்களில் ஏற்படுத்தி தந்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் மயூர் சர்மா.

சண்டைப்பயிற்சியாளர்கள் சி யோங் ஓ, பர்வேஸ் ஷெய்க் இப்படத்தின் ஆக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

படத்தொகுப்பாளர் சிவகுமார் பணிக்கர் சண்டைக்காட்சிகளுக்கான ஷாட்கள் கண்ணிமைக்கும் நேரமே திரையில் ஓடும் வகையில் ‘கட்’ செய்திருக்கிறார். அதன் வழியே பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் பிராஸ்தடிக் ஒப்பனையைக் கையாண்டவர்கள், விஎஃப்எக்ஸ் நுட்பத்தில் செயலாற்றியவர்கள், ஒலி வடிவமைப்புக்கு உதவியவர்கள் என்று பலரது ஒத்துழைப்பு சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அதனை ஒரு படி மேலேற்றுவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் சாஸ்வத் சச்தேவ். பரபரப்பு, வேட்கை, வேதனையை மட்டுமல்லாமல் நாயகியின் ஆழமான காதலையும் நாம் உணரத் தன் இசைக்குறிப்புகளைத் தந்திருக்கிறார்.

இயக்குனர் நிகில் நாகேஷ் பட் ‘கில்’ படத்தின் வழியே புதுமையானதொரு காட்சியனுபவத்தைத் தந்திருக்கிறார். ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளில் கூட இதுமாதிரியான திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் வெகு அரிதாகவே வெளிவரும். அவ்வாறு வெளியாகும்போது ஆக்ஷன் பட ரசிகர்களின் ஆரவாரத்தை அள்ளிக்கொள்ளும்.

அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது ‘கில்’. உலகம் முழுக்க இது மாதிரியான வகைமை படங்களை ரசிப்பவர்களை இப்படம் நிச்சயமாகத் திருப்திப்படுத்தும்.

அதேநேரத்தில், ‘ஜாலியா ஒரு படம் பார்த்துட்டு ஹேப்பியா வீட்டுக்கு கிளம்புனோம்’ எனும்படியாக தியேட்டரில் இருந்து நகர விருப்பப்படுபவர்களுக்கு இது நிச்சயம் வேதனை உள்ளிட்ட இன்ன பிறவற்றைத் தரும்.

சுருக்கமாகச் சொன்னால், 2கே கிட்ஸ்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். அதனால், இது வெற்றிப்படமாகக் கொண்டாடப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

#நிகில்_நாகேஷ்_பட் #லக்ஷ்யா #தான்யா_மாணிக்தலா #ஹர்ஷ்_சாயா #அபிஷேக்_சௌகான் #ஆசிஷ்_வித்யார்த்தி #Nikhil_Nagesh_Bhatt #Lakshya #Tanya_Maniktala #Harsh_Chaya #Abhishek_Chauhan #Ashish_Vidyarthi #கில்_விமர்சனம் #KILL_Hindi_Movie_review

KILL Hindi Movie reviewNikhil Nagesh BhattTanya Maniktalaகில் விமர்சனம்நிகில் நாகேஷ் பட்லக்ஷ்யா
Comments (0)
Add Comment