யேசுநாதர் படத்தில் நடிக்காததற்கு எம்ஜிஆர் சொன்ன காரணம்!

எம்.ஜி.ஆரின் பர்சனல் மேக்கப் மேனாக கடைசி வரை அவருடனேயே இருந்த பீதாம்பரம் அவர்களின் மகன் டைரக்டர் பி.வாசு, தன் தந்தைக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்து விளக்கமளிக்கிறார்.

‘‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ திரையில் எத்தனையோ கேரக்டர்கள் செய்திருக்கிறார். விதவிதமான மேக்கப் போட்டிருக்கிறார். அவற்றில் என்றென்றும் என் நினைவில் நிற்கும் ஒரு மேக்கப் பற்றி இப்போது சொல்கிறேன்.

ஆனால் அந்தப் திரைப்படம் ஸ்டில்ஸ் எடுத்ததோடு நின்று போனது. அப்பா தலைவருக்கு போட்ட மேக்கப்பிலேயே என்னால் என்றைக்கும் மறக்க முடியாதது என்றால் அது அந்த யேசுநாதர் மேக்கப் தான்.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நடந்த மேக்கப் அது. யேசுநாதரின் அந்த சுருள் சுருளான முடியை தயார் செய்யவே நான்கு ஹேர் டிரெஸ்ஸர்கள் முதல் நாள் இரவு முழுவதும் வேலை பார்ப்பார்கள்.

விக் வைப்பதிலும் தாடி வைப்பதிலும் அப்பாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. தாடி என்றாலே அந்தக் காலத்தில் நெட்டுடன் உள்ள தாடியை தான் வைப்பார்கள்.

ஆனால் அப்பாவோ ஒவ்வொரு முடியாக முகத்தில் ‘கம்’ தடவி ஒட்டுவார்.

தாடி வைக்கவே ஒன்றரை மணி நேரமாகும். அது பார்ப்பதற்கு நிஜ தாடியைப் போலவே இருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்ட அந்த ‘யேசுநாதர்’ படம் போட்டோ ஷூட்டுடன் நின்றுபோனது.

அது ஏன் நின்று போனது என்று ரொம்ப நாள் கழித்து அப்பாவிடமே கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு அசந்து போயிட்டேன்.

அப்பாவிடம் தலைவர் சொன்னது இது தான்.

‘‘ஒண்ணுமில்ல பீதாம்பரம், ஒருவேளை இந்தப் படம் வெளிவந்தால் ஒரு நூறு இருநூறு வருஷம் கழிச்சு வர்ற தலைமுறைக்கு ஜீசஸ் என்றால் என்னுடைய முகம் தான் மனதில் பதிந்துவிடும்.

காரணம், இந்த கெட்டப்பை போஸ்டர், காலண்டர் என்று வருடா வருடம் கொண்டு போய் ஒரு கட்டத்தில் ஜீசஸ் என்றால் அது நான் தான், என் முகம் தான் என்பது போல ஒரு பிம்பம் அடுத்தடுத்த தலைமுறை மனதில் பதிந்துவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

அது மாதிரி ஒரு சூழ்நிலை வந்துவிட்டால் அதைவிட தப்பு வேறு எதுவுமே இல்லை. அதனால் இந்தப் படம் வேண்டாம் என்று சொல்லி அந்தப் படத்தையே நிறுத்திவிட்டார்.

அந்த ஜீசஸ் போட்டோ கூட அவ்வளவாக வெளியில் வரவில்லை. அது வெளியே போக வேண்டாம் என்று தலைவரே சொல்லிவிட்டாராம்’’ என்று சொல்லி அந்தப் புகைப்படங்களைக் காட்டினார் வாசு.

‘திருவிளையாடல்’ படத்தில் சிவன் வேஷம், ‘திருவருட்செல்வர்’ வயதான தோற்றம் போன்றவற்றுக்கு தாடி ஒட்ட எம்.ஜி.ஆரிடம் கேட்டு பீதாம்பரத்தை தன்னுடன் வைத்துக் கொண்டாராம் சிவாஜி கணேசன்.

அதே போல சத்யா ஸ்டுடியோவில் சிவாஜி படப்பிடிப்பு நடந்தால் அவருக்கு எம்.ஜி.ஆரின் பர்சனல் ரூமில் தான் மேக்கப் நடக்குமாம். இது எம்.ஜி.ஆர். அவர்களே போட்ட உத்தரவாம்.

இருவருக்குள்ளும் அப்படியொரு உறவு இருந்திருக்கிறது. அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த வாசு, ஒருமுறை எம்.ஜி.ஆரை தொட்டுப் பார்த்த அனுபவத்தை பற்றி பேசத் தொடங்கினார்.

‘‘எங்க பாட்டி இறந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார் தலைவர். அப்போது அவர் தமிழக முதல்வர். அவரைப் பார்க்க கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் அவர் எப்போதும் கூடுதல் விழிப்புடன் கான்ஷியஸாக இருப்பார்.

யாரிடம் வேணாலும் நீங்க நெருங்கலாம். எம்.ஜி.ஆரிடம் மட்டும் அவ்வளவு எளிதில் யாரும் நெருங்கிவிட முடியாது. எனக்கு எப்படியாவது தலைவரை நெருங்கி தொட்டுவிட வேண்டும் என்று ஆசை.

நான் கூட்டத்தில் அவரை நெருங்கி வலதுபுற கைக்கு மிக அருகே சென்று நின்றுவிட்டேன். அவரை தொடுவதற்காக முயற்சித்தபோது ஒரு கை சடாரென்று என் வயிற்றில் ஒரு இடி இடித்தது.

அவ்வளவு தான் வலி தாங்க முடியல. மூச்சு பிடிச்சுக்கிச்சு. மீண்டும் மூச்சு விட மூன்று நிமிடம் ஆனது. எம்.ஜி.ஆர்.தான் தன் முழங்கையால் ஒரு தட்டுதட்டி விட்டார்.

கூட்டத்தில் அவரை நெருங்குவது யார் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது இல்லையா? அதனால் எப்போதுமே கவனமாக இருப்பது அவர் ஸ்டைல்.

பாட்டியின் உடலுக்கு மாலை போட்டுவிட்டு அப்பாவுடன் அவரது அறைக்குள் சென்றுவிட்டார். அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில், பாட்டி கையில் இருந்து கருவாட்டு குழம்புடன் சோறு சாப்பிட்ட நாட்களை நினைவுகூர்ந்து கண்கலங்கியுள்ளார் தலைவர். அப்பா சொல்லி அதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.

அப்பாவைப் போலவே பெரியப்பாவுடனும் தலைவருக்கு ஒரு நெருக்கம் உண்டு. ஜானகியம்மாவை தலைவர் திருமணம் செய்து கொண்டபோது அதற்கு தலைவருக்கு பெரும் உதவியாக இருந்தவர் எங்கள் பெரியப்பா.

அதையெல்லாம் அவர் எப்போதுமே மறந்தது இல்லை. இது எல்லாம் தான் எங்கள் குடும்பத்துடன் புரட்சித் தலைவருக்கு ஒரு பர்சனல் நெருக்கத்தை ஏற்படுத்தியது’’ என்றார் வாசு.

இப்படி எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தாலும் அதை என்றைக்குமே தவறாக பயன்படுத்த விரும்பாதவர் பீதாம்பரம்.

– அருண் சுவாமிநாதன் 

MGRPitambaramPVasuShivajiGanesanஎம்ஜிஆர்சிவாஜிகணேசன்பிவாசுபீதாம்பரம்புரட்சித்_தலைவர்
Comments (0)
Add Comment