வரலாற்றுப் பக்கங்களில் அதிக ரத்தக் கறைகளும் ஆறாத ரத்தக் காயங்களும் நிறைந்து காணப்படும் பகுதி – இரண்டாம் உலகப் போர்!
அந்தக் கறைகளும் காயங்களும் போரினால் மட்டுமல்ல, போருக்கு அவசியமான வழித்தடம் அமைக்கும் போதும் ஏற்பட்டது என்ற ஒரு அறியப்படாத வரலாற்றைச் சொல்லவே இந்தப் பதிவு!
இரண்டாம் உலகப் போர் (1939-45) உச்சத்தில் நடந்து கொண்டிருந்த காலம். ஹிட்லரும் முசோலினியும் ஐரோப்பாவை அலறச் செய்தார்கள். ஆசியப் பகுதியிலோ ஜப்பானின் அட்டூழியம் அரங்கேறியது.
ஜப்பான் 1942ல் இந்தியாவின் அந்தமான் தீவுகளைப் பிடித்துவிட்டது. பர்மா அவர்கள் கையில். சீனாவையும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். புகழ்பெற்ற பர்மா ரோடு அவர்களின் கட்டுக்குள்ளானது!
ஜப்பான் பர்மா ரோட்டை தன் வசம் வைத்திருந்ததால், அமெரிக்கா தனது ராணுவத் தளவாடங்களை சீனாவுக்கு கொண்டு செல்ல இயலாமல் போனது!
அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கு இது ஒரு பெரும் சவாலாக இருந்தது! அதற்கு மாற்று யோசனையை அமெரிக்கா கண்டுபிடித்தது!
அமெரிக்காவின் ராணுவ ஜெனரல் ஜோசப் வாரன் ஸ்டில்வெல் (Gen. Joseph Warren Stilwell) அமெரிக்கப் படை வீரர்களைக் கொண்டு இந்தியாவிலிருந்து புதிதாக ஒரு பாதையை பர்மா வழியாக சீனாவுக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டார்!
அதன்படி, அஸ்ஸாமின் லெடோ(Ledo)விலிருந்து லேகாபானி வழியாக அருணாச்சலத்தின் ஜெய்ராம்பூர் கடந்து, நாம்பாங்க் பின்னர் பங்க்சா கணவாய் (Pangsau Pass) வரை இந்தியாவில் 61 கி.மீ தூரமும்,
பின்பு பர்மாவின் மலை முடிச்சுகளின் மீதும் மலையை குடைந்தும் பர்மா ரோட்டை இணைத்து பர்மாவில் 1033 கி.மீ தூரமும்
அதன் பின்னர் சீனாவில் 632 கி.மீ நீளத்திற்கு பாதை அமைத்து சீனாவின் குன்மிங் (Kun Ming) நகரத்தை அடைய மொத்தம் 1726 கி.மீ நீளத்திற்கான சாலை அமைக்கும் பணியை 1942ம் ஆண்டு இறுதியில் துவக்கினார்கள்!
சாலை அமைக்கும் பணியில் அமெரிக்க படை வீரர்கள் 15,000 பேர்களும், இந்திய – பர்மிய – சீனத் தொழிலாளர்கள் 35,000 பேர்களும் இணைந்து ‘நடத்தவே முடியாது’ என முடிவாக சொல்லப்பட்ட ஒன்றை நடத்திக் காட்டினார்கள்! அதற்கான மிகப்பெரிய விலையையும் தந்தார்கள்.
அமெரிக்க வீரர்கள் 1,100 பேர்கள் மாண்டு போன கணக்கையும் அவர்களைப் புதைக்கப்பட்ட இடங்களையும் காண முடிகின்றது. ஆனால், தொழிலாளர்களின் மரணத்திற்கு ஒரு கணக்கும் இல்லை. அவர்கள் அனுபவித்த கொடுமையான துயரங்களுக்கு எந்த வழக்கும் இல்லை!
உலகின் பிரபலமான லைப் (LIFE) இதழில் இந்த துயரங்களெல்லாம் சொல்லப்பட்டுள்ளதாம்!
அடர்ந்த காட்டின் கொசுக்களால் மலேரியாவில் மாண்டவர்கள்; வயிற்றுப் போக்காலும் டைபாய்டாலும் உயிரிலிந்தவர்கள்: கொடிய நச்சுப் பாம்புகள் தீண்டி இறந்தவர்கள்; மண் சரிவினால் மரணமடைந்தவர்கள்; பட்டினியால் செத்துப் போனவர்கள்….இப்படி மனித உயிரின் தியாகத்தால் அந்த நீண்ட சாலை உருவாக்கப்பட்டது!
இந்த சாலை அமைப்பதற்கு அன்றைய அமெரிக்க மதிப்பில் 150 மில்லியன் டாலர்கள் செலவானதாம். 1942ம் ஆண்டு இறுதியில் துவங்கிய பணி 1945ம் ஆண்டு மே மாதம் நிறைவு பெற்றது.
இதன் வெற்றி காரணமாக இந்த சாலைக்கு, அமெரிக்க ஜெனரலின் பெயரை – ஸ்டில்வெல் ரோடு (Stilwell Road) என சூட்டினார் சீனத் தளபதி ஷியாங் கே ஷேக்!
தற்போது இந்தியப் பகுதியில் உள்ள 61 கி.மீ சாலை சிறப்பாக பராமரிக்கப்பட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ளது. பர்மா இந்தப் பாதையை மூடி விட்டதாம்! வேறு எந்த தகவலும் இல்லை !
அறியப்படாத இந்த வரலாற்றை 2018ம் ஆண்டு நவம்பரில் அஸ்ஸாம் – அருணாச்சல் பகுதிகளுக்கு பயணம் செய்தபோது முதன் முறையாக அறிந்துகொள்ள முடிந்தது. அப்போது தான் எனது அறியாமை என்னைப் பார்த்து கேலி செய்தது!
இவ்வளவு முக்கியமான வரலாற்று நிகழ்வு, எந்த நூலிலும் எந்த உரையாடலிலும் வெளி வராமல் இருந்ததே என்று வருந்தினேன்!
அஸ்ஸாமின் லெடோவிலிருந்து ஸ்டில்வெல் ரோட்டிலேயே காரில் பங்க்சா பாஸ் வரை என் நண்பன் நாகராஜனுடன் (Pramanayagam Nagarajan) பயணிக்க திட்டமிட்டோம்!
நானும் நண்பரும் அஸ்ஸாமின் லெடோ ஊரின் ஜீரோ பாயிண்ட் (Zero Point) என்ற இடத்திலிருந்து முதலில் லேக்காபானி பின்னர் அருணாச்சலப் பிரதேசத்தின் ஜெய்ராம் பூர் பின்னர் அதன் அருகேயிருந்த அமெரிக்க படை வீரர்களின் கல்லறை வளாகம், பின்பு நாம்பாங்க் அடைந்து, இறுதியாக பாங்க்சா பாஸ் (Pangsau Pass) செக்போஸ்ட் வரை பயணம் செய்தோம்.
அங்கிருந்து 12 கி.மீ தூரத்தில் கணவாய் துவங்கும் இடத்தில் மியான்மார் (பர்மா) படைகள் உள்ளதால் இந்திய பாதுகாப்பு படை எங்களுக்கு அனுமதி தரவில்லை!
வரலாற்றில் இது போன்று எத்தனையோ பாராட்டப்படாத வீரர்களின் (Unsung heroes) கதைகள் புதைந்து கிடக்கின்றன. அவைகளை பொது வெளியில் பரவவிட்டால் தான் இனி புதிய சாதனை படைப்போருக்கு ஊக்கமாகவும் உரமாகவும் இருக்கும்! அந்த முயற்சியில் இது ஒரு சதவீதமாவது பயன் தரும் என நம்புகிறேன்!
– பொ. நாகராஜன்