செய்தி:
பீகாரில் தொடர்ந்து பாலங்கள் இடிந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
கோவிந்த் கேள்வி
பீகாரில் கடந்த 15 நாட்களில் மட்டும் 12 பாலங்கள் வரை தொடர்ந்து இடிந்து பெரும் சர்ச்சையையும், வேலை செய்த காண்ட்ராக்டர்களின் தொழில் நேர்த்தியையும் வெளிப்படுத்தி இருக்கிறது.
இந்த சமயத்தில் ஒரே ஒரு கேள்வி. பொதுப்பணித்துறையோ பொதுப்பணித்துறையின் கீழோ, மற்ற துறைகளின் கீழோ, உள்ளாட்சி அமைப்பின் கீழோ செய்யப்படும் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் நடக்கும் வேலைகளுக்கு குறைந்தபட்ச ஒரு கேரண்டி என்ன இருக்கிறது?
ஏகப்பட்ட கமிஷன்களுக்கு இடையிலேதான் இத்தகைய பாலங்கள் கட்டுப்படுகின்றன. அதில் நடக்கும் முறைகேடுகளுக்கு அந்த சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர்கள் பொறுப்பேற்பார்களா? அல்லது இந்த காண்ட்ராக்டில் கமிஷன் வாங்கிய அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ பொறுப்பேற்பார்களா?
வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்திற்கு போயிருக்கிறது. இனிமேலாவது மக்களின் தேவைகளுக்காகவும், நகர்ப்புற விரிவாக்கத்திற்காகவும் உருவாக்கப்படக்கூடிய பாலங்கள் கட்டப்படுவது குறித்து தெளிவான ஒரு உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும்.
இந்த சமயத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட எத்தனையோ பாலங்கள் இன்னும் வலுவான கட்டுமானத்துடன் இன்னும் இயங்கும் நிலையில் இருக்கின்றன.
உதாரணத்திற்கு மதுரை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிற ஒரு மேம்பாலத்தை இடிக்க முயற்சித்து, இறுதியில் அந்த முயற்சி கைவிடப்பட்டு, அதே பாலம் இன்னும் வலுவான கட்டுமானத்துடன் தற்போதும் புழக்கத்தில் இருக்கிறது.
திருநெல்வேலியில் சுலோச்சனா முதலியார் என்கின்ற ஒரு தனிப்பட்ட நபர் முயற்சி எடுத்து தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டிய சுலோச்சனா முதலியார் பாலம் என்கின்ற அந்த பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட அதே பாலம், இப்போதும் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் பயன்பாட்டில் இருக்கிறது.
பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பாலங்களுக்கே இப்படிப்பட்ட ஒரு கட்டுமானத் திறனும், இவ்வளவு கூடுதலான செயல்திறனும் இருக்கும்போது மிக அண்மையில் கட்டப்பட்ட பல பாலங்கள் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ந்து இடிந்து விழுவது எதைப் புலப்படுத்துகிறது?
உச்சநீதிமன்றம் மட்டுமல்ல, அரசுத்துறை அதிகாரிகளும் பாலத்திற்கான ஒப்பந்தப் புள்ளியோடு விண்ணப்பிக்கிற ஒப்பந்ததாரர்களும் யோசிக்க வேண்டிய விஷயம்.